கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தாம்பத்திய உறவு நிகழாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியமான காரணம் மாமியார், மருமகள் இடையேயான வாக்குவாதங்கள்தான். அது எப்படியெல்லாம் ஒரு தம்பதியரை பிரித்து வைக்கும், அவர்களுக்கிடையேயான தாம்பத்திய உறவை தள்ளி வைக்கும் என்பதை, ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
``அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. காதல் திருமணம். இருவருமே நன்கு படித்தவர்கள். அதிலும் அந்தப் பெண், மிகுந்த முற்போக்கு சிந்தனையுடன் இருந்தார். அந்தத் தம்பதியர் மகிழ்ச்சியாக தாம்பத்திய உறவில் ஈடுபட்ட நாள்களைவிட, சண்டை போட்ட நாள்களே அதிகம். `என் மனைவியும் என் அம்மாவும் எப்போ பார்த்தாலும் சண்டை போடுறாங்க டாக்டர். இதனால, எங்களுக்குள்ள செக்ஸ் லைஃப் ரொம்ப பாதிக்கப்படுது' என்று கணவர்தான் முதலில் என்னை சந்திக்க வந்திருந்தார். அவரிடம் பேசிய பிறகு, அவருடைய மனைவியையும் அழைத்து வரச் சொன்னேன். அவரும் வந்தார்.
அவரிடம் பேசிய பிறகுதான், அவருடைய மாமியார் நிறைய மூட நம்பிக்கைகள் கொண்டவர் என்பதும், அதனால் வீட்டிலுள்ளவர்கள் தேவையில்லாத பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. மாமியாருடைய மூடநம்பிக்கைகள் ஒருகட்டத்தில் இவரையும் பாதிக்க ஆரம்பிக்க, `நீங்க செய்றது தப்பு' என்று மாமியாரிடம் எடுத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அந்த மாமியாரோ, `இத்தனை நாள் நான் சொல்றதைக் கேட்டு நீங்க எல்லாரும் நல்லாதானே இருந்தீங்க... இப்போ இவ நம்ம வீட்டுக்கு வந்தப்புறம்தான் இவ்ளோ பிரச்னை... இவ வெளியில இருந்து வந்தவ. அதனாலதான் நம்ம வீட்டுப் பழக்க வழக்கங்களைச் செய்ய மாட்டேங்கிறா...' என்று மகனிடம் அடிக்கடி சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஒருகட்டத்துக்கு மேல், மகனும் அதை நம்ப ஆரம்பித்திருக்கிறார். அம்மாவுடன் சேர்ந்துகொண்டு அவரும், மனைவியை மூன்றாம் நபராக நடத்த ஆரம்பித்திருக்கிறார். ஆனால், இரவுகளில் மட்டும் தாம்பத்திய உறவுக்கு முயற்சி செய்திருக்கிறார். அந்த இடத்தில்தான் மனைவிக்கு கோபம் வந்திருக்கிறது. என்னுடைய நேர்மையான எண்ணங்களுக்கு, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான என் அறிவுக்கு மதிப்பு கொடுக்காத இவர், செக்ஸுக்கு மட்டுமே என்னைத் தேடுகிறார். இதற்கு நான் உடன்படவே மாட்டேன் என்று முடிவெடுத்திருக்கிறார். விளைவு, என்னைத் தேடி வந்தார்கள். அந்தக் கணவரிடம் உண்மையான பிரச்னை அவருடைய அம்மாவிடமிருந்துதான் ஆரம்பித் திருக்கிறது என்பதை எடுத்துசொல்லி அனுப்பி வைத்தேன்.
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்துகொண்டால், ஒரு குடும்பம் உருவாகிறது. அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அந்தக் குடும்பம் விரிவடைகிறது. அந்தப் பிள்ளைகளுக்கு திருமணமானவுடன் மேலும் இரண்டு குடும்பங்கள் உருவாகின்றன. அவர்கள் ஏற்கெனவே இருக்கிற குடும்பத்தில் ஓர் அங்கம் கிடையவே கிடையாது. இந்த இடத்தில்தான் நம் சமூகம் குழப்பிக்கொள்கிறது. `இது எங்கள் குடும்பம். நான், என் கணவர்/ மனைவி, என் மகன் ஆகியோர்தான் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள். மகனுக்குத் திருமணமானதும் மருமகள் எங்கள் வீட்டுக்கு வருகிறாள்' என்று நினைக்கிறார்கள். ஆனால், மகனுக்கு திருமணமானவுடன் அவருடையது இன்னொரு குடும்பம் என்பதை, வீட்டுப் பெரியவர்கள் புரிந்துகொள்வதுமில்லை... ஏற்றுக்கொள்வதுமில்லை. இந்தப் புரிந்துணர்வு இல்லாத குடும்பங்களில், மருமகளை `அவ வெளியில இருந்து வந்தவ' என்றே நடத்துவார்கள். கணவருக்கும் இந்தப் புரிந்துணர்வு இல்லையென்றால், அந்த வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணின் நிலைமை பரிதாபம்தான். நாட்டுக்கு ஜனநாயகம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல அது வீட்டுக்கும் முக்கியம். வீட்டுக்குள் ஜனநாயகம் என்பது, `மகனும் மருமகளும் தனிக்குடும்பம். அதற்குள் மாமியார், மாமனார், நாத்தனார் என்று உறவின் பெயரால் அதிகாரமோ, அடக்குமுறையோ செலுத்தக் கூடாது' என்பதில் தெளிவாக இருப்பதுதான்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
source https://www.vikatan.com/health/sexual-wellness/kamathukku-mariyathai-sex-vs-in-law-problems
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக