Ad

புதன், 22 ஜூலை, 2020

கரூர்: கொரோனாவால் உயிரிழந்த முதியவர்! - அதிர்ச்சியில் 100 நாள் வேலைத்திட்ட பெண்கள்

கரூரில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்த முதியவரின் மனைவி தொடர்ச்சியாக 100 நாள் வேலைத்திட்டப் பணியில் ஈடுப்பட்டு வந்தது, அவரோடு வேலை பார்த்து வந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவருகிறது.

Also Read: கரூர் அதிர்ச்சி: `அரசு மருத்துவருக்கு கொரோனா - குடும்பத்தில் ஐந்து பேருக்கும் பாதிப்பு!

தமிழக அரசும் சுகாதாரத்துறையும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எண்ணற்ற முயற்சிகளை செய்தாலும், அதன் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் இதுவரை 293 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

அதில், 176 நபர்கள் பூரண குணமடைந்து, அவரவர் இல்லங்களுக்கு சென்றுவிட்டனர். இந்தநிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 109 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேபோல், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8 நபர்கள் இறந்துபோயுள்ளனர். கடைசியாக, நேற்று கடவூர் பகுதியைச் சேர்ந்த 67 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

Also Read: ரோட்டில் குவிந்த கொரோனா நோயாளிகள்; பதறிய சுகாதாரத் துறையினர்! - ஊட்டி சர்ச்சை

அவருக்கு கடந்த ஒரு வாரகாலமாகவே தொடர் சளித்தொல்லையும் காய்ச்சலும் இருந்துள்ளது. அவரும் சாதாரணமாக நினைத்து, மனைவியிடம் சொல்லி கஷாயம் வைத்து குடித்துள்ளார். ஆனாலும், அவருக்கு சரியாகவில்லை. நேற்று காலை அவருக்கு லேசாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் பயந்துபோன அவர், கடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று, அங்குள்ள மருத்துவர்களிடம் தனது பிரச்னையைத் தெரிவித்துள்ளார். அவரை உடனே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற அவருக்கு சோதனை செய்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது. உடனே அவரை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து, சிகிச்சையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், மூச்சுத்திணறல் அதிகமாக, சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார்.

பாலசுப்ரமணி

'சளி, காய்ச்சல் என்று போன மனுஷன் இறந்துவிட்டாரே' என்று அவரது உறவினர்கள் கலங்கினார்கள். ஆனால், அந்த முதியவர் இறந்ததைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும், அவர்களது உறவினர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். காரணம், கடந்த ஒரு வாரகாலமாக கடவூர் பகுதியில் நூறுநாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தப் பெண்களோடு, கொரோனா தொற்றுக்கு இறந்த முதியவரின் மனைவியும் கலந்துகொண்டதால், அதன்மூலமாகத் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்குமோ என்று பெண்கள் அச்சப்படுகிறார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணி,

"கடவூர் பகுதி என்பது, 32 சிறிய கிராமங்களைக் கொண்டது. அந்த 32 கிராமங்களையும் சுற்றி இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அரணாக அமைத்திருக்கிறது. அந்தக் கிராமங்களுக்கு வெளியில் இருந்து சென்று வர மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன. இப்போது கொரோனா வைரஸ் தொற்று நூறுநாள் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்பட்டால், அதன்மூலமாக ஒட்டுமொத்த கடவூர் பகுதிக்கே எளிதாகப் பரவிவிடும்.

அரசு மருத்துவக் கல்லூரி

அதனால், மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையினரும் இங்கு சோதனை எடுப்பதோடு, நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களை இனம்கண்டு, அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். அதோடு, போதிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை இந்தப் பகுதி மக்களிடம் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/death/karur-older-man-died-due-to-corona-infection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக