Ad

வெள்ளி, 10 நவம்பர், 2023

கனவு -135 | `உலர் தக்காளி ஃபிளேக்ஸ்... சூரியகாந்தி சப்ளிமென்ட்ஸ்' | திருப்பூர் - வளமும் வாய்ப்பும்!

திருப்பூர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான சூரியகாந்தியின் விதையிலிருந்து, சூரியகாந்தி லெசிதின் (Sunflower Lecithin) எனும் மருந்துப் பொருளைத் தயாரிக்கலாம். இதை, உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும் சப்ளிமென்ட்ஸாக, அதாவது துணை உணவாக உட்கொள்ளலாம்.

உடலில் அதிக அளவு கொழுப்பு கொண்டிருப்பவர்கள், கல்லீரல் சிகிச்சை பெறுவோர், தடகள வீரர்கள், சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு சூரியகாந்தி லெசிதின் எனும் சப்ளிமென்ட்ஸை தேவையான அளவுக்கு உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது, உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் பல ஆரோக்கிய பலன்களையும் கொண்டிருக்கும் ஒரு பொருள்தான் லெசிதின்.

கொலின் (Choline) எனும் வேதியியல் சேர்மத்தை (Chemical Compound) அடிப்படையாகக் கொண்டது இந்த லெசிதின். மனித உடலின் கட்டுமானத்தைக் கொண்டிருக்கும் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்த உதவுவதில் ஒன்றுதான் இந்த கொலின். செல்களுக்கு கொலின் கிடைக்க சிறந்த வழி, அதை லெசிதின் வழியே பெறுவதுதான்.

சூரியகாந்தி விதையிலிருந்து எண்ணெய்யைப் பிரித்தெடுத்து, அதனைச் சுத்திகரிக்க பல்வேறு செயல்முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் டிகம்மிங் (Degumming). இந்த டிகம்மிங் செயல்முறையின்போது, பாஸ்போலிப்பிட்ஸ் (Phospholipids) எனும் கொழுப்பு அமிலத்தைத் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். இந்தக் கொழுப்பு அமிலத்தை சால்வன்ட் எக்ஸ்ட்ராக்‌ஷன் (Solvent Extraction) முறையில் சுத்திகரிப்பு செய்யும்போது, அதிலிருந்து லெசிதின் கிடைக்கும். இதற்கான தொழிற்சாலையை திருப்பூர் மாவட்டத்தில் நிறுவுவதோடு, அதையொட்டியே அதற்கான ஆய்வகத்தையும் அமைக்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு ஏறக்குறைய 2.5 டன் அளவுக்கு சூரியகாந்தி விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஆண்டொன்றுக்கு தோராயமாக 12,500 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கிறது. இதிலிருந்து சுமார் 100 டன் விதைகளை மட்டும் கொள்முதல் செய்து, லெசிதின் சப்மென்ட்ஸைத் தயாரிக்கலாம். ஒரு கிலோ சூரியகாந்தி விதையைச் சுத்திகரிக்கும்போது, 15 கிராம் அளவுக்கு லெசிதின் உற்பத்தி செய்யலாம். எனில், 100 டன்னிலிருந்து சுமார் 1.5 டன் அளவுக்கு லெசிதினைப் பெறலாம்.

சந்தையில், 100 லெசிதின் மாத்திரைகள் (1200 mg Lecithin) அடங்கிய பாட்டிலை ஏறக்குறைய 5,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்யும்போது ஆண்டொன்றுக்கு தோராயமாக 6 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம். லெசிதின் தயாரிக்கும்போது, முதன்மைப் பொருளாகக் கிடைக்கும் சூரியகாந்தி எண்ணெய்யைத் தனியாக மார்க்கெட்டில் விற்பனை செய்து, அதன் வழியாகவும் வருமானம் பெறலாம்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள நடுத்தர சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு சுமார் 100 டன் வரை எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலைகளில் எண்ணெய் சுத்திகரிப்பின்போது, தனியாகப் பிரித்தெடுக்கப்படும் பாஸ்போலிப்பிட்ஸ் கொழுப்பு அமிலத்தைப் பெற்று, மேலும் லெசிதினின் உற்பத்தியை அதிகரித்தால், பல கோடி ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பைப் பெற்று, திருப்பூர் மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்தலாம்.

பல நேரங்களில் தங்கத்துக்கு நிகரான மதிப்பைத் தக்காளியும் எட்டுவது உண்டு. அதேபோல சில நேரங்களில் விலை கட்டுப்படியாகாமல் தரையில் கொட்டப்படுவதும் உண்டு. சந்தையில் தக்காளி வரத்து குறையும்போது ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், வரத்து அதிகரிக்கும்போது கிலோ பறிப்பு கூலிகூட கிடைக்காத தக்காளியின் நிலையற்றதன்மைக்கு இனி ஒரு முடிவு கட்டிவிடலாம்.

திருப்பூர் மாவட்டத்தின் வளங்களின் ஒன்றான தக்காளியை மதிப்புக்கூட்டி, உலர் தக்காளி ஃபிளேக்ஸாக (Dry Tomato Flakes) மாற்றலாம். தக்காளியின் தோல், விதைகளை நீக்கி, நன்கு காய வைத்து உலத்தினால் உலர் தக்காளி ஃபிளேக்ஸ் தயார். இதை பல்வேறு வகையான உணவுகளில் மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம்.

தக்காளியில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் நிரம்பியிருக்கின்றன. சுமார் 100 கிராம் உலர் தக்காளி ஃபிளேக்ஸில் 213 கிலோ கலோரிகள் (Calories), 14 கிராம் கொழுப்பு, 1.4 கிராம் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), 23 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் நார்ச்சத்துகள், 5 கிராம் சர்க்கரை, 5 கிராம் புரதம் ஆகியவை அடங்கியிருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

அனைத்து தரப்பினரும் விரும்பி வாங்கும் பொருளாக தக்காளி இருப்பதால், அதற்கு இணையான அதாவது சூப்கள், சாஸ்கள், சாலட்டுகள், கிரேவிகள் உள்ளிட்டவற்றில் இதனை அதிகமாகப் பயன்படுத்த முடியும் என்பதால், சந்தையில் இதற்கான வரவேற்பும் அதிகரிக்கவே செய்யும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உலர் தக்காளி ஃபிளேக்ஸ் தயாரிப்புக்கான தொழிற்சாலையை அமைக்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம், காங்கேயம், அவிநாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சுமார் 6,000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 10 டன் வீதம் ஆண்டொன்றுக்கு 60,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து உலர் தக்காளி ஃபிளேக்ஸ் தயாரிக்க தோராயமாக 100 டன் மட்டும் கொள்முதல் செய்து கொள்ளலாம். ஒரு கிலோ தக்காளியிலிருந்து ஏறக்குறைய 600 கிராம் அளவுக்கு உலர் தக்காளி ஃபிளேக்ஸ் தயாரிக்க முடியும் எனில், 100 டன்னிலிருந்து ஏறக்குறைய 60 டன் அளவுக்குத் தயாரிக்கலாம்.

ஒரு பாக்கெட்டில் 400 கிராம் எடைகொண்ட உலர் தக்காளி ஃப்ளேக்ஸை அடைப்பதன் வழியே 60 டன்னிலிருந்து சுமார் 1,50,000 பாக்கெட்டுகளில் அடைக்கலாம். ஒரு பாக்கெட்டின் விலையை 500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 8 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி, வளம் பெறலாம் என்பதோடு, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் விளைச்சல் அதிகரித்து, விலை குறையும்போது அங்கேயும் தக்காளியைக் கொள்முதல் செய்து உலர் தக்காளி ஃபிளேக்ஸின் உற்பத்தியை அதிகரித்தால், இன்னும் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை அள்ளலாம்.

(இன்னும் காண்போம்)



source https://www.vikatan.com/business/economy/kanavu-series-by-suresh-sambandam-tiruppur-135

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக