Ad

திங்கள், 20 செப்டம்பர், 2021

உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்! - இயக்குநரக உத்தரவின் பின்னணி என்ன?

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மூன்று ஆண்டு சிறப்பு மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் வருடத்திற்கு 300-க்கும் அதிகமான மாணவர்கள் படித்துவருகிறார்கள். இதில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் மூன்று ஆண்டு படிப்பு முடித்ததுமே, அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றவேண்டும் என்பது விதியாகும். இந்த விதிகளை மீறிய, பணிகளில் சேர விருப்பம் இல்லாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் 50 லட்சம் ரூபாய் வசூலிக்கத் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கும், சமீபத்தில் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது.

மருத்துவ கல்வி இயக்குநரகம்

தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் உள்ளது. இந்த மூன்று வருடப் படிப்பைப் படித்து முடித்ததும், இரண்டு வருடம் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி செய்யவேண்டும். அந்த இரண்டு வருடம் பணிசெய்ய விரும்பாதவர்கள் மற்றும் இடைநிற்கும் மாணவர்கள் அரசுக்கு ஒரு குறிப்பிடாத தொகையைத் தரவேண்டும். இதற்காகப் படிப்பில் சேரும்போதே பத்திர தொகை கூறப்பட்டு, பிணையமாக மூன்று நபர்களின் விவரங்கள் பெறப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த முறை கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. ஒரு மாநில அரசு ஒரு மாணவருக்காகக் குறிப்பிடத் தொகையைச் செலவு செய்து அவர்களுக்குக் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியைத் தருகிறது. அந்த அரசுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வருடம் பணி செய்யவேண்டும். அப்படிப் பணி செய்ய விருப்பம் இல்லாத மாணவர்கள் அந்த பத்திரத்தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்பது விதி.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதன்படி, ``தகுதியற்ற நபர்களுக்கு அல்ல, வேலைக்கு மிகவும் பொருத்தமானவர்களுக்கு அரசு பணம் செலவழிகிறது. மாணவர்கள் அரசு மருத்துவமனையில் பணி செய்வது அநியாயமோ, எதிரானதோ கிடையாது. அகில இந்திய ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு வருடம் அரசு மருத்துவமனையில் பணியாற்றவேண்டும்" என்று கூறியிருந்தது. கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் பல்வேறு உயர் சிறப்பு மருத்துவ பிரிவில் படிப்பை முடிந்த மாணவர்கள் பலர், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவில்லை. தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் காலியிடங்கள் இருந்த நிலையிலும் சமீபத்தில் நடந்து முடிந்த கலந்தாய்வில் அவர்கள் பணிக்குச் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை. பணிக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்களைக் கண்டறிந்து அவரிடம் இருந்து பத்திர தொகையை வசூல் செய்ய மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபுவிடம் பேசியபோது, ``மாணவர்கள் படிப்பில் சேரும்போதே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுத் தான் சேருகிறார்கள். படிப்பை முடிக்கும் தறுவாயில் வேலைக்கான ஆணை கொடுக்கும் போதும், வேலை செய்யாத நபர்களிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பத்திர தொகையானது வசூல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு வருடம் பணியாற்றவேண்டும் என்று கூறியுள்ளது. இந்த உத்தரவை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களிடம் பணம் பெறுவது எங்கள் நோக்கம் இல்லை. கடந்த ஆண்டு வரை பத்திர தொகை 2 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது நாங்கள் அந்த தொகையை 50 லட்சம் ரூபாயாகக் குறைத்துள்ளோம்" என்றார்.

Also Read: `ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி; நிறைவேற உதவுவாரா உதயநிதி?' - காத்திருக்கும் மருத்துவர்கள்!

இது தொடர்பாக தற்போது உயர் சிறப்பு மருத்துவ படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். தற்போது அரசு மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருப்பதால் அவரின் பெயரை வெளியிடவில்லை. ``2017-ம் ஆண்டுக்கு முன்புவரை உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான் அதிகம் பேர் படிப்பார்கள். அகில இந்திய ஒதுக்கீட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பத் தொடங்கியதிலிருந்தே, தமிழகத்திலிருந்து சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அரசு இரண்டு வருடம் தானே வேலைபார்க்கச் சொல்கிறது. அதைச் செய்ய என்ன கஷ்டம் என்று எல்லோரும் நினைக்கலாம். உண்மையில் பல்வேறு கஷ்டங்கள் உள்ளது. சிறப்புப் பிரிவு மருத்துவர்களுக்கு பொதுப் பிரிவு மருத்துவராகப் பணி ஒதுக்கப்படும். ஒரு மாணவர் உயர் சிறப்பு மருத்துவ படிப்பைப் படித்துவிட்டு பொது மருத்துவராக பணியாற்றினால் அது எப்படி நியாயமாகும். இரண்டாவது, அவர்கள் கேட்கும் மருத்துவமனையில் பணி கிடைக்கவே கிடைக்காது. மூன்றாவது மிகவும் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. உயர் சிறப்பு மருத்துவ படித்த மருத்துவர்கள் வெளியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றினால் குறைந்த பட்சம் மாதம் 1-2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். ஏதாவது தனித்துவமான அறுவை சிகிச்சை செய்தல் அதற்கு ஒரு தனிப்பட்ட தொகை கிடைக்கும்" என்றார்.

Doctor

மேலும், ``வெளி மாநிலத்தவர்கள் பலரும் படித்து முடித்ததுமே அவரவர் ஊருக்குச் சென்றுவிடுவார்கள். அங்கு இந்த இரண்டு வருடமும் கோர்ஸ் கம்ப்ளீட் சர்டிபிகேட்டை வைத்து வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள். இரண்டு வருடம் கழித்து இங்கு வந்து எங்களுக்கு நீங்கள் பணி ஆணை வழங்கவில்லை என்று கூறி பட்டம் பெற்றுவிடுவார்கள். அப்படி நமது அரசு மறுக்கும் பட்சத்தில் அவர்கள் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. அந்த மாநில சட்ட திட்டங்களைப் பயன்படுத்தி எப்படியாவது வாங்கிவிடுகிறார்கள். உண்மையில் தற்போதுள்ள நிலை இது தான், மற்ற மாநிலங்களுக்கு உயர் சிறப்பு மருத்துவர்களைத் தமிழகத்தில் உருவாக்கி அவர்களின் மாநிலங்களுக்கே அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறோம். உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் முழுவதுமே அகில இந்திய இடங்கள் மூலம் தான் நிரப்பப்படுகிறது. கடந்த அரசு 50-50 சதவிகித இடங்களைப் பெறத் தவறிவிட்டது. இந்த அரசாவது அதை வலியுறுத்திப் பெற்றால் நமது மாநில மருத்துவ மாணவர்கள் பயனடைவார்கள்"என்றுக் கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/50-lakh-fine-for-high-specialty-medical-students-what-is-the-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக