Ad

ஞாயிறு, 5 ஜூலை, 2020

ஜம்மு - காஷ்மீர் துப்பாக்கிச்சூடு... ஒரு சிறுவனின் புகைப்படம் எழுப்பும் கேள்விகள்!

ஒரே ஒரு புகைப்படம்கூட, உலகில் நிகழும் போர்களின், வன்முறைகளின் கொடூரத்தை மிக அழுத்தமாக உணரவைக்க வல்லது. அதுவும் மென்மையான குழந்தைகள், இந்தக் கொடூரங்களின் சாட்சியாக நிற்கும் படங்கள், அற்பமான மனிதர்களின் கோரமான முகங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். அப்படியான ஒரு புகைப்படம்தான் சமீபத்தில் வெளியானது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் நிகழ்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவரான பஷீர் அஹ்மத் கான் உயிரிழந்தார். இறந்த அவரது உடல்மீது, அவரின் மூன்று வயது பேரன் அமர்ந்து அழும் அந்தப் புகைப்படம், பார்ப்பவர்களையெல்லாம் கலங்கச்செய்தது.

கொரோனா பரபரப்பில் இருக்கும் இந்தியாவின் கவனத்தை மீண்டும் ஜம்மு-காஷ்மீர் பக்கம் திருப்பியிருக்கிறது இந்தப் புகைப்படம். ஒருபக்கம், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து நடக்கும் பயங்கரவாதிகள் தாக்குதலும், தீவிரவாதிகள் வேட்டையும், ஓய்வின்றிக் கேட்கும் குண்டுகளின் சத்தமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உடன் சில கேள்விகளும். மறுபக்கம், இந்தச் சிறுவனின் புகைப்படத்துக்கு பா.ஜ.க பிரமுகர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் கமென்ட், தேசம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

பஷீர் அஹ்மத் கான் உடல்

ஸ்ரீநகரில், கடந்த வாரத்தில் மட்டும் இப்படி 4 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில், கடந்த வாரத்திலிருந்து 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல, கடந்த ஐந்தரை மாதங்களில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் பதர் மற்றும் அன்சார் கஸ்வதுல் ஹிந்த் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் அடங்குவர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தொடர் பயங்கரவாதிகள் தாக்குதலில், சமீபத்திய நிகழ்வு கடந்த வார ஞாயிறு (28.06.2020) காலை நடந்திருக்கிறது. புல்வாமா பகுதியில் சக்திவாய்ந்த ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு சிஆர்பிஎப் வீரருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதல் போலவே, வீரர்கள் செல்லும் வாகனத்தின்மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதேபோல மற்றொரு வெடிகுண்டு, கடந்த மே மாதம் செயலிழக்கப்பட்டது.

இப்படி ஜம்மு - காஷ்மீர் லடாக் பகுதியில், கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழலே நிலவிவருகிறது. இந்தப் பகுதிகள் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டபோது, பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த இந்த முடிவு உதவி செய்யும் என மத்திய அரசின் சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், அப்பகுதியில் நம் வீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பெரும் அச்சுறுத்தலில் இருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

சிறுவனின் புகைப்படம் வெளியான சோபூர் தாக்குதலில், சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவருமான, பஷீர் அஹமது கான் என்பவரும் உயிரிழந்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில், சோபூர் எனும் நகரில், சிஆர்பிஎஃப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது திடீரென அப்பகுதியிலிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் நான்கு சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

குழந்தையை சமாதானப்படுத்தும் வீரர்

சிறுவனும் உயிரிழந்த அவனது தாத்தாவும் ஸ்ரீநகரிலிருந்து ஹண்ட்வாரா நோக்கி காரில் சென்றபோது, சிஆர்பிஎஃப் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அவர்கள் சென்ற காரும் சிக்கியுள்ளது. அப்போது, தீவிரவாதிகள் அவரைச் சுட்டதாகத் தெரிகிறது. துப்பாக்கித் தாக்குதலிலிருந்து இந்த மூன்று வயது குழந்தையை வீரர்கள் மீட்டுள்ளனர். இந்தக் குழந்தை, இறந்த தனது தாத்தாவின் உடல்மீது அமர்ந்து அழும் புகைப்படங்களும், வீரர்கள் குழந்தையைச் சமாதானப்படுத்த முயலும் புகைப்படங்களும் காரில் அழைத்துச்செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் கவலையடையச் செய்துள்ளது. குழந்தை பத்திரமாக அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளர் சாம்பித் பத்ரா, இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, `புலிட்சர் லவ்வர்ஸ்?' என்ற வரிகளோடு பகிர்ந்திருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்தியப் பிரபலங்கள் பலர் நேரடியாக அவரை கேள்வி கேட்க, ட்விட்டர் வலைதளத்தில் வார்த்தைப் போர் வெடித்தது. சாம்பித் பத்ரா ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் செய்தி, இரக்கமற்ற அவரது மனநிலையைக் காட்டுவதாகவும், இப்படியான ஒரு துயரத்தில்கூட அவர் அரசியல் செய்வதாகவும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாம்பித் பத்ரா

பத்திரிகை புகைப்படத் துறையில் மிக உயரிய விருது புலிட்சர். 2019-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது, காஷ்மீரைச் சார்ந்த மூன்று புகைப்படக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு திடீரென ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு, மொத்த மாநிலமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மக்களின் எல்லா செயல்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டு, அரசியல் தலைவர்கள் சிறையெடுக்கப்பட்டு, எமெர்ஜென்சி நிலை போல அங்கு மாநிலம் முடக்கப்பட்டது. இது, ஜனநாயகமற்ற செயல் என உலகம் முழுக்க பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த இக்கட்டான சூழலில், ஜம்மு-காஷ்மீரின் நிலையைப் புகைப்படங்களாக உலகத்துக்குக் காட்டியவர்கள் என்ற முறையில், மூவருக்கு புலிட்சர் விருது கொடுக்கப்பட்டது.

Also Read: 1846 முதல் 2019 வரை! - காஷ்மீர் பிரச்னையில் நடந்தது என்ன? #VikatanInfographics

மத்திய பா.ஜ.க அரசின் ஆதரவாளர்கள், இதைப் பாராட்டவோ ரசிக்கவோ இல்லை. அதன் வெளிப்பாடுதான் சாம்பித் பத்ராவின் பதிவு. காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் ஜிஹாதிகள் கொலை செய்கிறார்கள், அதை ராணுவம் தடுக்கிறது. ராணுவத்தின் இந்த வீரச் செயல்கள் எல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா என்பதே அவரது பதிவின் அர்த்தம். துயரமான ஒரு நிகழ்வில், இப்படி காழ்ப்புணர்வுடன் இந்தச் செய்தியைப் பதிவிட்டிருக்கும் சாம்பித் பத்ராவிற்குதான் பெரும் கண்டனங்கள் எழுந்தன.

அதேசமயம், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றியும் பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. தேசிய ஊடகங்கள், சிஆர்பிஎப் வீரர்களின் வீரதீரச் செயலை பாராட்டுகின்றன. ஆனால் பல காஷ்மீர் ஊடகங்கள், இறந்தவரின் குடும்பம் தெரிவிக்கும் சில சந்தேகங்களை வெளியிட்டுள்ளன.

Relatives grieve near the body of civilian Bashir Ahmed Khan, inside his residence on the outskirts of Srinagar

இறந்தவர் பயணம் செய்த காரில் எந்த புல்லட் தடயங்களும் இல்லை என்றும், காரிலிருந்து அவர் எப்படி வெளியே வந்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், சிஆர்பிஎஃப் வீரர்களே சிறுவனை இறந்தவரின் உடை மீது அமரவைத்து புகைப்படம் எடுத்ததாகவும் அச்சிறுவனின் உறவினர்கள் புகார் எழுப்புகின்றனர். போலீஸாரே சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டதற்காகவும் கண்டனங்கள் வலுக்கின்றன.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், தெருவுக்குத் தெரு வீட்டுக்கு வீடு சிசிடிவி, அனைவரின் கையிலும் ஆன்ட்ராய்டு போன், ஆயிரம் யூடியூப் சேனல்கள், நூற்றுக்கணக்கான ஊடகங்கள் என இருந்தாலும், ஐயம் திரிபர உண்மையை அறிவது மட்டும் எட்டாக் கனியாகத்தான் இன்றளவும் உள்ளது. நம்மால் செய்ய முடிந்த, செய்யவேண்டிய ஒரே கடமை, மனிதநேயத்துடன் கேள்வி எழுப்புவது மட்டுமே. எங்கள் ஜம்மு-காஷ்மீரில் உண்மையில் என்ன நடக்கிறது?



source https://www.vikatan.com/government-and-politics/news/a-questions-over-kashmiri-child-sitting-on-bullet-riddled-body-of-his-grandfather

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக