மனிதர்கள் வாழ்ந்து முடித்த வாழ்க்கையில் இருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். பெரிய தவறு எதுவும் செய்யாமல், ஊருக்கு நல்லதையே செய்து வாழ்ந்து முடிப்பவர்கள், பலரும் பின்பற்ற நினைக்கும் உதாரண புருஷர்களாக ஆகிறார்கள். சுயநலத்துக்காகப் பெரிய தவறுகளைச் செய்து வாழ்ந்து முடிப்பவர்கள் யாரும் பின்பற்றக்கூடாத உதாரணங்களாக மாறுகிறார்கள். இதில், இரண்டாவது வகை மனிதர்... சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்தின் நிறுவனர் சுப்ரதா ராய்.
பீகாரில் பிறந்த சுப்ரதா, வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்பதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் கொண்டிருந்தார். வெறும் 2,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியது அவர் வாழ்க்கை. உ.பி அரசின் பாசனத் துறைக்குக் கற்களை விநியோகம் செய்தது, வெள்ளியின் சுத்தத்தை அளந்து சொல்லும் கருவியை உருவாக்கியது, பழைய ஃபேன்களை வாங்கி விற்றது என்று அவர் செய்யாத தொழிலே இல்லை. அத்தனையிலும் அவர் அடைந்தது தோல்விதான். ஆனால், அவர் துவண்டு போய்விடவில்லை. ‘அடுத்து, அடுத்து...’ என்று விக்கிரமாதித்தன்போல விடாமுயற்சியுடன் அவர் செயல்பட்டுக்கொண்டே இருந்தார்.
இந்த முயற்சிதான் பிற்பாடு சகாரா இந்தியா பரிவார் என்கிற மாபெரும் குழுமத்தை உருவாக்க அடிப்படையாக இருந்தது. ரியல் எஸ்டேட், நிதித்துறை, தொலைக்காட்சி, சினிமா தயாரிப்பு, விமான நிறுவனம், ஹோட்டல், கிரிக்கெட் என அவர் செய்யாத தொழிலே இல்லை. அத்தனையிலும் அவர் அடைந்தது மிகப் பெரிய வெற்றி. அது, அவரை ஒரு ‘ரோல்மாடல்’ ஆக மாற்றியது.
அதே நேரத்தில், பொய், ஏமாற்று, மோசடி, துரோகம் என அவர் முகத்தில் அப்பியிருந்த அழுக்குகளை வெளியே தெரிந்துவிடாதபடி சாதுரியமாக நடந்து கொண்டார். ஒன்றும் அறியாத அப்பாவி மக்களையே ஏமாற்றத் தயாரானார். மிக அதிகமான லாபம் கிடைக்கும் என்று சொல்லி அவர் நடத்திய சாரதா சிட் ஃபண்ட் திட்டம் மூலம் சுமார் இரண்டு கோடி ஏழைகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து, புனேவுக்குப் பக்கத்தில் உள்ள ஆம்பியில் சொகுசு வீடுகளைக் கட்டி விற்று, பெரும் பணம் சம்பாதிக்க நினைத்தார்! ஆனால், அவரது அசட்டுத் தைரியம் அவரை சிக்கலில் சிக்க வைத்தது.
தான் செய்த தவறு வெட்டவெளிச்சமானபோது, அவர் ஒப்புக்கொள்ளவில்லை. சாதாரண மக்களிடமிருந்து வாங்கிய பணத்தைத் திரும்பத் தரும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, செபியையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையிலேயே நடந்துகொண்டார். விளைவு, அவர் சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாய் அவருக்கு எந்த வகையிலும் பயன்படாமலே போனது. எந்த நேரத்திலும் சிறைக்குச் செல்லலாம் எனும் சூழலில், அதே கவலையுடன் கடந்த 14-ம் தேதியன்று தன் 75-வது வயதில், மும்பையில் உயிரிழந்திருக்கிறார் சுப்ரதா.
நன்னெறி மறந்து, நேர்மை தவறி, தன் சுயநலத்துக்கு ஏழைகளின் வயிற்றிலும் அடிக்கத் துணிந்து, அரசின் விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, பிசினஸில் அடையும் வெற்றி நிலைத்து நிற்கவே நிற்காது என்கிற பாடத்தை சுப்ரதா ராயின் மரணத்தில் இருந்து அனைவரும் அவசியம் கற்க வேண்டும்!
- ஆசிரியர்
source https://www.vikatan.com/business/companies/lessons-in-subrata-roy-life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக