Ad

சனி, 18 நவம்பர், 2023

Trisha: ``இவரைப் போன்ற மனிதர்களால்தான்..." - மன்சூர் அலிகான் குறித்து நடிகை த்ரிஷா பதிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா இணைந்து நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் 19- ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் விஜய், திரிஷாவுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன்,மிஷ்கின், மடோனா செபாஸ்டின், பிரியா ஆனந்த் மற்றும் மன்சூர் அலிகான் என்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

லியோ படத்தில்...

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், நடிகர் மன்சூர் அலிகான் லியோ படத்தில் நடித்தது குறித்தும், நடிகை த்ரிஷா குறித்தும் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. திரிஷாவுடன் தான் இணைந்து நடிக்க காட்சிகள் கிடைக்காதது குறித்து ஆட்சேபகரமான கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டித்து த்ரிஷா தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்து அதிகமாக மக்கள் கவனத்தை ஈர்த்து, மன்சூர் அலிகான் பேசியதற்கு அனைவரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷா அந்தப் பதிவில், “மன்சூர் அலிகான் என்னைப் பற்றி இழிவாகப் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் இதில் அவமரியாதை, பெண் வெறுப்பு, ஆபாசம் இருப்பதாக நான் உணர்கிறேன். அவருடன் நான் திரைப்படத்தின் காட்சிகளில் ஒன்றாக நடிக்காததை நினைத்து நிம்மதியடைகிறேன். அது இனிவரும் என் திரையுலக வாழ்க்கையில் நடக்காமலும் நான் பார்த்துக் கொள்வேன். இவரைப் போன்ற சிலரால் மனிதகுலத்திற்கே இழிவு ஏற்படுகிறது” என்று பதிவிட்டிருந்தார். இவரது பதிவிற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பின்னணிப் பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் த்ரிஷாவின் பதிவிற்கு லியோ படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் பதில் பதிவிட்டிருந்தார். “நாங்கள் அனைவரும் ஒரே அணியாக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். மன்சூர் அலிகான் இவ்வாறு பேசியிருப்பது எனக்கு மிகவும் மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள், சக பணியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைகளுக்கு மரியாதை என்பது அனைத்து துறைகளிலும் எவ்வித பாரபட்சமின்றி இருத்தல் வேண்டும். இந்த நடத்தையை நான் முற்றிலுமாக கண்டிக்கிறேன்,” என்று பதிவிட்டிருக்கிறார்.



source https://cinema.vikatan.com/kollywood/actress-trishas-post-on-mansoor-alikhans-comment-goes-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக