விஜய் யேசுதாஸ்... இசையில் ஆர்வம் இருக்கும் எல்லோருக்கும் இந்தப் பெயர் மிகவும் நெருக்கம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏகப்பட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். தன் அப்பா மிகப்பெரிய பாடகராக இருந்தாலும் தனக்கான முத்திரையைப் பதித்தவர். இந்த லாக் டெளனில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தவரிடம் சின்ன உரையாடல்.
``மலையாளத்துல `அவன்'ங்கிற படத்துல கேமியோ, `மாரி'ல வில்லன், `படைவீரன்'ல ஹீரோ, இப்போ 3டி படம் அதுவும் பல மொழிகள்ல. இந்த வளர்ச்சி திட்டமிடுறதா?"
``பிளான் எல்லாம் பண்ணலை. ஸ்பெயினுக்கு ஒரு வெக்கேஷனுக்காகப் போயிருந்தோம். அப்போதான் தனுஷ் சார் எனக்கு போன் பண்ணி, `நீ இந்தப் படத்துல வில்லனா நடிக்கணும்னு டைரக்டர் சொல்றார்'னு சொன்னார். `எனக்கு நடிப்புல எந்த அனுபவமும் இல்லை. நான் எப்படி உங்களுக்கு வில்லனா பண்ணமுடியும்'னு கேட்டேன். `எனக்கும் இது எப்படி வொர்க் அவுட் ஆகும்னு தெரியலை. டைரக்டர் பாலாஜிகிட்ட பேசுங்க'ன்னு அவர் மனசுல இருக்கிறதை ஓப்பனா சொல்லிட்டார். அப்புறம் சென்னை வந்தவுடன் பாலாஜி எனக்குப் புரியவெச்சார். சரின்னு லுக் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். அவருக்குப் பிடிச்சிருந்தது. அப்படிதான் நான் `மாரி'க்குள்ள வந்தேன். நடிக்கிறதுக்கு நிறைய டிப்ஸ் எல்லாம் கொடுத்து தனுஷ் சார் ரொம்ப உதவி பண்ணார். அப்படி ஆரம்பிச்ச நடிப்பு கரியர் இப்போ அப்படியே போயிட்டிருக்கு."
``தாத்தா நாடகக் கலைஞராக இருந்தாலும் உங்களுக்கு நடிக்க சில பயிற்சிகள் எல்லாம் தேவைப்பட்டிருக்கும். என்னெல்லாம் பண்ணீங்க?"
``நடிப்பு என் ரத்தத்துல இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனா, நம்ம அந்த கேரக்டருக்காக சில மெனக்கெடல்கள் பண்ணிதான் ஆகணும். `படைவீரன்'ல என் கேரக்டர் சோம்பேறி. ஊர்ல பிரச்னை பண்ணிட்டு இருக்கிற நபர். சோம்பேறியா காட்டணும்னு அப்போ நான் பண்ணிட்டு இருந்த வொர்க் அவுட், கடைப்பிடிச்சுட்டு இருந்த டயட் எல்லாம் விட்டுட்டேன். படம் பார்த்திருப்பீங்க. திருவிழா நடக்கும். அதே திருவிழாவுக்கு நான் ஒரு வருஷம் கழிச்சு போலீஸ் யூனிஃபார்ம்ல வர்ற மாதிரி இருக்கும். அதையும் சேர்த்து அந்த நாளே எடுக்கணும்னு சொல்லிட்டார் தனா. அதனால அதுக்கு ஒரு வாரத்துல இருந்தே என் உடம்புல மாற்றம் கொண்டுவரணும்னு கொச்சின்ல இருந்து என் ட்ரெயினரை வர வெச்சு வொர்க் அவுட் பண்ணி ஃபிட் பண்ணேன். அந்த வாரத்துக்குள்ள நாலஞ்சு கிலோ குறைச்சுட்டேன். அப்புறம், `பேட்ட' படத்துல நவாஸுதின் சார் அண்ணனா நடிச்ச முத்துக்குமார் நடிப்பு சொல்லிக்கொடுக்கிறவர். அவர்கிட்ட ஒரு வாரம் கண்ல எப்படி எமோஷன் கொண்டு வர்றது, கண்ல தண்ணீர் வரவைக்கிறதுன்னு ஒரு வாரம் ட்ரெயினிங் அனுப்பினார் தனா."
``பாடகரா இருந்தால் ஐஸ்க்ரீம் மாதிரி குளிரான உணவுகளை சாப்பிடக் கூடாது, மழையில நனையக் கூடாதுனு சில விஷயங்கள் எல்லாம் இருக்கு. ஆனா, நடிகராகிட்டா இதெல்லாம் பார்க்க முடியாதே..."
``ஆமாங்க. `படைவீரன்' படத்துலயே மழையில நனையிற மாதிரி நிறைய காட்சிகள் இருந்தன. நடிகரான பிறகு மட்டுமல்ல; நான் பாடகனா என்னுடைய கரியர் ஆரம்பிச்சதில இருந்தே இந்த விஷயங்கள்ல அவ்ளோ சென்சிட்டிவா யோசிக்கிற நபர் கிடையாது. ஆனா, அப்பா இந்த மாதிரி விஷயங்கள்ல ரொம்ப சென்சிட்டிவ். எனக்கு இன்னும் கொஞ்சம் வயதாகும்போது பத்திரமா இருக்கணும். ஒரு குரலை அதே மாதிரி பாதுகாக்கிறது சுலபமான வேலை கிடையாது. எனக்கு அப்பா குரல் மாதிரி இருக்கிறதுனால கொஞ்சமா சளி பிடிச்சாக்கூட அது என் குரல்ல தெரிஞ்சுடும். அதனால ரொம்ப நேரம் ஏசியில உட்கார மாட்டேன். தூங்கும்போதுகூட காதுக்கு பஞ்சு வெச்சுட்டுதான் தூங்குவேன். ரொம்ப சென்சிட்டிவா இருந்தாலும் நம்ம லைஃப் ஸ்டைல்ல கஷ்டம்தான். நிறைய ஊருக்கு போறோம். அங்கிருக்கிற க்ளைமேட், சாப்பாடு... இதெல்லாம் எல்லா நேரத்துலேயும் நமக்கு சாதகமாவும் இருக்காது. அதனால, நம்மளால முடிஞ்சவரை அதை கவனமா பார்த்துக்கிறது முக்கியம்."
``மன அழுத்தம் ஏற்பட்டால் அதுல இருந்து வெளியே வர நீங்கள் கடைப்பிடிக்கிற விஷயங்கள் என்ன?"
``எனக்கு வொர்க் அவுட் பண்ணலைனா அன்னிக்கு முழுக்க ரொம்ப சோம்பேறித்தனமா இருக்கும். அதே மாதிரி, விளையாடுறது. டென்னிஸ், கிரிக்கெட், பேட்மின்டன் இதெல்லாம் விளையாடினால் என் மனசு ரொம்ப சுறுசுறுப்பா இருக்கும். எப்போ நான் ஊருக்கு கிளம்பினாலும் பேட்மின்டன் ராக்கெட் எடுத்துட்டுத்தான் போவேன். அப்பாவுக்கு டென்னிஸ் விளையாட பிடிக்கும். அவர் என் வயசுல இருக்கும்போது அதுதான் அவருடைய ஸ்ட்ரஸ் பஸ்டர். ரெக்கார்டிங் எல்லாம் விட்டுட்டு டென்னிஸ் ஆட போயிருக்கார். கொச்சின்ல ஒரு கிரிக்கெட் கிட் பேக்கும் சென்னையில ஒண்ணும் வெச்சிருக்கேன். கேரளாவுல C3 (Celebrity Cricket Club)னு ஒரு கிரிக்கெட் டீம் இருக்கு. அதுல நான், நிவின் பாலி, குஞ்சாக்கோ போபன், இந்திரஜித், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன்னு எல்லோரும் இருக்கோம். அதே மாதிரி சென்னையில MAS (Madras All Stars)னு ஒரு டீம் இருக்கு. இதுல சாந்தனு, அசோக் செல்வன், கலையரசன், தமன், காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, அருண்ராஜா இவங்கெல்லாம் இருக்காங்க. எந்த கிரிக்கெட் மேட்ச் வந்தாலும் போய் விளையாடிட்டு வருவோம்.''
``இயக்குநர் சச்சியுடைய இழப்பு அதிர்ச்சிகரமா இருந்தது. அவருக்கும் உங்களுக்கும் பழக்கம் இருந்ததா?"
``இயக்குநரா வளர்ந்து வந்துகிட்டிருந்தார். அவர் ஸ்கிரிப்ட் பண்ண படங்கள்ல நான் பாடியிருக்கேன். ஒருத்தர் நம்மளை விட்டு போகும்போதுதான் அவங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் நமக்குத் தெரிய வருது. அவருடைய `அய்யப்பனும் கோஷியும்' படத்தைத் தமிழ், தெலுங்கு, இந்தியில ரீமேக் பண்ணப்போறாங்கன்னு கேள்விப்பட்டேன். இயக்குநருக்கான சமர்ப்பணமா அந்தந்த மொழிகள்ல நல்ல ரீமேக்கா உருவாகும்னு நம்புவோம்."
``அலெக்ஸாண்டர் பாபு அவரோட நிகழ்ச்சில உங்க அப்பாவை கொஞ்சம் கலாய்ச்சிருந்தாரே... பார்த்தீங்களா?"
``எனக்கு அவருடைய நிகழ்ச்சி ரொம்பப் பிடிக்கும். நல்லா பாடுறார், ரிதத்தைப் பிடிச்சு மியூசிக் பண்றார். அதுகூட ஸ்பூஃபும் சேரும்போது அந்த நிகழ்ச்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குது. எதுவும் தெரியாமல் வெறுமனே ட்ரோல் பண்ணா அதை மக்கள் ஏத்துக்கமாட்டாங்க. `மாசி மாசம்', `சாமி சரணம்'னு அப்பா பாடின இந்த ரெண்டு பாடலையும் அவர் கலாய்ச்சதை அப்பாக்கிட்ட காட்டினேன். அவர் செமயா என்ஜாய் பண்ணி சிரிச்சார்."
Also Read: ``இசை இருக்கும்... இடையில் கொஞ்சம் அரசியலும் இருக்கும்!'' - நாடக மேடையேறும் `வொண்டர்லேண்ட்' அலெக்ஸ்
source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-vijay-yesudas-speaks-about-his-cinema-career
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக