Ad

வியாழன், 14 டிசம்பர், 2023

ஃபேஸ்புக் பார்த்து கொண்டிருந்த திமுக கவுன்சிலர்; ஜெர்க் ஆன மேயர் - கோவை மாநகராட்சி கூட்ட ரவுண்ட்அப்!

கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வருகிறார். அப்போது செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சிக் கூட்டம்

அதன்படி 47 ஏக்கரில், அமையவுள்ள செம்மொழி பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவுக்கு ரூ.99.44 கோடி, கோவை மாநகராட்சி உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செம்மொழி பூங்காவுக்குக் குழாய் அமைக்க ரூ.7.83 கோடி, செம்மொழி பூங்கா பல்நோக்கு மாநாட்டு மையம் கட்டுவதற்கு ரூ.25.56 கோடி, கலையரங்கம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைப்பதற்கு ரூ. 6.38 கோடி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகிய மூவரும், “கோவையின் அடையாளமான வ.உ.சி பூங்கா வேண்டும்.” என்ற பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மேயர் கல்பனா அவர்களைப் பார்த்து சிரித்தபடி கடந்து சென்றார்.

அதிமுக போராட்டம்

தீண்டாமை உறுதிமொழியைப் பார்த்து படிக்குபோது கல்பனா சற்று தடுமாறினார். ஒருகட்டத்தில் அவர் அப்படியே ஜெர்க் ஆகி நிற்க, ஆணையர் சிவகுரு பிரபாகரன் அவர்விட்ட வாக்கியத்தை எடுத்துக் கொடுத்தார். முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்திலும் சுமார் 25 தி.மு.க கவுன்சிலர்கள் ஆப்சென்ட் ஆகினர்.

72-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் செல்வராஜ் மழை வெள்ளப்பணியில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு பாராட்டு மழை பொழிந்தார். அவருடன் மேலும் சில தி.மு.க கவுன்சிலர்கள் பிரியாவுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தனர். “தலைவரே இது கோவை மாநகராட்சி. முதல்ல நம்ம பிரச்னைய பேசுவோம்.” என்று சிலர் கமென்ட் அடித்தனர்.

ஃபேஸ்புக் பார்க்கும் கவுன்சிலர்

அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் ஏதோ சொல்ல எழுந்த நிற்க, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், ``உனக்கு இதே வேலையா போச்சு. எல்லாத்துக்கும் பிரச்னை பண்ற. உங்க ஆட்சில என்ன கிழிச்சீங்க. சும்மா உட்காரு.” என்று ஒருமையில் ஏசினார். ஒருபக்கம் ரணகளமாக இருக்க, மறுபக்கம் 42-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பிரவீன்ராஜ் தன் மொபைலில் பிஸியாக ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்க, கூட்டம் முடிந்தது.



source https://www.vikatan.com/government-and-politics/governance/coimbatore-corporation-meeting-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக