விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதை ஈடுகட்டி வருகிறது. குறைந்த இடத்தில் விவசாயம் செய்து சாதிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் டெல்லியில் பீட்டர் சிங் என்பவருக்கு விவசாயம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அவர் டெல்லி மாநகரில் வசித்து வந்ததால் அவரால் பெரிய அளவில் விவசாயம் செய்ய நிலம் இல்லை.
வீட்டிற்கு பின்புறம் சிறிய அளவில் இடம் இருந்தது. அதில் விவசாயம் செய்வது என்று பீட்டர் சிங்கும் அவருடைய மனைவி நீனோவும் முடிவு செய்தனர். நீனோவிற்கு விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. இதையடுத்து இருவரும் சேர்ந்து அக்வாபோனிக் முறையில் தங்களுடைய வீட்டிற்கு பின்புறம் விவசாயம் செய்ய ஆரம்பித்து தற்போது சிறப்பாகவே செய்து வருகின்றனர். இது குறித்து பீட்டர் சிங்கிடம் நாம் பேசிய போது,''2015-ம் ஆண்டு அக்வாபோனிக்ஸ் சாகுபடி குறித்து கேள்விப்பட்டு அது குறித்து கற்றுக்கொண்டோம்.
முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் எங்களது வீட்டு தோட்டத்தில் முதல் யூனிட்டை ஆரம்பித்தோம். அதன் பிறகு மேலும் இரண்டு யூனிட்களை ஆரம்பித்தோம். இப்போது அக்வாபோனிக்ஸ் முறையில் டிரேக்களை வைத்து அதில் கீரைகளை வளர்த்து வருகிறோம். விதைகளை வளர்த்தெடுக்க ஐந்தடுக்கு ரேக்குகள் அமைத்திருக்கிறோம். அதில் ஒவ்வொரு வாரமும் ஓர் அடுக்கில் விதைகள் போடப்படும். ஒவ்வொரு வாரமும் மகசூல் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு பயிரிடுகிறோம். இரும்பு ரேக்குகளில் டிரேக்களை அடுக்கி வைத்து விதைகள் போட்டு பயிரிடுகிறோம். ரேக்கின் கீழ் அடுக்கில் உள்ள டிரேக்களில் முதல் கட்டமாக விதைகள் போடப்படும். ஒரு வாரம் கழித்து அவை சிறியதொட்டிக்கு மாற்றப்படும்.
வேர்கள் ஈரப்பதத்தை உறிஞ்சும் அளவுக்கு வளர்ந்த பிறகு அக்வாபோனிக்ஸ் டவர்களுக்கு அவை மாற்றம் செய்யப்படும். அங்கு அறுவடைக்கு தயாராகும் வரை வளர்க்கப்படும். ஒவ்வொரு வாரமும் கீரை கட்டுகளை அறுவடை செய்கிறோம். கீரைகள் சீரான முறையில் வளர்ச்சியடைய 25 சதவிகித வெப்பநிலையை தொடர்ந்து பராமரித்து வருகிறோம். அதோடு கூடுதல் வெளிச்சத்திற்கு மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம். உரம் மற்றும் சத்துகள் நிறைந்த தண்ணீர் மேலிருந்து தெளிக்கப்படுகிறது. முற்றிலும் இயற்கையான முறையில் கீரைகளை வளர்த்து எடுக்கிறோம்.
இதனால் ஒரு கட்டு கீரையை 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். அதில் எங்களுக்கு மாதம் 30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. இது தவிர வட மாநிலங்களில் இப்போது அக்வாபோனிக்ஸ் குறித்து பொதுமக்களுக்கும் கற்றுக்கொடுக்கிறோம். இதைச் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக மிருதுவான, இயற்கையான, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீரைகளை மக்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.
பீட்டர் சிங் ஆனந்த் அக்வாபோனிக் பார்ம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது கீரைகள் மட்டுமல்லாது புதிதாக பீட்ரூட் உட்பட வேறு சில பசுந்தழைகளையும் தனது அக்வாபோனிக் பார்மில் பயிரிட்டு வருகிறார். பீட்டர் சிங்கின் வீட்டில் உள்ள தோட்டத்துக்கே பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் கீரைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த அக்வாபோனிக்ஸ் முறையில் கீரை, காய்கறிகளை வளர்க்க விரும்புவோர் ஆரம்பக்கட்டத்தில் அதிகம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதனால் இதைப் பற்றி துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தை கேட்டு இதில் ஈடுபடவும்.
source https://www.vikatan.com/agriculture/policy/spinach-farming-organic-farming-in-trays-earn-rs30000-per-month
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக