“முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக...” பாடலைப் பாடியபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “பாட்டெல்லாம் பலமாக இருக்கிறதே!” என்றபடி சுடச்சுட இஞ்சி டீயை நீட்டினோம். பதிலேதும் சொல்லாமல் டீயை ருசித்தபடியே செய்திகளை விவரிக்கத் தொடங்கினார் கழுகார்.
“செப்டம்பர் 16-ம் தேதி அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமணம் நடைபெற்றது அல்லவா... முதல்நாள் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கி திருமணம் முடியும்வரை கூடவே இருந்த சசிகலா, ‘எப்படியும் என் தம்பி திவாகரன் வந்துவிடுவார்; பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும்’ என்று ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், திவாகரன் வரவேயில்லை.”
“திவாகரன் தரப்பில் என்ன காரணம் சொல்கிறார்கள்?”
“சில மாதங்களுக்கு முன்பு திவாகரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்தபோது சசிகலாவோ, தினகரனோ வந்து நலம் விசாரிக்கவில்லை. அந்தக் கோபம்தான் காரணம் என்கிறார்கள். திருமணம் நடந்த அதே செப்டம்பர் 16-ம் தேதி திவாகரன் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் எம்.எல்.ஏ-வுமான காமராஜுடன் மன்னார்குடி அருகே சேரன்குளத்திலிருக்கும் ஆள்காட்டியம்மன் உடனுறை மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டிருக்கிறார். விழாவில் இருவரும் மனம்விட்டு சில மணி நேரங்கள் பேசியதாகவும் சொல்கிறார்கள்.”
“ஓ... பாட்டுக்கு இதுதான் காரணமோ... இருக்கட்டும். சீற்றத்தில் இருக்கிறதாமே சித்தரஞ்சன் சாலை?”
“நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்துகொள்ளாததற்கு அவர் கொடுத்த விளக்கம் ஏற்கெனவே சர்ச்சையானது. அதைப் பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ‘தன்னை ஓர் அரசியல்வாதியாக அவர் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடாது. ஜி.எஸ்.டி கூட்டத்தில் அவர் பங்கேற்றிருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். ஆனால், அவர் சொன்ன அறிவுரைக்கு நேர்மாறாக நடந்திருக்கிறது.”
“என்னவாம்!”
“இளங்கோவன் பேட்டி வெளியானதும், தனது ட்விட்டர் பக்கத்தில் பழனிவேல் தியாகராஜன் யாரையோ குறிப்பிடுவதுபோல, ‘இருமுறை கட்சிப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்ட அந்த முட்டாள் கிழவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் இரண்டு கிலோ இறாலுக்கு விலைபோய்விடுவார் என்பதுதான்’ என்று பதிவிட்டார். சில நிமிடங்கள் கட்சிக்குள் கலகம் வெடித்தது. ‘சீனியர்களை மதிக்கத் தெரியாதா... பரம்பரை கெளரவத் திமிரில் இப்படியா பேசுவது?’ என்றெல்லாம் மூத்த நிர்வாகிகள் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிட்டார் நிதியமைச்சர். ஆனால், அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஸ்டாலினிடம் ஒப்படைத்திருக்கிறது இளங்கோவன் தரப்பு. இதைப் பார்த்து கடும் டென்ஷனான ஸ்டாலின், ‘அவர்கிட்ட எத்தனை தடவைதான் சொல்றது... நான் திரும்பவும் பேசறேன்’ என்று இளங்கோவன் தரப்புக்கு ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்கிறார்.”
“எல்லாம் சரி... பழனிவேல் பற்றி இளங்கோவன் ஏன் பேச வேண்டும்?”
“தமிழக அரசுக்கு எதிராகச் சில அஸ்திரங்களை கையில் எடுக்க முடிவெடுத்திருக்கிறதாம் மத்திய அரசு. இந்த விவரங்களைத் தனது டெல்லி லாபி மூலம் அறிந்த இளங்கோவன், முதல்வர் மற்றும் நிதியமைச்சர் தரப்பிடம், ‘மத்திய அரசை இப்போதைக்குச் சீண்ட வேண்டாம்; நம் அமைச்சர்கள் மீதான பழைய வழக்குகளை மத்திய அரசு தோண்டுவதற்குக் காரணம் அதுதான்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், தனது பேச்சைக் கேட்காமல் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து மத்திய நிதியமைச்சரை விமர்சிப்பது இளங்கோவனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே பேட்டியில் நாசுக்காக நிதியமைச்சருக்கு அவர் அறிவுரை கூறினாராம்!”
“தி.மு.க மீதான பிடி இறுகுகிறது என்று சொல்லும்!”
“திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுடன் செப்டம்பர் 23-ம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் ஜெயலலிதாவிடம் முன்பு எவ்வளவு பணிவு காட்டினார்களோ... அதே பணிவையும் குனிவையும் எடப்பாடிக்கும் காட்டியிருக்கிறார்கள். அதிலும், எடப்பாடியுடன் சக அமைச்சர்களாகப் பதவிவகித்த சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் எடப்பாடியின் காலில் விழுந்து வணங்கியதுதான் ஆச்சர்யம்!”
“அ.தி.மு.க-வில் அப்படி விழாமல் இருந்தால்தானே ஆச்சர்யம்... அது சரி, ஹெராயின் கடத்தல் விவகாரம் பெரிதாகப் பேசப்படுகிறதே?”
“ஆமாம்... குஜராத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் பிடிப்பட்ட சென்னையைச் சேர்ந்த மச்சாவரம் சுதாகர், அவரின் மனைவியிடம் வருவாய் புலனாய்வுத்துறை விசாரித்துவருகிறது. இவர்கள் தவிர வேறு சிலரிடமும் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். ஆப்கானிஸ் தான் தாலிபன்கள் வசம் போனதும், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் அவசர அவசரமாக டெலிவரி செய்யப்படுகின்றன என்கிறது வருவாய் புலனாய்வுத்துறை வட்டாரம். கடல் மார்க்கமாக இந்தியாவின் குஜராத்திலிருக்கும் அதானிக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்துக்கு ஹெராயினை சர்வதேசக் கடத்தல் கும்பல் அனுப்பியிருக்கிறது. அங்கிருந்து தரை மார்க்கமாக தமிழகம்... இங்கிருந்து கடல் மார்க்கமாக லங்கா. அப்படியே பல்வேறு நாடுகளுக்குக் கடத்துவதுதான் திட்டமாம். கடந்த ஏப்ரலில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு பிரேசிலிருந்து வந்த கப்பலில் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்ன் பிடிபட்டது. அதே கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் குஜராத் துறைமுகத்திலும் சிக்கியிருக்கிறார்கள்.”
“அவர்கள் சிக்கி என்ன செய்ய... தமிழகத்தில் மத்திய போதைக் கடத்தல் தடுப்பு புலனாய்வுப் பிரிவே தடுமாற்றத்தில் இருக்கிறதாமே?”
“ஆமாம். போதைப்பொருள் கடத்தலை கண்காணிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு இயக்ககம் (என்.சி.பி) இயங்குகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களை கவனிக்க சென்னையில் அதன் மண்டல அலுவலகம் இயங்குகிறது. ஆனால், இணை இயக்குநர் அந்தஸ்தில் இருந்த அதிகாரி மாறுதலாகி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. அந்த இடம் நிரப்பப்படவே இல்லை. பெங்களூரிலுள்ள அதிகாரிதான் கூடுதல் பொறுப்பாக சென்னை மண்டலத்தையும் கவனிக்கிறார். அவருக்கு அடுத்த அந்தஸ்தில் உதவி இயக்குநராக இருந்தவர் மாற்றப்பட்டும் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. 32 இன்ஸ்பெக்டர் இருக்கவேண்டிய இடத்தில் ஆறு பேர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களும் நீதிமன்றப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பார்க்கவேண்டியிருப்பதால், ஃபீல்டில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்களாம். இவர்களால் எங்கே போதைப்பொருள் கடத்தல் குறித்து முன்கூட்டியே தகவல் சேகரிக்க முடியும்? இவையெல்லாமும்கூட கடத்தல் கும்பலின் கைங்கர்யம்தான் என்று கூறப்படுகிறது. அதனால்தான் கேப்டன் இல்லாத கப்பலாகத் தள்ளாடுகிறது இந்தத் துறை!” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.
கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!
* தென்மாவட்ட மீசைக்கார அமைச்சரின் துறையில் நடக்கும் அனைத்து டீலிங்குகளும் அவரின் சம்பந்தியின் கண்ணசைவிலேயே நடக்கின்றனவாம். சம்பந்தியோ, ‘பெரிய பெரிய’ பாக்ஸ்களாக எதிர்பார்ப்பதால் செனடாப் சாலைக்கு ஓலை அனுப்பியிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்!
* காகித ஆலைக்குக் கரியை இறக்குமதி செய்த வகையில் மெகா ஊழலில் சிக்கியிருக்கிறார் வடமாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர். கடந்த ஆட்சியில் இதையே ‘தொழிலாக’ச் செய்துவந்தாராம் அவர். அடுத்த ரெய்டுக்கு தயாராகிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
* பிரதான கட்சியின் பொதுச்செயலாளர் தொடர்புடைய வழக்கில் முன்னவருக்கு ஆதரவாகக் காய்நகர்த்துகிறார் டெல்லிக்கு வேண்டப்பட்ட முன்னாள் நீதிப்புள்ளி ஒருவர். இவரது ‘சதாய்ப்பு’ தாங்காமல் புலம்புகிறது நீதிமன்ற வட்டாரம்!
ரெய்டுக்குக் காரணம் அமைச்சர்?
செப்டம்பர் 23-ம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது. இதற்குக் காரணம், அவர் தனது துறையின் அமைச்சருடன் மல்லுக்கட்டியதுதானாம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் வாரியத் தலைவர் பதவியில் வெங்கடாசலம் நீடித்துவந்த நிலையில், அந்தப் பதவிக்குப் புதியவரை நியமிக்க அமைச்சர் தரப்பு காய்நகர்த்தியதாம். தொடர்ந்து அமைச்சருக்கு எதிராகச் சில விவகாரங்களை வெங்கடாசலம் தரப்பு கையில் எடுத்தது என்கிறார்கள். இதையடுத்தே வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்று ரெய்டு நடந்திருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-september-29th-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக