Ad

புதன், 22 ஜூலை, 2020

கொரோனா : `கடவுள் நினைத்தால் எல்லாம் மாறும்!’ - 3 வது முறையாக பிரேசில் அதிபருக்கு பாசிட்டிவ்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 கோடியைத் தொட்டுவிட்டது. வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 22,31,871 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 82 லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பிரேசிலில் கொரோனா தீவிரமாகப் பரவ அதிபரின் அலட்சியம்தான் காரணம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

கொரோனா

கொரோனா பரவத்தொடங்கியது முதல் அதனை `சிறிய காய்ச்சல்’ என்றே பிரேசில் அதிபர் கூறி வந்தார். மேலும் பொது இடங்களுக்குச் செல்லும்போதும் மாஸ்க் அணியாமல் மக்கள் கூட்டத்தில் நின்று உரையாற்றினார். இவரின் செயல் சர்வதேச அளவில் பெரும் விவாத பொருளாக மாறியது. இந்நிலையில், கடந்த ஜூலை 7-ம் தேதி பிரேசில் அதிபர் பொல்சனாரோவுக்கு கொரோனா இருப்பது முதன்முறையாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக அலுவலக வேலைகளைக் கவனித்து வந்தார்.

Also Read: கொரோனா பாசிட்டிவ்: பத்திரிகையாளர்கள் முன் மாஸ்கைக் கழட்டி சர்ச்சையில் சிக்கிய பிரேசில் அதிபர்

அப்போது, ‘அதிபர் தனது சிகிச்சையில் எந்தவிதமான சிக்கல்களையும் சந்திக்கவில்லை’ என அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டிருந்தது. பின்னர், அவர் தனிமையில் மிகவும் சிரமப்படுவதாகவும் அலுவலக வேலைகளை முறையாகக் கவனிக்க முடியவில்லை என்பதால் தன் உடல் சற்று குணமானதும் மீண்டும் கொரோனா சோதனை செய்யவிருப்பதாக ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார் அதிபர். இதனையடுத்து கடந்த வாரம் அவருக்கு செய்யப்பட்ட சோதனை முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளன. இதனால் சற்றே கலக்கத்திலிருந்துள்ளார் அதிபர் பொல்சனாரோ.

பிரேசில் அதிபர்

பின்னர், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் வீடியோ மூலம் தன் ஆதரவாளர்களுடன் பேசிய அதிபர், “நான் மூன்றாவது முறையாக இன்றும் கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். இதன் முடிவுகள் நாளை (நேற்று) வெளியாகும். அதற்காகத்தான் காத்திருக்கிறேன். அதில் கடவுள் நினைத்து நெகட்டிவ் என முடிவுகள் கொடுத்தால் அனைத்து விஷயங்களும் மாறி, பழைய நிலைக்கே வந்துவிடும்” எனப் பேசியுள்ளார். அவர் கூறியதை போலவே நேற்று முடிவுகள் வந்துள்ளது அதில், அதிபருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியாகி மூன்றாவது முறையாக பாசிட்டிவ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸிலிருந்து குணமாகி விரைவில் பொது வெளிக்கு வர வேண்டும் எனக் காத்திருக்கும் அதிபருக்குத் தொடர்ந்து பாசிட்டிவ் முடிவுகள் வருவதால் அவர் இன்னும் கொரோனாவிலிருந்து முழுமையாகக் குணமாகவில்லை என்பது தெளிவாகியுள்ளது. கொரோனாவுக்காக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மலேரியாவுக்கு அளிக்கும் ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளையே அதிபர் எடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல்நிலை பாதிப்பு, கொரோனா, தனிமை இவை அனைத்தையும் சந்தித்து வரும் பிரேசில் அதிபர் மனவேதனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Also Read: கொரோனா:`தனி அறை; வீடியோ கால்; ரகசியக் குழு!’ - பிரேசில் அதிபரின் முதல் வாரம்



source https://www.vikatan.com/news/international/brazil-president-tests-covid-19-positive-for-3rd-time

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக