Ad

திங்கள், 18 டிசம்பர், 2023

நமக்குள்ளே... 2024-ம் ஆண்டை வரவேற்போம்... பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தி!

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau - NCRB) அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. 2022-ம் ஆண்டுக்கான இந்த அறிக்கை, ‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன’ என்று சுட்டிக்காட்டி, அதிர்ச்சியையும் அச்சத்தையும் மேலும் மேலும் கூட்டியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021-ம் ஆண்டைவிட 2022-ல் 4% அதிகரித்திருக்கிறது. இதில், கணவர்/உறவினர்களால் நடத்தப்படும் வன்முறை, கடத்தல், பெண்கள் மீதான தாக்குதல், பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்கள் முதன்மையாக உள்ளன. இன்றும், தேசம் முழுக்க, வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் 13,479 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மோசடி, பாலியல் சுரண்டல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் என அனைத்துமே முந்தைய ஆண்டை விட 2022-ல் அதிகரிக்கவே செய்திருக்கின்றன.

நமக்குள்ளே...

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் தன் கோர முகம் காட்டி முதலிடத்தில் உள்ளது. நகரங்களில் டெல்லி முதலிடத்தில் தலைகுனிந்து நிற்கிறது. பெரும்பாலும் அனைத்து மாநிலங்கள், நகரங்களில் பதிவுக்கு வந்துள்ள குற்ற எண்ணிக்கையும் ஏறுமுகமாகவே உள்ளது. பெரும்பாலான குடும்பங்கள், பெண் பிள்ளைகளை கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என வீட்டை விட்டு அனுப்பி வைக்கத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில், இப்படி குற்றங்கள் பெருகிக் கொண்டே இருப்பது... அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்தத் தரவுகள் எல்லாம், படித்து கடப்பதற்கல்ல. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு, இது முக்கிய எச்சரிக்கை மணி. குற்றங்களைக் குறைப்பதற்கான சமூக மற்றும் சட்ட நடவடிக்கைகளை அவர்களை எடுக்க வைப்பதற்கான வழிகாட்டி. ஆனால், ஆண்டுதோறும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும் சூழலில், ஆட்சியாளர்களின் மீதான நம்பிக்கை குறையத் தான் செய்கிறது. ‘டிஜிட்டல் இந்தியா’வில் 2022-ம் ஆண்டுக்கான குற்றப் பதிவு தரவுகளே... 2023-ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் அளவுக்குத்தான் இருக்கிறது அரசின் ‘வேகம்’. இந்நிலையில், `எங்கிருந்து குற்றங்களைக் குறைக்கப் போகிறார்கள்?' என்கிற கேள்வி, இயல்பாகவே எழுகிறது.

இதில், தனிநபர்கள், குடும்பங்கள், சமூகமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய படிப்பினையும் உள்ளது தோழிகளே. மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் எந்தக் குற்றத்துக்கும் பலியாகும் இடத்தில் நாம் இருக்கிறோம்; குற்றங்களை செய்யும் இடத்தில் நம்மைச் சுற்றி யிருப்பவர்களில் யாரும் இருக்கலாம். எனவே, பாலியல் வன்முறைகள் முதல் ஆன்லைன் மோசடிகள் வரை விழிப்புடன் இருப்பது முக்கியம். இத்தகைய விழிப்புணர்வை

நம்முடைய குழந்தைகளுக்கும் ஏற்படுத்துவதோடு... எத்தகைய சூழலையும் கடந்து வரும் தைரியத்தையும் சேர்த்தே ஊட்டுவோம். அப்படித்தானே இதுநாள் வரை கடந்திருக்கிறோம் தோழிகளே!

2024-ம் ஆண்டை வரவேற்போம்... நமக்கான பாதுகாப்பு வளையத்தை நாமே பலப்படுத்தி!

உரிமையுடன்

ஸ்ரீ

ஆசிரியர்



source https://www.vikatan.com/editorial/namakkulle-editorial-page-02-01-2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக