Ad

திங்கள், 18 டிசம்பர், 2023

இறால் ரசம், கனவா மீன் தொக்கு, சிக்கன் பொளிச்சது... கும்பகோணம், சேலம், புதுச்சேரி ‘சூப்பர் ஸ்டார்ஸ்’!

தமிழகம் முழுவதும் பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் 11 ஊர்களில் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார். மதுரை, திருச்சி, கோவை, நெல்லையைத் தொடர்ந்து கும்பகோணம், சேலம், புதுச்சேரியில் சமீபத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு, தங்களது வீட்டில் இருந்தே உணவுகளை சமைத்து வந்து அழகாகக் காட்சிப் படுத்த வேண்டும். பின், அந்த உணவின் சுவை, ஆரோக்கியம், செய்முறை, காட்சிப்படுத்திய விதம், பயன்படுத்திய பொருள்கள் மற்றும் பதம் ஆகியவற்றின் அடிப்படையில் 10 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டு, அடுத்த சுற்றுக்குச் செல்வார்கள். இரண்டாம் சுற்றில் நடுவர் கூறும் விதிமுறைகளையும், கொடுக்கப்பட்ட பொருள்களையும் பயன்படுத்தி போட்டி அரங்கில் சமைக்க வேண்டும். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள், சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பர்.

கும்பகோணம்

கனவா மீன் தொக்கு, வஞ்சிரம் வறுவல், இறால் ஆம்லெட், திருக்கை மீன் புட்டு... இது நாகப்பட்டினம் ஸ்பெஷல்!

கும்பகோணத்தில் நடைபெற்ற, சமையல் திறமையை நிரூபிக்கக்கூடிய இந்த சுவையான மேடையில் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர். ஆரோக்கிய சமையல், பாரம்பர்ய சமையல், குடும்பத் தில் வழி வழியாகப் பின்பற்றப்படும் சமையல், வட்டார சிறப்பு சமையல் உள்ளிட்ட நான்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

முதல் சுற்றில் போட்டியாளர்கள் தங்கள் வீட்டி லிருந்து எடுத்த வந்த உணவு வகைகளில் பீட்ரூட் அசோகா அல்வா, பனங்கிழங்கு பாயசம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு கட்லெட், கும்பகோணம் கடப்பா, ஹோம் மேட் பீட்ஸா, வாழைக்காய் கோலா உருண்டை, வெந்தயக்களி, பருத்தி பால் சாதம், அஞ்சுகறி ரைஸ், மரவள்ளிக்கிழங்கு அடை, பரங்கிக்காய் கூட்டு, கோதுமை ஜாலூர், உளுந்து சோறு, வெந்தய சாதம், சிக்கன் கோலா உருண்டை, ரோஹன் கோஸ், முருங்கைக்கீரை இடியாப்பம், கேரட் இடியாப்பம், கேண்டி சிக்கன், நெல்லிக்காய் லட்டு, ரஸ்க் நட்ஸ், இளநீர் இட்லி என அரங்கம் கமகமத்தது.

கும்பகோணம்

கடற்கரை பகுதியான நாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற உணவுகளான கனவா மீன் வறுவல், கனவா மீன் தொக்கு, வஞ்சரம் மீன் வறுவல், இறால் ஆம்லெட், திருக்கை மீன் புட்டு, திருக்கை மீன் கார குழம்பு ஆகியவை நாசியை இழுத்தன. பிரசவ லேகியம், கம்மஞ்சோறு, தினை பொங்கல், வரகு சாதம், தடுமன் கஞ்சி, பதிமுக குடிநீர், பூண்டு லேகியம், கருப்பு கவுனி அல்வா என மருத்துவ குணமிக்க உணவுகளும் முக்கிய இடம் பிடித்தன.

முதல் சுற்றிலிருந்து செஃப் தீனா தேர்வு செய்த போட்டியாளர்கள், இரண்டாம் சுற்றில் பங்கேற்றனர். கனீஷா பேகம், பரீனா ஜாவிட் இருவரும் முதல் சுற்றிலிருந்தே நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வா கினர். இரண்டாம் சுற்றான நேரடி சமையலில் ராஜேஸ்வரி, தாமரைசெல்வி, ஜெயந்தி ஜெயராம் ஆகிய மூவரும் தேர்வாகி இறுதிப்போட்டிக் குக் காத்திருக்கின்றனர்.

சேலம்

முடவாட்டு கிழங்கு ராஜ்மா கறி, வாழைக்காய் கோலா... இந்த வெரைட்டி போதுமா?!

சேலத்தில் நடைபெற்ற அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களி லிருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் சுற்றில் சிறப்புமிக்க உணவுகள், ஆரோக்கிய உணவுகள், பாரம்பர்ய உணவுகள், வெளிநாட்டு உணவுகள் எனப் பலவிதமான உணவுகள் இடம்பெற்றிருந்தன.

சேலம் உக்களி, மலேசிய நாசிலமாக், சிவப்பரிசி இடியாப்பம், வரகரிசி பாயசம், கறுப்பு கவுனி தயிர் சாதம், வாழைக்காய் கோலா உருண்டை, கறுப்பு கவுனி அல்வா, மொசுமொசுக்குக் கீரை தோசை, வெற்றிலை துவையல், தேங்காய்ப்பால் சாதம், சண்டிக் கீரை பொரியல், மூலிகை குழம்பு, வெற்றிலை கேசரி, பாசிப்பருப்பு பீட்சா, மிளகு மஷ்ரூம் குலாபா, சுரைக்காய் கோப்தா, முடவாட்டு கிழங்கு ராஜ்மா கறி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு கீர், புரொக்கோலி டிக்கி, சிக்கன் பொளிச்சது, ஆப்கானி சிக்கன் கிரேவி, கோக்கனட் சிக்கன் ஃப்ரை, கற்பூரவள்ளி பஜ்ஜி, நஞ்சுண்டான் பிடிச்சலு, வெற்றிலை துவையல் என வெரைட்டிகள் வாவ் சொல்ல வைத்தன.

முதல் சுற்றிலிருந்து இரண்டாவது சுற்றுக்குச் சென்ற 10 பேரில் பானு ரேகா, சரவணன், நந்தினி மற்றும் கோகிலா ஆகிய நால்வரும் சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகினர். மேலும், முதல் சுற்றிலிருந்து ஜன்னத்துல் பிர்தௌஸ், ஆயிஷா துஹைரா ஆகிய இருவரும் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

புதுச்சேரி

சிக்கன் விந்தாலி, திருவாதிரை களி… இது புதுச்சேரி விருந்து!

புதுச்சேரியில் கோலாகலமாக நடைபெற்ற அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உடலுக்கு நன்மை தரக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய உணவுகளைக் காட்சிப்படுத்தினர்.

முதல் சுற்றுக்குப் போட்டியாளர்கள் வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்து காட்சிப்படுத்தியதில் திருவாதிரை களி, உருளைக் கிழங்கு அல்வா, ஜவ்வரிசி உருண்டை, தினை அரிசி கேசரி, மருந்து குழம்பு, சுரைக்காய் பாயசம், மஷ்ரூம் சட்னி, மரவள்ளிக்கிழங்கு போண்டா, வெங்காய பொடி சாதம், சிறுதானிய லட்டு, சாமை அல்வா, சிக்கன் விந்தாலி, இறால் ரசம், சப்பாத்தி - கோவைக்காய், குடமிளகாய் கிரேவி, சிவப்பரிசி பாயசம் உள்ளிட்ட ஏராளமான உணவுகள் நாவூற வைத்தன. அதிலும் 13 வயது போட்டியாளராக கலந்துகொண்ட சிறுமி அஞ்சனா, சிக்கன் கலோடா கபாப், பனீர் தொக்கு பிரியாணி, இளநீர் பாயசம், சிக்கன் குழம்பு என விதவிதமாக சமைத்து, பெரியவர் களுக்கே டஃப் கொடுத்தார்.

செஃப் தீனா முதல் சுற்றில் தேர்வு செய்த 10 போட்டியாளர்கள் இரண்டாவது சுற்றான நேரடி சமையலில் பங்கேற்றனர். புனிதா, உஷா கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாவது சுற்றில் பங்கேற்ற நாராயணசாமி, பிரேமா, ஷப்னா மூவரும் இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னையில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருள்கள் காத்திருக்கின்றன.

சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி

நீங்களும் கலந்துகொள்ள..!

சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் அனைத்துப் பாலினத்தவரும் பங்கேற்கலாம். கலந்துகொள்ள விரும்புபவர்கள் vikatan.com/sss என்ற லிங்கில் பதிவு செய்யலாம். அல்லது 97909 90404 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘SSS’ என்று மெசேஜ் அனுப்பியும் பெயரைப் பதிவு செய்யலாம்.

சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி


source https://www.vikatan.com/editorial/contests/samaiyal-super-star-contest-in-puducherry-salem-and-kumbakonam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக