Ad

ஞாயிறு, 5 ஜூலை, 2020

`எனி டெஸ்க்' மூலம் ஏமாற்றப்படும் பெண்கள்! - ஏர்வாடியில் சிக்கிய `நெட் கஃபே' கும்பல்

ஏர்வாடியில் கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் வெளிநாட்டில் பணிக்குச் சென்றுள்ளவர்களின் மனைவிகளை ரகசிய படமெடுத்து, மிரட்டி பணம் பறித்த 'நெட் கஃபே' உரிமையாளர் உள்ளிட்ட இருவரை கீழக்கரை மகளிர் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Representational Image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பிரத்யேகப் கைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளார். இந்த எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக சமூக விரோத குற்றங்களில் ஈடுபட்டு வரும் கும்பல்கள் சிக்கி வருகின்றன. இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் கும்பல்கள் அடுத்தடுத்து சிக்கி வருவது மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திவந்தது.

கடந்த 3 நாள்களுக்கு முன் கீழக்கரையில் பெண்களைக் குறிவைத்த கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானது. இந்நிலையில், ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், எஸ்.பி-யின் பிரத்யேக எண்ணில் ஏர்வாடி பகுதியிலும், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாகவும், அதில் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சகாபுதீன்

அப்பெண், ``ஏர்வாடியைச் சேர்ந்த பாதுஷா, அவரது ஹாஹியும் நடத்தி வரும் `ஏர்பாத் நெட் கஃபே' என்ற செல்போன் கடை நடத்தி வருகின்றனர். அங்கு, அரசு சான்றிதழ் பெறுவதற்கு மற்றும் பாஸ்போர்ட், விசா பெறுதல், இணையதள வங்கிச் சேவை, பணப் பறிமாற்றம் ஆகிய பணிகள் செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் சேவைகளைப் பெற வரும் பெண்கள் மற்றும் வெளிநாட்டில் கணவர் வேலை செய்யும் நிலையில் உள்ள பெண்களின் செல்போனில் `Any desk' என்ற செயலியை ரகசியமாகப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் அப்பெண்களின் அந்தரங்கங்களைப் படம் பிடித்து, அதைக் காட்டி மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்'' என விசாரணையில் தெரிவித்தார்.

Also Read: `முதலீட்டுக்கு ஏற்ப பணம்; வசூலான ரூ.100 கோடி!' -ராமநாதபுரம் அரசுப் பள்ளி ஆசிரியரின் `சதுரங்க வேட்டை’

மேலும், அக்கடையில் வேலை பார்த்து வரும் சகாபுதீன் என்பவர் அடிக்கடி தன்னை தொடர்புகொண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிவித்தார். அதன் பேரில் தன்னுடன் பல முறை உல்லாசமாக இருந்ததாகவும், அப்போது தன்னை ஆடைகள் இன்றி வலுக்கட்டாயமாகப் போட்டோ எடுத்ததாகவும் புகார் கூறினார். அதேபோல், தான் வேலை பார்த்து வரும் கடை முதலாளியிடம் வாங்கிய கடனை அடைக்க பணம் கேட்டும், அப்படித் தரவில்லை எனில், எனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். அந்தப் படங்களை பாதுஷா, ஹாஜி மற்றும் சகாபுதீன் ஆகியோர் கூட்டு சேர்ந்து வெளிநாட்டில் உள்ள ஆலிம் என்பவருக்கு அனுப்பியதுடன், அவர் மூலம் ஏர்வாடியில் உள்ள சிலரது வாட்ஸ் அப்புக்கும் அனுப்பியுள்ளனர். இதேபோன்று ஏராளமான பெண்களை மிரட்டி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள், இதை வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்’’ எனவும் விசாரணையின்போது கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாதுஷா.

இதையடுத்து எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்ட சமூக வலைதளப் பிரிவு உதவியுடன் கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் யமுனா, 'ஏர்பாத் நெட் கஃபே' கடையில் விசாரணை செய்து பாதுஷா மற்றும் சகாபுதீன் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும், அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இவற்றை போலீஸார் மேல் விசாரணைக்காகத் தடய ஆய்வகத்துக்கு அனுப்ப உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிமையில் உள்ள பெண்கள், ஆதரவற்ற பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் இது போன்ற பாலியல் மிரட்டல் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/crime/ramnad-police-arrests-2-from-ervadi-net-cafe-over-sexual-harassment-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக