Ad

வெள்ளி, 24 நவம்பர், 2023

நீங்களும் மின்சாரம் தயாரிக்கலாம்; மானியமும் உண்டு; லாபமும் பார்க்கலாம்!

அன்று பொருளாதார அடியாள்
இன்று சூழலியல் செயற்பாட்டாளர்

‘‘1971-ம் ஆண்டு நான் வேலையில் சேர்ந்தபோது, பயிற்றுவிப்பாளராக இருந்த கிளாடின், என்னிடம், ‘உங்களை ஒரு பொருளாதார அடியாளாக உருவாக்குவதுதான் என்னுடைய வேலை. இதுபற்றி உங்களுடைய மனைவி உட்பட யாரிடமும் நீங்கள் மூச்சுவிடக்கூடாது’ என்று கூறிவிட்டு, இன்னும் தீவிரமான குரலில், ‘நீங்கள் இதற்குள் வந்துவிட்டால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நீங்கள் இதற்குள்தான் இருக்க வேண்டும். அமெரிக்க வர்த்தக நலன்களைத் தூக்கிப் பிடிக்கின்ற, ஒரு பரந்துபட்ட பின்னலமைப்பின் ஒரு பகுதியாக ஆகும்படி உலகத் தலைவர்களை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். இறுதியில் அத்தலைவர்கள், பெரும் கடன் எனும் வலைக்குள், என்றென்றும் மீள முடியாத விதத்தில் மாட்டிக் கொள்வர். அது அவர்களுடைய விசுவாசத்தை உறுதி செய்யும். நாம் விரும்புகின்றபோதெல்லாம், நம்முடைய அரசியல், பொருளாதார, மற்றும் ராணுவத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நம்மால் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்குப் பதிலீடாக, அவர்கள் தங்களுடைய மக்களுக்கு, தொழிற்பேட்டைகள், மின் திட்டங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை வழங்கி, நாட்டுத் தலைவர்கள் என்ற முறையில் தங்களுடைய நிலையை அவர்களால் வலுப்படுத்திக்கொள்ள முடியும். இதன் விளைவாக, அமெரிக்கப் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் முதலாளிகள் கொழிப்பர்’ என்றாள் கிளாடின்.

மன்னாரு


நான் ஒரு பொருளாதார அடியாளாக இயங்கிக்கொண்டிருந்தபோது, அது சிறியதொரு குழுவாகவே இருந்து வந்தது. ஆனால், அதைப் போன்ற பாத்திரங்களை வகிக்கின்ற நபர்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளனர். இன்று அவர்கள் நயமான பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்; எக்ஸன், வால்மார்ட், ஜெனரல் மோட்டார்ஸ், மான்சன்டோ போன்ற ‘ஃபார்ச்சூன் 500’ பெருநிறுவனங்களின் தாழ்வாரங்களில் அவர்கள் உலவிக்கொண்டிருக்கின்றனர்’’ என்று ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தில்’ ஜோன் பெர்க்கின்ஸ் (John Perkins) குறிப்பிட்டிருப்பார். இவரைப் பற்றிக் குறிப்பிடக் காரணம் உண்டு.
அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்ற எர்த் ஜென்ர்சலிசம் நெட்ஓர்க்(Earth Journalism Network) அமைப்பின் ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டேன். பல்வேறு பத்திரிகைகள், நிறுவனங்களிலிருந்து பலரும் பங்கு கொண்டு இருந்தனர். அப்போது ஜோன் பெர்க்கின்ஸை சந்தித்தது குறித்து, ஒரு நண்பர் குறிப்பிட்டார்.

நிகழ்வில்


இப்போது அவர் என்ன செய்து கொண்டுள்ளார்? என்று கேட்டேன்.
‘‘ஜான் பெர்க்கின்ஸுக்கு 77 வயதாகிறது. நம்மைப் போலவே, பழங்குடி கலாசாரம், சூழலியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்... எனப் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறார்; நல்லவர்கள் அப்படித்தானே இருக்க முடியும்’’ என்றார்.
அந்த மூன்று நாள் பயிற்சிப் பட்டறையில் காலநிலை, சூழலியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்... பற்றி ஆதாரங்களுடன் பேசினார்கள். அதனுடன் இன்னும் பல அவசியமான தகவல்கள் பற்றிப் பார்ப்போம் வாருங்கள்.

நிகழ்வில்

போராட்டத்தை போலவே
எழுத்தும் மாற்றங்களை
உருவாக்கும்!


‘‘உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் உள்ளூரில் நடக்கும் கலைநிகழ்ச்சி வரை அனைத்துக்கும் காலநிலை கைகொடுக்க வேண்டும். காலநிலை சரியாக இருக்க வேண்டும் என்றால், சூழல் சீர்கெடாமல் இருப்பது முக்கியம். இதைப் போராட்டம் மூலம் சொல்வதற்குப் பல அமைப்புகள் உள்ளன. போராட்டத்தைப் போலவே, நல்ல எழுத்தும் சிறந்த மாற்றங்களை உருவாக்கும். நேர்மறையான செய்திகளும் கட்டுரைகளும் சமூகத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல எழுத்து என்பது, நல்ல விதை போல.
இதனால்தான், சூழலியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து நிறைய, நிறைய நல்ல தகவல்களை வெளியிட ஊக்கப்படுத்தி வருகிறோம். அதன் முயற்சியாகத்தான் இந்தப் பயிற்சிப் பட்டறை. ஏன் தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்றால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய சக்தி, காற்றாலையில் தமிழ்நாடு முன்னோக்கிச் சென்று கொண்டுள்ளது. இங்கு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளன’’ என்றார் எர்த் ஜெர்னசலிசம் நெட்ஓர்க்கின் இந்திய ஒருங்கிணைப்பாளர் ஜாய்தீப் குப்தா.

மன்னாரு

நீங்களும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்...
லாபம் பார்க்கலாம்!

தமிழ்நாட்டில் மின்கட்டணம் அதிகரித்து வருவதால், அதை ஈடுகட்ட, பெரும் நிறுவனங்கள், காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து, அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றன. இதில் நல்ல லாபம் ஈட்டும் நிறுவனங்களையும் தூத்துக்குடி, தென்காசி பகுதிகளில் பார்த்தோம். காற்றாலை அமைக்கக் குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் தேவை. இந்த முதலீட்டை 10 ஆண்டுகளில் திரும்ப எடுத்துவிடுவார்கள். அதன் பிறகு, காற்றாடி சுற்ற, சுற்றப் பண மழைதான்.
சரி, பெரும் நிறுவனங்கள் மட்டும்தான் இப்படி மின்சாரம் தயாரித்து லாபம் சம்பாதிக்க முடியுமா? விவசாயிகள், பொதுமக்களுக்கு வாய்ப்பு இல்லையா? என்று கேட்கிறீர்களா?
உங்களுக்காகவே உள்ளதுதான் சூரிய சக்தி மின்சாரம். விவசாயம் செய்யாத தரிசு நிலத்தில் சூரிய சக்தி தகடுகளை நிறுவி, அரசுக்கு மின்சாரத்தை விற்பனை செய்யலாம். நகரத்தில் வசிப்பவர் என்றால், சொந்த வீடு உள்ளவர்கள் உங்கள் வீட்டு மொட்டை மாடியில், சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கலாம். அதைச் சோலார் நெட் மீட்டரிங் முறையில், நீங்கள் பயன்படுத்தியது போக மீதி மின்சாரத்தை, மின்சார வாரியத்துக்குக் கொடுத்து வருமானம் பார்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தின் அலுவலகத்தை அணுகவும் என்று சொல்ல மாட்டேன். மின்சார வாரியத்தின் அலுவலர்களின் சேவை ஊர் அறிந்ததுதான். ஆகையால், https://www.tnebltd.gov.in/usrp/ என்ற தளத்துக்குச் சென்று நீங்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம்; மானியமும் உண்டு. வருமானமும் பார்க்கலாம். சென்னையில் இப்படி மொட்டை மாடியில் மின்சாரம் தயாரித்துப் பயன்பெற்று வருகிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சோலார் மின்சாரம் உற்பத்தி

சூரிய சக்தியிலும்
சீனா சரக்குகள்...
ஜாக்கிரதை!

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுன்டம் பகுதியில் ஏக்கர் கணக்கில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சூரிய சக்தி தகடுகள் தக,தகவென்று மின்னிக் கொண்டிருந்தன. சூரிய சக்தி தகட்டின் ஆயுள் காலம் 25 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். ஆனால், பாருங்கள் நண்பர்களே, இதன் தரம், விலை குறித்து எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. பெரும்பாலும் சீனா சரக்குகள்தான். இதனால், சில ஆண்டுகளிலேயே சூரிய சக்தி தகடுகளின் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் குறைந்து கொண்டே வந்துவிடும். ஆகையால், தரமான நிறுவனத்தின் சூரிய ஒளி தகடுகளை பார்த்து வாங்க வேண்டும் என்று வல்லுநர்கள்  சொல்கிறார்கள்.

மன்னாரு


சூரிய சக்தி மின்சாரத்துக்கு
ஏற்ற இடம் எது?

இந்தியாவில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க ஏற்ற இடம் எது? தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத்....
இல்லவே இல்லை. இமயமலையில் உள்ள லடாக் பகுதிதான் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க ஏற்ற இடம். சூரிய சக்தி மின்சாரம் என்பது வெப்பம் மூலம் உருவாகிறது என்று நினைத்துக் கொண்டிருப்போம். உண்மையில் ஒளி மூலம்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஆகையால், சூரிய வெப்பம் அதிகம் உள்ள தமிழ்நாட்டை விட, சூரிய ஒளி அதிகம் உள்ள லடாக் மலைப்பகுதியில் சூரிய சக்தி மின்சாரத்தை எளிதாகவும் கூடுதலாகவும்  உற்பத்தி செய்யலாம். இதனால், லடாக் யூனியன் பிரதேசத்தில் சூரிய சக்தி மின்சாரப் பண்ணைகளை அரசாங்கமே நிறுவி வருகிறது.

மன்னாரு


அடுத்த தலைமுறைக்குக்
காத்திருக்கும் பரிசு!

‘‘புதைபடிம (நிலக்கரி, பெட்ரோல்) எரிபொருள் பயன்பாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் மூலம் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகம். அதை ஆற்றலாக மாற்றவும் செலவு அதிகம். ஆனால்,  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்பு இரண்டுக்குமான செலவு குறைவுதான். இந்த உலகத்துக்கு ஏற்றது புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான். இன்னும் சில பத்து ஆண்டுகளில், சூழலுக்குக் கேடு செய்யாத புதுப்பிக்கத்தக்க மின்சாரம் வேகமாகப் பரவும். அடுத்து வரும் தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள். ஏறத்தாழ அவர்கள் காலத்தில் நிலக்கரி, பெட்ரோல் பூமியில் தீர்ந்திருக்கும். சூரியசக்தி, காற்றாலை... உள்ளிட்ட பசுமை ஆற்றல்தான் அப்போது உலகம் முழுக்க இருக்கும். அதை நினைக்க, நினைக்க ஆனந்தமாக உள்ளது’’ என்று பசுமை ஆற்றல் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

சோலார்

சர்க்கரை நோயை உருவாக்கும்
காற்று மாசு..!

‘காற்றை மாசுபடுத்த வேண்டாம், சூழல் முக்கியம், பசுமை அவசியம்’ என்று இப்படி பேசுவது பூவுலகின் நண்பர்கள் அல்ல. சர்க்கரை நோய் மருத்துவர்கள். ஏன் தெரியுமா? எனக்குத் தெரிந்து சிங்காரச் சென்னையில் நலமுடன் வளமுடன் வாழ்ந்தவர்கள், இப்போது சர்க்கரை நோய் வந்துவிட்டது என அலறுகிறார்கள். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று எதிலும் குறையில்லை. ஆனால், அவர்களுக்கு எப்படிச் சர்க்கரை குறைபாடு வந்தது?
‘‘பெருநகரங்களில் இருப்பவர்கள் பொருளாதார வசதியுடன் வாழ்கின்றனர்; வாகனத்தில் செல்கின்றனர்; உடல் உழைப்புக் கிடையாது; எல்லா வகை உணவுகளும் சுலபமாகக் கிடைக்கின்றன; கலோரி அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுகின்றனர். கார்போஹைட்ரேட் உணவு அதிகம் சாப்பிட்டு, உடல் எடையைக் கூட்டுகின்றனர். இதனால் சர்க்கரை கோளாறு வருகிறது என்று நினைத்தோம். சி.ஏ.ஆர்.ஆர்.எஸ்., - சென்டர் பார் கார்டியோ வாஸ்குலர் ரிஸ்க் ரிடெக்ஷன் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாகச் சென்னையிலும், டெல்லியிலும் ஆய்வு நடத்துகிறோம்.


இதில் சர்க்கரை கோளாறு, ரத்தக் கொதிப்பு, கொழுப்பு, இதய நோய்கள் என்று பலவற்றையும் ஆய்வு செய்துள்ளோம். சுற்றுச்சூழல் மாசால், ‘டைப் - 2’ சர்க்கரை கோளாறு வரும் என்ற வெளிநாட்டு ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது, நாங்களும் அதே கோணத்தில், ‘பார்ட்டிகுலேட் மேட்டர்’ என்ற பெயரில் ஆய்வை தொடர்ந்தோம். 10 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை கோளாறு இல்லாமல் இருந்தவர்கள், தற்போது டைப் - 2 சர்க்கரை கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. தொழிற்சாலைகள், வாகனங்கள் உட்படப் பலவிதங்களிலும் புகை, மாசுகள் வெளிவந்து காற்றில் கலக்கும் போது, அதில் நுண்ணியத் துகள்கள் சேர்ந்தே வரும். எங்கெல்லாம் மாசு அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் சர்க்கரை கோளாறும் அதிகரிக்கும்.

மன்னாரு

இத்தனை நாட்களாக, தனிப்பட்ட நபரின் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னையாகச் சர்க்கரை கோளாறு இருந்தது. தற்போது சுற்றுச்சூழல் மாசால் பாதிப்பு என்பதால், இது தனிநபரின் பிரச்னை இல்லை. ஆகையால், சூழலைப் பாதுகாப்போம்; சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவோம்’’ என்கிறார் பிரபல சர்க்கரை நோய் நிபுணர் மோகன்.  



source https://www.vikatan.com/agriculture/you-can-also-generate-electricity-there-is-also-a-grant-see-the-profit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக