தஞ்சாவூரில் அரசு மகப்பேறு மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இதனால் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் வெளியே ஓடி வந்தனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது பழைமையான இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை. இதன் ஒரு பகுதியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவும், மற்றொரு தனிப் பகுதியில் கண் சிசிச்சைக்கான பிரிவும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, இங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், பிரசவத்துக்காகத் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களிலிருந்து ஏழைக் கர்ப்பிணிப் பெண்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் அறைக்குப் பின் பகுதியில் ஒருங்கிணைந்த பேறுகால அவசரசிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்துக்கான இரண்டு அடுக்குகளைக் கொண்ட புதிய கட்டடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தக் கட்டடத்தைக் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு 200-க்கும் மேற்பட்ட குழந்தை பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தையுடனும், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் சிகிச்சையில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு இரண்டாவது தளத்தில் மின் கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், மின் ஒயர்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளன. இதையடுத்து மின் ஊழியர்கள் உடனடியாக அந்த வளாகத்தின் மின் இணைப்பைத் துண்டித்தனர். விபத்தால், அந்தப் பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாகக் காணப்பட்டது. இதனால், அச்சமடைந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைக் கையில் தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். புதிய கட்டடம் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் வேகமாகப் பரவி மருத்துவமனை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தை பிரசவித்த பெண்களின் உறவினர்களும் திரண்டனர்.
இதையடுத்து, தீயணப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மின்கசிவு ஏற்பட்ட பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மருத்துவமனை நிர்வாகம் துரிதமாக எடுத்த நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தாய்மார்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தரை தளம் பகுதிக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
போதுமான காற்று இல்லாததால் குழந்தைகளுக்கு விசிறி விட்டபடியே அமர்ந்திருந்தனர். ஆபரேஷன் செய்து குழந்தை பிரசவித்த பெண்கள் சிலருக்கு வேகமாக இறங்கி வந்ததால் வலியும் ஏற்பட்டது. பின்னர் நிலைமை சரியான பிறகு அவர்கள் மீண்டும் அந்த வார்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்தவர்களிடம் பேசினோம். ``இரவு நேரம் திடீரென மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால், அந்த இடமே ஒரே புகைமூட்டமாக மாறியது. இவை குழந்தை பிரசவித்த பெண்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்தவர்களை பெரும் அச்சத்தை உண்டாக்கியது. இதையடுத்து பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை உட்பட தங்கள் குழந்தைகளைத் தாய்மார்கள் தூக்கிக்கொண்டு படிகள் வழியாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கீழே இறங்கி வந்தனர்.
ஆபரேஷன் செய்யப்பட்ட பெண்களும் கீழே இறங்கி வந்தனர். இதனால், அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அவர்களை உறவினர்கள் தாங்கிப் பிடித்தபடி அழைத்து வந்தனர். எல்லோரும் ஒரே நேரத்தில் மாடிப்படியின் வழியாகக் கீழே இறங்கி வந்ததால் லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. கீழ்ப் பகுதிக்கு வந்த பிறகே பல தாய்மார்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.
Also Read: America-வில் போராட்டத் தீ... பயந்துவிட்டாரா Trump? | Elangovan Explains #ICantBreathe #GeorgeFloyd
அப்போது ஒரு தாய், ``எனக்கு எதுவானாலும் பரவாயில்லை. என் பிள்ளைக்கு ஒண்ணுன்னா என்னால் தாங்கவே முடியாது’’ என அதிர்ச்சி விலகாமல், கண்கள் கலங்க பேசிக்கொண்டிருந்தார். தீப்பிடித்துவிட்டது என அறிந்த உடனேயே அங்கு பணியிலிருந்த சில ஊழியர்கள் முதலில் வெளியே ஓடி வந்ததால்தான் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டது. சிறிய விபத்துதான் என்றாலும் எங்களுக்குள் பெரிய பயத்தை உண்டாக்கிவிட்டது.
இந்தப் புதிய கட்டடத்துக்கான பணிகள் அவசரம் கருதி வேகமாகச் செய்யப்பட்டு வருவதாக ஏற்கெனவே புகார் எழுந்தது. அத்துடன் மின் வசிதிக்கான பணிகள் முறையாக முழுமையாகச் செய்யப்படவில்லை. இதனால்தான் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. உடனே நிலைமையை சரி செய்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இல்லையென்றால் என்னவாகியிருக்கும் என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்தக் கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்'' என்றனர்.
source https://www.vikatan.com/news/accident/mild-fire-accident-in-tanjore-government-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக