ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழை வெள்ளத்தால் 40 மணி நேரத்துக்கும் மேலாக ரயிலில் சிக்கி தவித்த 800 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் நிம்மதி அடைய வைத்துள்ளது.
இது சாதாரண மீட்புப் பணி அல்ல., ரயிலுக்கு அருகிலேயே செல்ல முடியாத அளவுக்கு மழை வெள்ளம் ஓடிய நிலையில் உள்ளூர் மக்கள் உணவு, பால் வழங்க, மீட்பு படையினர் மிக கவனமாக திட்டமிட்டு, அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த மீட்பு பணி குறித்து ஒவ்வொரு தகவலையும் தொடர்ந்து தந்து கொண்டிருந்தனர் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அலுவலர்கள். மீட்பு பணி குறித்து நம்மிடம் பேசியவர்கள், "திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17-ஆம் தேதி அன்று பெருமழை பெய்ததால் பல பகுதிகளில் ரயில் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் பாய்ந்து ஓடியது. பல்வேறு பகுதிகளில் ரயில் பாதைகளில் சரளை கற்களை வெள்ள நீர் அடித்து சென்றது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதைக்கு மேல் ஒரு மீட்டர் அளவிற்கு வெள்ள நீர் தேங்கியது. தட்டப்பாறை - மீளவிட்டான் ரயில் நிலையங்களுக்கிடையே 7.47 கி.மீ தூர பாதையில் உள்ள 9 பாலங்களில் அபாயகரமான அளவில் வெள்ளம் சென்று கொண்டிருந்தது. செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே 12.16 கி.மீ தூரத்திற்கு பாதையில் சரளை கற்கள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டிருந்தது.
இதனால் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு இரவு கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயில் கிளம்புவது ஆபத்தானது எனது ரயில் பயணிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களை ரயிலை விட்டு கீழே இறங்க வேண்டாமென்றும் எச்சரிக்கப்பட்டது. ரயிலில் 800 பயணிகள் இருந்த நிலையில், இத்தகவல் ரயில்வே உயரதிகாரிகளுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. 18-ஆம் தேதி மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் அதிகாலை 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள், 2 வேன்கள் மூலம் அருகிலுள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
ஆனால், அதற்குள் வழியில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் ரயிலில் மீதமுள்ள 500 பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக தூத்துக்குடியிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டாலும் அந்த குழுவினரால் சாலையில் ஏற்பட்ட உடைப்புகளால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்துக்கு சென்று சேர முடியவில்லை. ரயில்வே நிர்வாகத்தின் தொடர் வேண்டுகோளால் மீட்பு பணிகளுக்கு செல்ல தயாராக இருந்த தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்களாலும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியவில்லை. தொடர்ந்த மழையினால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் தீவு போல ஆகிவிட்டது.
மோசமான வானிலை, இருள் சூழ்ந்ததன் காரணமாக 18 ஆம் தேதி மாலை மீட்பு பணிக்காக கோவை சூலூரிலிருந்து கிளம்பி வந்த விமானப்படை ஹெலிகாப்டரால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகில் செல்ல முடியவில்லை. இந்த சூழலில் உள்ளூர் மக்கள் ரயில் பயணிகளுக்கு உணவு கொடுத்து உதவினார்கள்.
இறுதியாக டிசம்பர் 18 அன்று இரவு திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையில் ஏழு பாதுகாப்பு படை வீரர்கள், இரண்டு வர்த்தக ஆய்வாளர்கள் லாரி, வேன் என வாகனங்களில் மாறி மாறி ரயில் நிலையம் அருகே சென்று சேர்ந்தனர்.
பின்பு அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மார்பளவு தண்ணீரை கடந்து நிவாரண பொருட்களுடன் ரயில் நிலையம் சென்று அடைந்தனர். பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கினர்.
பின்பு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டனர். வெள்ளை நீரை கடக்க மீட்பு படையினர் நைலான் கயிறுகளை பயன்படுத்தி உதவினார்கள்.
மீட்கப்பட்ட பயணிகள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு முழங்கால் அளவு வெள்ளை நீரை கடந்து வர வேண்டி இருந்தது. நடக்க முடியாத பயணிகள் சிலரை மீட்பு படையினர் தூக்கிக்கொண்டு வந்தனர். வயதானவர்கள் உடல் நலம் குன்றியோர் ஸ்ட்ரெச்சர் மூலம் கொண்டுவரப்பட்டனர். பிறகு தேவைப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்து பேருந்து மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அனைவரும் வந்து சேர்ந்தனர்.
பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 300 பயணிகளில் 270 பேர் மழை வெள்ளம் குறைந்தவுடன் தாமாக அருகிலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். மீதமிருந்த 30 பேர் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு வந்து சேர்ந்தனர். பின்பு அனைத்து பயணிகளும் இரவு 11 மணிக்கு மீட்பு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
இதற்கிடையே ரயில் பயணிகளை மீட்கும் பணி குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் கேட்டறிந்தார்." என்றார்.
மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் தங்களுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
தங்கள் ஊரில் நிறுத்தப்பட்ட ரயிலில் உள்ள பயணிகளுக்கு உதவ வேண்டுமென்று நினைத்த மக்கள், மழையால் தாங்கள் சிரமத்துக்கு ஆளான நிலையிலும் ரயில் நிலையம் அருகிலுள்ள கோயில் அருகே 18-ஆம் தேதி காலை முதல்,19 -ஆம் தேதி மாலை வரை மூன்று வேளையும் உணவு சமைத்து ரயிலுள்ள பயணிகளுக்கும், அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த பயணிகளுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதுபோல் தங்கள் வீட்டு மாடுகளிலிருந்து பால் கறந்து கொண்டு வந்து ரயிலில் இருந்த குழந்தைகளுக்கும் தேவையான பயணிகளுக்கும் கேட்டு கேட்டு கொடுத்துள்ளனர்.
மிகப்பெரிய மீட்புப்பணிதான்.. மத்திய மாநில பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்கள், ரயில்வே மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் குறிப்பாக அப்பகுதி பொதுமக்களுக்கு நன்றியை செலுத்துவோம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/government-and-politics/governance/what-happened-during-rail-passengers-rescue-operation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக