விருதுநகரில் போலீஸ் அதிகாரியின் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையைச் சேர்ந்தவர் கவிதா. விருதுநகர் மாவட்ட காவல்துறையில் குழந்தைகள் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். கணவரைப் பிரிந்து மகளுடன் குல்லூர்சந்தையில் தனியே வசித்து வரும் இவர், இன்று காலை வழக்கம்போல பணிக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு கிளம்பியுள்ளார். தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த எஸ்.எஸ்.ஐ கவிதா, வீட்டினுள் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 16.5 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ஆகியவை மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், எஸ்.எஸ்.ஐ வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வுக்குட்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர். விருதுநகரில் பட்டப்பகலில் போலீஸ் அதிகாரியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/crime/theft-at-police-official-house-in-virudhunagar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக