Ad

திங்கள், 20 செப்டம்பர், 2021

தயாரிக்கப்படாத பாம்புக்கடி மருந்து; ₹16.77 கோடியை வீணாக்கிய அதிமுக அரசு!

உலக அளவில் பாம்புக்கடி மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பாம்புக்கடி மரணங்களைத் தடுப்பதற்கான முயற்சியில் பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவர்களும் ஆய்வாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஆபத்தான பிரச்னை என்றாலும், இது தவிர்க்கப்படக்கூடிய ஒன்றுதான். 2014-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 63,236 பேர் பாம்புக்கடிக்கு ஆளாகியுள்ளார்கள். அதில், 241 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்கிறது 2020-ம் ஆண்டுக்கான தணிக்கைத்துறையின் அறிக்கை (CAG Report). இதை எதிர்கொள்வதற்கு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதும் உரிய நஞ்சு முறிவு மருந்துகளைத் தயாராக வைத்திருப்பதும் முக்கியம்.

கண்ணாடி விரியன் (Russell's viper), வீரியமிக்க நஞ்சுள்ள பாம்பு வகை

இந்நிலையில், கிண்டியில் அமைந்துள்ள கிங் நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மையத்தில் பாம்புக்கடிக்கான மருந்து தயாரிப்பதற்கான ஆய்வுகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்யாமல், கட்டடத்தை மட்டும் மாற்றியமைத்து, முந்தைய அ.தி.மு.க அரசு அதற்கு 16.77 கோடி ரூபாய் பயனற்ற செலவைச் செய்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறியுள்ளது. இந்த நிறுவனம் ஆங்கிலேயே ஆட்சியின்போது, 1899-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இங்கு சின்னம்மை, டெங்கு, சிக்கன்குன்யா உட்பட பல நோய்கள் குறித்த ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பாம்புக்கடிக்கான நஞ்சுமுறி மருந்து தயாரிக்கும் ஒரே அரசு நிறுவனம் இதுதான். 1982-ம் ஆண்டிலிருந்து இங்கு நஞ்சுமுறி மருந்து தயாரிக்கப்பட்டு, பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. கிங் நிறுவனத்தில் பாம்புக்கடிக்கான நஞ்சுமுறி மருந்துகளைத் தயாரிப்பதற்கான லைசென்ஸ், 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. அதற்குப் பிறகு, சரியான தயாரிப்பு முறைகளுக்கான (Good Manufacturing Practices norms) விதிகளின்படி, மீண்டும் அந்த உரிமத்தைப் புதுப்பிக்க முடியவில்லை. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, 2001, 2004 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் கிங் நிறுவனத்தின் நஞ்சுமுறி மருந்து துறையை ஆய்வு செய்தபோது, அதன் தயாரிப்புப் பிரிவுகள் தயாரிப்பு விதிகளின்படி இல்லையென்று குறிப்பிட்டது.

பாம்பு (Representational Image)

Also Read: விஷவாயுக்களை அளவு மீறி உமிழும் தொழிற்சாலைகள்; அடுத்த போபாலாக மாறும் வடசென்னை; கவனிக்குமா தமிழக அரசு?

அதோடு, மீண்டும் உரிமத்தைப் புதுப்பித்து பாம்புக்கடி நஞ்சுமுறி மருந்து தயாரிப்பில் கிங் நிறுவனம் ஈடுபட வேண்டுமெனில், அதற்கு, புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியது. அந்த வழிகாட்டுதலைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு (Directorate of Medical Education) மார்ச் 2007, ஜூன் 2008 மற்றும் ஜூன் 2019 ஆகிய ஆண்டுகளில், இருக்கின்ற நஞ்சுமுறி மருந்து தயாரிப்பு கட்டமைப்பை, மருந்து தயாரிப்பு விதிகளின்படி மேம்படுத்துவதற்கான முன்மொழிதலை வழங்கியது. பிப்ரவரி 2010-ம் ஆண்டு, கிங் நோய்த் தடுப்பு மருந்து ஆய்வு மையத்தின் முன்மொழிதலை இறுதிப்படுத்தி, தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையின்படி, இருக்கிற நஞ்சுமுறி மருந்து தயாரிப்பு நிலையத்தை மேம்படுத்த ஆகும் செலவு 4.71 கோடி. பொதுப்பணித்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து, ஜூன் 2011-ம் ஆண்டில் பழைய கட்டடத்தை மேம்படுத்துவதைவிட, புதிய கட்டடத்தைக் கட்டுவதே சரியென்று தெரிவித்தது. அதன் அடிப்படையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மார்ச் 2012-ல் மதிப்பீடு செய்து, இறுதியில் மருந்து தயாரிப்பு விதிமுறைகளின் அடிப்படையிலான புதியதாக நஞ்சுமுறி மருந்து தயாரிப்பு நிலையம் அமைப்பதற்கான செலவு மற்றும் திட்டத்தைச் சமர்ப்பித்தனர். அதோடு, பழைய கட்டடத்தைச் செப்பனிட்டு, தரக் கட்டுப்பாடு மற்றும் உறுதி செய்தல் மையமாக மாற்றலாம் என்றும் பரிந்துரைத்தனர்.

பாம்புக்கடி நஞ்சுமுறி மருந்து தயாரிப்புக்காக கட்டப்பட்ட கட்டடம்

இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வி இயக்குநரகம், இந்தத் திட்டத்தை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப் பரிந்துரைத்தது. முதல் கட்டத்தில், நஞ்சுமுறி மருந்து உற்பத்திக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில், மருந்து உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள், மருந்து, வேதிமம் போன்றவற்றை வாங்க வேண்டும். இந்தப் பரிந்துரையை அப்போதைய அரசும் ஏற்றுக்கொண்டது. இந்தத் திட்டத்தின் முடிவில், உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்களுக்கு உட்பட்ட, சிறப்பான உற்பத்தி நிலையமாக இருப்பதோடு, இங்கு ஆரம்பக்கட்டத்திலேயே ஆண்டுக்கு இரண்டு லட்சம் நஞ்சுமுறி மருந்துக் குப்பிகள் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து, தணிக்கைத் துறையின் அறிக்கையில், ``இந்த இறுதிப்படுத்தப்பட்ட திட்டத்தின்படி, முதல் கட்ட வேலைகளுக்காக 17.35 கோடி ரூபாய் நிதியை 2012-ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2014-ம் ஆண்டு டிசம்பரில் ஒதுக்கீடு செய்து கட்டுமான வேலைகளை முன்னெடுத்தது. ஆகஸ்ட் 2013-ம் ஆண்டு வேலைகள் தொடங்கப் பட்டன. கட்டுமான வேலைகள் முடிந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதியன்று அப்போதைய முதல்வர் திறந்து வைத்த பிறகு, கிங் நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மையத்திடம் 2017 ஜூன் மாதம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு ஆன செலவு 16.77 கோடி ரூபாய்.

முதல்கட்ட வேலைகள் முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட வேலைகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், மருத்துவக் கல்வி இயக்குநரகமோ, கிங் நோய்த் தடுப்பு மருந்து ஆய்வு மையமோ, அதற்கான தொழில்நுட்பம் மற்றும் நிதி சார்ந்த சாத்தியக்கூறு பற்றிய அந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. அவர்களிடம் இரண்டாம் கட்ட திட்டத்துக்கான உரிய திட்ட அறிக்கையே இல்லை. ஆகையால், அதற்கான திட்ட முன்மொழிதல் மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட திட்டத்துக்கான முன்மொழிதல்கள்

அறிக்கைப்படி, ஜூன் 2012-ம் ஆண்டு உபகரணங்கள், குதிரைகள், நஞ்சு மற்றும் இதர வேதிமங்கள், கணினி ஆகியவை வாங்குவதற்கு 7.44 கோடி மதிப்புக்கு முன்மொழிதல் வழங்கப்பட்டது.

ஜூன் 2013-ம் ஆண்டில், மேற்கூறியவற்றோடு கூடுதலாக, ஊழியர்கள், மின்சார வேலைகள், பயிற்சியளித்தல், ஆய்வுக்கூடத்திற்கான கண்ணாடிப் பொருட்கள் போன்றவற்றையும் இணைத்து, 36.90 கோடி ரூபாய் மதிப்பில் முன்மொழிதல் வழங்கப்பட்டது.

பின்னர், பிப்ரவர் 2014-ம் ஆண்டில், தரக் கட்டுப்பாடு மற்றும் உறுதி செய்வதற்கான உபகரணங்கள், ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஆய்வுக்கூடம், கூடுதலாக 300 குதிரைகள், புதிய நஞ்சுமுறி மருந்து தயாரிப்பு கட்டடத்திற்கான கூடுதல் வசதிகள் போன்றவற்றையும் இணைத்து, 62.37 கோடி ரூபாய்க்கு முன்மொழிதல் வழங்கப்பட்டது.

இப்படி, தமிழ்நாடு அரசு, மருத்துக் கல்வி இயக்குநரகம், கிங் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையிலான பல்வேறு கட்ட கலந்துரையாடல்கள் நடந்த பிறகு, 2014-ம் ஆண்டு மே மாதம், திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கான முன்மொழிதலுக்கு, தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் (National Health Mission) நிதி ஒதுக்கப்பட்டது. இறுதியில், திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகளுக்காக 56.28 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. ஆனால், மேற்கொண்டு நடத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி, அதற்கான முன்மொழிதலை ஜனவரி 2016-ம் ஆண்டு முழுமையாக இல்லையென்று மீண்டும் திருப்பி அனுப்பியது. அதற்குப் பிறகு, மருத்துவக் கல்வி இயக்குநரகமோ கிங் ஆராய்ச்சி நிறுவனமோ அதைக் கொண்டு செல்லவில்லை.

அதேநேரத்தில், தமிழ்நாடு மருத்துவ சேவை கார்ப்பரேஷன், தமிழ்நாடு மருத்துவ அமைப்பு சீர்திருத்தத் திட்டம் ஆகியவற்றிடமும் நிதியுதவி பெறுவதற்கான முயற்சிகளில் கிங் ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டது. ஆனால், அவை எதுவுமே நிதியுதவி அளிப்பதற்கு முன்வரவில்லை. ஏப்ரல் 2019-ல் சுகாதாரத் துறை தலைவர், இந்தத் திட்டத்தை, செலவுகளைக் குறைத்து, மீண்டும் புதியதாக முன்மொழிய வேண்டுமென்று தமிழ்நாடு மருத்துவ சேவை கார்ப்பரேஷனிடம் வலியுறுத்தினார். ஆனால், இந்தத் திட்டம் முழுமையாக இல்லையென்று அந்த அமைப்பு கூறிவிட்டது.

Anamalai's wood snake

Also Read: விஷவாயுக்களை அளவு மீறி உமிழும் தொழிற்சாலைகள்; அடுத்த போபாலாக மாறும் வடசென்னை; கவனிக்குமா தமிழக அரசு?

தமிழ்நாடு மருத்துவ சேவை கார்ப்பரேஷன் தனியார் விநியோகஸ்தர்களிடமிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 1.7 லட்சம் நஞ்சுமுறி மருந்து குப்பிகளை வாங்குகின்றன. 10 மில்லி மருந்து இருக்கும் ஒரு குப்பியின் சராசரி விலை 308.59 ரூபாய். கிங் ஆராய்ச்சி நிறுவனத்துக்கான நஞ்சுமுறி மருந்து உற்பத்திக் கட்டமைப்பு திட்டத்தில், அதே குப்பியின் விலை 23.90 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தணிக்கைத்துறையின் ஆய்வில், செலவுகளை சரியாகக் கணக்கிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இந்தத் திட்டத்தின் சாத்தியக் கூறுகளை அறிவியல்பூர்வமாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு அரசு மதிப்பீடு செய்யவில்லை என்றும் கூறியதோடு, இதே திட்டத்தின் முதல் கட்டமாகக் கட்டப்பட்ட கட்டடத்துக்கு ஆன 16.77 கோடி ரூபாய் செலவு எந்தவித பலனையும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

ஒரு திட்டத்தின் சாத்தியக்கூறுகளை முழுமையாக ஆராயாமல், அதற்கு நிதி ஒதுக்கி செலவு செய்து ஒரு கட்டடத்தைக் கட்டி, 16.77 கோடி ரூபாயை முந்தைய அரசு வீணடித்துள்ளதாக தணிக்கைத்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், இதுகுறித்த விசாரணையை முன்னெடுத்து, இதில் உரிய முடிவை இப்போதைய தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/environment/cag-report-exposed-that-admk-govt-wasted-1677-crores-in-antivenom-research

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக