Ad

புதன், 22 ஜூலை, 2020

சென்னை: 2-வது மனைவி மீதும் சந்தேகம்; கருக்கலைப்பு! - கொலை வழக்கில் சிக்கிய வாட்ச்மேன்

சென்னை எம்.கே.பி.நகரைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார் (31). இவருக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த ரமணி (35) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. ராஜ்குமார். வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். தன்னைவிட மூத்தவரான ரமணியை ராஜ்குமார் 2-வதாக திருமணம் செய்திருந்தார். ரமணி, சில மாதங்களுக்கு முன் கர்ப்பம் அடைந்தார். மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவரின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளருவது தெரியவந்தது. ஆனால், திடீரென கரு கலைந்துவிட்டது. இந்தச் சூழலில் கொரோனா ஊரடங்கால் சார்லஸுக்கு வேலை இல்லை. அதனால், வருமானம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தார்.

ரமணியுடன் சார்லஸ்

ரமணியின் நடத்தையில் சார்லஸ் அடிக்கடி சந்தேகமடைந்து அவருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டிலேயே இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் ரமணி, தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதன்காரணமாகத் தனியாக சார்லஸ் இருந்தார். வேலை இல்லாததால் சாப்பாட்டிற்குகூட வழியில்லாமல் பட்டினியாகக் கிடந்தார். ரமணியை வீட்டுக்கு அழைத்தும் அவர் வரவில்லை. அதனால், மனைவி மீது சார்லஸுக்கு கோபம் வந்தது. அதனால் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார்.

இதையடுத்து சார்லஸ், மூர்மார்க்கெட்டிற்கு சென்று அரிவாள் வங்கியதாகத் தெரிகிறது. பின்னர் மனைவியை சமரசப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார். நேற்றிரவு இருவரும் வீட்டில் தூங்கினர். அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சார்லஸ், அரிவாளை எடுத்து ரமணியை சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில், ரத்த வெள்ளத்தில் ரமணி உயிரிழந்தார். பின்னர் ரத்தக்கறை படிந்த அரிவாளோடு சார்லஸ் தப்பினார்.

கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்

இதுகுறித்து தகவலறிந்ததும் எம்.கே.பிநகர் உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீஸார், ரமணியின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு சடலமாகக் கிடந்த ரமணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவியின் உதவியால் ரமணியைக் கொலை செய்தது சார்லஸ் என்பதைக் கண்டறிந்தனர். பின்னர், அவரை போலீஸார் தேடிவந்தனர். பின்னர் அரிவாளோடு சென்னையில் சுற்றித் திரிந்த சார்லஸை, போலீஸார் பிடித்தனர். எம்.கே.பிநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட சார்லஸிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள சார்லஸ், வாட்ச்மேனாக வேலை பார்த்துவருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பவித்ரா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. பவித்ரா மீதும் சார்லஸ் சந்தேகமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனால் குழந்தையை அழைத்துக்கொண்டு பவித்ரா, சார்லஸை பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகுதான் 2-வதாக ரமணியைத் திருமணம் செய்துள்ளார் சார்லஸ்.

Also Read: சென்னை: `அம்மாவை வெட்டாதப்பா!' - தந்தையிடம் இருந்து தாயைக் காப்பாற்றிய சிறுமி

சார்லஸிடம் போலீஸார் விசாரணை

ரமணியின் நடத்தையிலும் சார்லஸ் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ரமணியின் சகோதரரின் நண்பனிடம் ரமணி பேசுவதை தவறாகக் கருதியுள்ளார். சார்லஸின் டார்ச்சரால் ரமணி மனவேதனையடைந்துள்ளார். ரமணியின் கர்ப்பம் கலைந்ததற்குகூட அவர் மீது சார்லஸ் சந்தேகப்பட்டுள்ளார். அதனால்தான், ரமணியும் சார்லஸை விட்டு பிரிந்து சென்றுள்ளார். ஆனால், அவரை சமரசப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து ரமணியை சார்லஸ் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சார்லஸ் மீது 2017-ம் ஆண்டு விபசார வழக்கு பதிவாகியுள்ளது. விக்கி என்பவருடன் சேர்ந்து சார்லஸ் விபசார புரோக்கராகச் செயல்பட்டு வந்துள்ளார்" என்றனர்.

சந்தேக நோயால் பாதிக்கப்பட்ட சார்லஸ், மனைவியைக் கொலை செய்த சம்பவம் எம்.கே.பி நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/crime/wife-murdered-by-her-husband-in-chennai-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக