கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பயன்படுத்திய பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டுமா? அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்ட அறையை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்? எதையெல்லாம் சுத்தப்படுத்த வேண்டும்?
- கௌதம் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.
``கோவிட் தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் பயன்படுத்திய பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றைத் தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவற்றை நிச்சயம் முறையாகச் சுத்தம் செய்துதான் மறுபடி பயன்படுத்த வேண்டும்.
குணமானவர்கள் பயன்படுத்திய துணிகள் உட்பட அனைத்தையும் மற்றவர்களின் துணிகள், தலையணை உறை, படுக்கை விரிப்பு போன்றவற்றுடன் கலக்காமல் தனியே துவைக்க வேண்டும். வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் டிடெர்ஜென்ட் கொண்டே துவைக்கலாம். துவைத்தவற்றை நல்ல வெயிலில் காயவைத்து எடுத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்ட அறையையும் சுத்தப்படுத்த வேண்டும். முதல் வேலையாக அந்த அறையின் ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை வெளிச்சமும் காற்றோட்டமும் வரும்படி நன்றாகத் திறந்து வைக்க வேண்டும். மிக முக்கியமாக அவர்கள் பயன்படுத்திய குளியலறை, கழிவறைகளை வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் எச்சில் பட்ட இடங்கள், அதாவது வாஷ்பேசின் போன்றவற்றையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
Also Read: Covid Questions: பல வருடங்களாக பாரம்பர்ய வாழ்க்கைமுறை; எங்களுக்கும் தடுப்பூசி தேவையா?
கோவிட் தொற்றாளர்கள் தொடும் இடங்களிலிருந்து மற்றவர்களுக்கும் தொற்று பரவுமா என்பது குறித்துப் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பரவ வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நிச்சயம் பரவும் என்பதற்கான 100 சதவிகித ஆதாரங்கள் இல்லை. எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது பாதுகாப்பானது."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/should-the-things-used-by-covid-patients-to-be-disposed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக