மகாதேவ் புக் சூதாட்ட மொபைல் செயலி விவகாரம், இப்போது சத்தீஷ்கர் அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. மகாதேவ் புக் செயலியின் நிறுவனர் செளரப், துபாயில் ரூ.200 கோடி செலவு செய்து செய்த திருமணம் தான் அந்த செயலியின் மீது அமலாக்கப்பிரிவின் கவனத்தை திசை திருப்பியது. ஏற்கனவே மகாதேவ் புக் செயலியின் துபாய் நிகழ்ச்சியில் பங்கேற்றது, செளரப் திருமணத்தில் பங்கேற்றது மற்றும் விளம்பரங்களில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்களுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருக்கிறது. செளரப் சொந்த ஊர் சத்தீஷ்கர் மாநிலம் ஆகும். அவர் தனது மாநிலத்தில் தான் இந்த மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.
அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சத்தீஷ்கர் போலீஸார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் செளரப் லஞ்சம் கொடுத்திருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இதில் சத்தீஷ்கர் முதல்வர் புபேஷ் பாகல் சிக்கி இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தீஷ்கரில் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி, ஆசிம் தாஸ் என்பவரை கைது செய்தது. அவரிடம் இருந்து 5.39 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு அவரிடம் நடத்திய விசாரணையில் சுபம் சோனி என்பவர் அடிக்கடி ஆசிம் தாஸுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
அதோடு அவரின் இமெயில் விபரங்களை ஆய்வு செய்த போது அடிக்கடி சத்தீஷ்கர் முதல்வர் புபேஷுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருப்பதாகவும், இதுவரை ரூ.508 கோடி வரை கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் ஆசிம் தாஸ் தான் துபாயில் இருந்து பணம் கொடுப்பதற்காகத்தான் இங்கு வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆசிம் தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து சுபம் சோனிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது.
அவர் நேரில் ஆராகவில்லை. ஆனால் துபாயில் இருக்கும் அவர் இமெயில் மூலம் பதில் அனுப்பி இருக்கிறார். அதில் சில ஆவணங்களை பகிர்ந்துள்ளார். அதோடு மகாதேவ் செயலியில் தான் இயக்குநர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அடிக்கடி புபேஷ் பாகலுக்கு லஞ்சம் கொடுத்து வந்ததாகவும், இதுவரை 508 கோடி ரூபாய் வரை கொடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு புபேஷ் பாகல் ஆலோசனையின்படி, தான் துபாய் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மகாதேவ் செயலி பிரச்னை இல்லாமல் செயல்படவேண்டும் என்பதற்காக அடிக்கடி அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து வந்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சுபம் தாஸ் தெரிவித்துள்ள தகவல் புபேஷ் பாகலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செளரப் சத்தீஷ்கரில் புதிதாக உருவாக இருக்கும் அரசுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள தனியாக ஒரு ஏஜென்சியையும் நியமித்து இருப்பதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுபம் சோனி தனியாக வாய்ஸ் மெசேஜ் ஒன்றை ஆசிம் தாஸிற்கு அனுப்பி இருந்தார்.
அந்த தகவலை ஆசிம் தாஸ் போனில் இருந்து அமலாக்கப்பிரிவு எடுத்துள்ளது. அதில்,'' நீ இந்தியாவிற்கு கிளம்பு நான் உனக்கு மெசேஜ் அனுப்புகிறேன். ராய்பூர் கிளை மூலம் 8 முதல் 10 கோடி கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். அதனை பாகலிடம் கொடுத்துவிடு’ என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வாய்ஸ் மெசேஜ் தகவலையும் சுபம் சோனி அமலாக்கப்பிரிவுக்கு அனுப்பி இருக்கிறார்.
`22 செயலிகளுக்கு தடை!’
இதனிடையே மத்திய அரசு மகாதேவ் புக் உட்பட 22 சூதாட்ட மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து இருக்கிறது. அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணையை தொடர்ந்து சட்டவிரோதமாக இந்த செயலிகள் செயல்படுவதாக கூறி மத்திய அரசு தடை செய்து இருக்கிறது. சத்தீஷ்கர் அரசு மகாதேவ் மொபைல் செயலி மீது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் அதனை தடை செய்ய பரிந்துரை செய்ய மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் இருந்ததாகவும் ஆனால் மாநில அரசு அவ்வாறு செய்ய தவறிவிட்டதாகவும் மத்திய அமைச்சர் சந்திரசேகர் குற்றம் சாட்டி இருக்கிறார். சத்தீஷ்கர் அரசியலில் பெரும் புயலை கிளப்பு உள்ளது இந்த மகாதேவ் புக் செயலி விவகாரம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/trending/we-gave-rs-508-crore-to-chief-minister-bhubesh-mahadev-app-director
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக