Ad

செவ்வாய், 28 நவம்பர், 2023

கனவு -139 | மூங்கில் சானிடேசன் பொருள்கள் டு மாங்கொட்டை பாடி பட்டர் | வேலூர் - வளமும் வாய்ப்பும்

சிவப்பு காராமணி என்பது புரதம், நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்டவை அடங்கிய ஒரு சத்தான உணவுப் பொருள். எளிதில் செரிமானம் அடையக்கூடியது என்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒன்று. இவற்றுடன் கேரட், பீன்ஸ், முந்திரி, பாதாம் போன்றவற்றைத் தேவையான அளவுக்குச் சேர்த்து பேபி செரியலைத் தயாரிக்கலாம். சிவப்பு காராமணியை நன்கு கழுவி, சுத்தம் செய்து, காயவைத்து, வறுத்து, அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு, காயவைத்து அரைக்கப்பட்ட பீன்ஸ், கேரட் போன்றவற்றையும் முந்திரி, பாதாமின் அரைத்த கலவையையும் ஒன்றாகச் சேர்த்து இந்தப் புராடக்டை உருவாக்கலாம் என்பதால் இதற்கான தொழிற்சாலையை வேலூர் மாவட்டத்தில் அமைக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் சுமார் 35,000 ஏக்கர் பரப்பளவில் சிவப்பு காராமணி பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு 700 கிலோ வீதம் ஆண்டொன்றுக்கு 24,500 டன் விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து 100 டன் மட்டும் எடுத்தக்கொண்டு பேபி செரியல் தயாரிக்கலாம். ஒரு 300 கிராம் எடைகொண்ட பேபி செரியல் பாக்கெட் (பீன்ஸ், கேரட் உள்ளிட்டபிற பொருள்களைச் சேர்த்து) தயாரிக்க 120 கிராம் சிகப்பு காராமணி தேவைப்படும் எனில் 100 டன்னிலிருந்து, ஒரு கிலோ எடையுள்ள 8,30,000 பாக்கெட்டுகள் உருவாக்கலாம். ஒரு பாக்கெட்டின் விலையை 300 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு 25 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி, வளம் பெறலாம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME - Micro, Small and Medium Enterprises) :

வேலூர் மாவட்டத்தில் ஓய்வறைகளுக்கான (Rest Room) சானிடேசன் வேர் எனும் பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைக்கலாம்.

மூங்கில் ஈரப்பதத்தை தனக்குள் அதிகளவில் தக்க வைத்துக் கொள்ளாது என்பதால் அதில் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்தப் பண்புகளைப் பயன்படுத்தி மூங்கிலிலிருந்து ஓய்வறைப் பயன்பாட்டு பொருள்களான கதவுகள், Stand, Handle, சின்க் (Sink) போன்றவற்றை உருவாக்கலாம். இவ்வகையான பொருள்களை உருவாக்குவதற்கான மூங்கில்களை சரியான பதத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றை இயந்திரங்களைப் பயன்படுத்தி சீராக்கி, சாண்டிங் இயந்திரம் (Sanding machine) மூலமாக மூங்கிலை மென்மையாக்க வேண்டும். பின்னர் அவற்றில் டிரில்லிங் (Drilling), பிசின் (adhesive) பசை (glue), கிளாம்ப் (Clamp) போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம், பொருட்களைத் தேவைக்கேற்ப தயாரிக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் ஆதாங்கை என்ற ஊரில் சுமார் 46,000 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் காடு, பரந்து விரிந்துள்ளது. இங்குள்ள மூங்கிலைப் பயன்படுத்தி, பொருள்களைத் தயாரிக்கும்போது உபரியாக வெளியேறும் மூங்கில் கழிவுகளைப் பயன்படுத்தி மலர்க்குவளை, பேனா ஸ்டாண்டு, கூடை, அணிகலன்கள் போன்றவற்றை உருவாக்கி, ஒவ்வொன்றுக்கும் உரிய விலையை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

வேலூர் மாவட்டத்தில் மேங்கோ பாடி பட்டர் (Mango Body Butter) புராடக்டுக்கான தொழிற்சாலையை நிறுவலாம்.

பாடி பட்டர் என்பது க்ரீமி மாய்ஸ்சரைசர் (Creamy moisturizer). இது, ஷியா வெண்ணெய் (Shea Butter), கொக்கோ வெண்ணெய் (cocoa butter) போன்றவற்றைப் பயன்படுத்தியே பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இதன் விலை அதிகம் என்பதால் அனைவராலும் பயன்படுத்த இயலாது. இதற்கு மாற்றாக, மாங்கொட்டையிலிருந்து எண்ணெய்யைப் பிரித்தெடுத்து, அதோடு தேங்காய் எண்ணெய், தேன் மெழுகு, லாவெண்டர் ஆயில், கற்றாழை உள்ளிட்டவற்றைத் தேவையான அளவுக்குச் சேர்த்து மேங்கோ பாடி பட்டர் உருவாக்கலாம்.

மாங்கொட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் அடங்கியுள்ளதால் அது தோல் பராமரிப்புக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மேங்கோ பாடி பட்டர் கெட்டியானதாகவும் அதிக செறிவூட்டப்பட்டதாகவும் (Highly concentrated) இருப்பதால் வறண்ட, சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை உற்பத்தி செய்வதும் எளிது என்பதோடு குறைந்த விலையில் சந்தைப்படுத்துவதலாம்.

வேலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் மாம்பழக் கூழ் உற்பத்தி நிலையங்களிலிருந்து மாம்பழக் கொட்டையை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து, மேங்கோ பாடி பட்டரை உருவாக்க முடியும். 200 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாட்டிலின் விலையை 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி வளம் பெறலாம்.

(இன்னும் காண்போம்)



source https://www.vikatan.com/business/economy/kanavu-series-by-suresh-sambandam-vellore-139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக