பிரபல கார்ட்டூனிஸ்ட் மதி 30 ஆண்டுகளுக்கு மேலாக அச்சு ஊடகத்தில் தடம் பதித்தவர். இந்நிலையில், மதியின் இணையதள தொடக்க விழா கோவையில் நடந்தது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன், மருத்துவர் கு.சிவராமன், 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி, ஓவியர் மணியம் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மதி வரைந்த கார்ட்டூன்களை வெளியிட்டு அதுகுறித்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
எழுத்தாளர் நாஞ்சின் நாடன், "ஒரு கார்ட்டூன் என்பது பாம்பு மாதிரி விஷத்தன்மையுடன் கடிக்க வேண்டும். ஆள்களை கொல்லும் விஷமாக இல்லாமல், அவர்களைத் திருத்தும் விஷமாக இருக்க வேண்டும்" என்று பேசினார். மருத்துவர் கு. சிவராமன், "பெரிய பெரிய இதிகாசங்கள் செய்யாததை கூட சிறிய படங்களும் கார்ட்டூன்களும் சாதித்துவிடும்" என்றார்.
Also Read: “ஆற்றுக்கு அருகில் வசித்தும் நல்ல தண்ணீர் தர நாதியில்லை!”
நடிகர் சிவகார்த்திகேயன், "மரம் நட வேண்டும் என்று பேசும்போது அதை நாம் கண்டுகொள்ளாமல்தான் இருந்தோம். அதன் பலனை தற்போது அனுபவித்து வருகிறோம். 2001-ம் ஆண்டு முதல் 2003 வரை என் அப்பா கோவையில் வேலை செய்தார். அப்போது திருச்சியில் இருந்து நான் இங்கு வரும்போது ஃபேன் போடவே மாட்டோம். திருச்சி பயங்கரமாகச் சுடும். கோயம்புத்தூர் சிலுசிலுவென இருக்கும். விடுமுறை கிடைத்து எப்போது இங்கு வருவோம் என்றுதான் யோசிப்பேன்.
அதே கோயம்புத்தூருக்கு இப்போது ஷூட்டிங் வரும்போது வெயில் அதிகமாக இருக்கிறது. ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை. அதே நிலைதான் தண்ணீருக்கும். குளிப்பதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு என்று தனித் தனியாகத் தண்ணீரைப் பிரித்து எப்போதோ அது வணிகமாகிவிட்டது.
வணிகமானதால் தண்ணீர் பற்றாக்குறையா, தண்ணீர் பற்றாக்குறையால் வணிகமானதா எனத் தெரியவில்லை. அந்த அரசியலுக்குள் நான் போக விரும்பவில்லை. நம் அடுத்தத் தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால், அதை இந்தத் தலைமுறையில் சரிசெய்ய வேண்டும். தண்ணீர் வீணாவதைத் தவிர்த்தாலே பெருமளவு சேமிக்க முடியும். பணம் சம்பாதித்து என்ன செய்யப் போகிறோம் அல்லது சம்பாதிப்பதை வைத்து தண்ணீர் வாங்கப் போகிறோமா எனத் தெரியவில்லை.
அம்மா, அக்கா, மனைவி, மகள் எனப் பெண்களால் சூழப்பட்ட உலகில் வளர்க்கப்பட்டவன் நான். எனக்கு 17 வயது இருந்தபோது அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என்னை சுற்றி அந்த 4 பெண்கள்தான் உள்ளனர். தேவதைகளோடு வாழும் சந்தோஷம்தான் இருக்கிறது. உண்மையான பாசம், அன்பு, எதிர்பார்ப்பு இல்லாத அன்பை அவர்களிடம் கற்றுக் கொண்டேன்.
Also Read: `பாண்டியன் ஸ்டோர்ஸ்'-ல் நடித்த விக்ராந்த்தின் அம்மா... திடீரென சீரியலில் இருந்து தூக்கப்பட்டது ஏன்?
வீட்டுக்கும் நாட்டுக்கும் பெண்கள் முக்கியம். பெண்கள் மீதான சமுதாய பார்வை மாற வேண்டும். பெண்கள் பார்வையில் இந்த உலகம் அழகாக மாறுவது, ஆண்கள் கையில்தான் இருக்கிறது. என் பையன் வளரும்போது அவன் எப்படி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இன்னும் அழகாகச் சொல்லித் தர வேண்டும். என்னை விட என் பையனை நல்லவனாக வளர்க்க ஆசைப்படுகிறேன்" என்றார்.
கடைசியாக பேசிய கார்ட்டூனிஸ்ட் மதி, "கார்ட்டூனிஸ்ட் என்றாலே அரசியல் மட்டும்தான் வரைய வேண்டும் என்பதை எழுதப்படாத விதியாக நினைக்கின்றனர். ஆனால், கார்ட்டூனிஸ்ட் என்பவன் பொது மக்களின் பிரதிநிதி. அந்த முறையில்தான் நான் பிரச்னைகளைப் பார்க்கிறேன்" என்றார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், "ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பத்திரமாக பார்க்கும் நிலை வரக்கூடாது. குடிக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது வணிகம்தான். ஆனால், அது பெரிய வணிகமாகக் கூடாது. 'டாக்டர்' திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. என் படம் ஒடிடியில் வெளியாகாமல் திரையரங்குகளில் வெளியாவது சந்தோஷம்.
அதே சமயம், ஓடிடியில் படம் வெளியாவதால் எல்லா மொழிகளிலும் வெளியிட எளிதாக உள்ளது. படத்தை வெளியிடுவது குறித்து நடிகர்கள் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. படம் வெளியே வருவது கஷ்டமாக இருந்தது. தற்போது வெளியே வரும் படங்களை வியாபாரம் செய்வது கஷ்டமாக உள்ளது. படம் ரிலீஸானால்தான் அதை நம்பியுள்ளவர்களின் வேலை நடக்கும்.
Also Read: சூர்யாவுடன் `நேருக்கு நேர்' மோதும் இயக்குநர் ஹரி... நீண்டுகொண்டே போகும் `அருவா' பிரச்னை!
'நாய் சேகர்' படம் ஷூட்டிங் முடிந்து ரெடியாகி விட்டது. அந்த டைட்டிலை வைத்து படம் முழுக்க எடுத்துள்ளனர். சதீஷ் ஹீரோவாக நடிப்பதால் பெரிய டைட்டில் தேவைப்படுகிறது. இதுகுறித்து நடிகர் வடிவேலுவிடம் சதீஷ் பேசியுள்ளார். வேறு டைட்டில் வைப்பதாக வடிவேலு சொல்லியுள்ளார்.
வடிவேலுக்கு எந்த டைட்டில் வைத்தாலும் பயங்கரமாகத்தான் இருக்கும். தமிழில் படத்தின் டைட்டில் வைப்பது நல்லது. நானும் தமிழில் டைட்டில் வைக்கச் சொல்கிறேன்” என்றார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-sivakarthikeyan-spoke-about-water-business-in-coimbatore-event
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக