பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு போடப்பட்ட ட்வீட் அரசியல் களத்தில் விவாதமாகி இருக்கிறது. ''கட்சியின் வளர்ச்சி கருதி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போகிறோம்'' என்கிற அறிவிப்பை, கடந்த 13-ம் தேதி பாமக தலைமை வெளியிட்டது. ஆனால், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பாமக - அதிமுக நிர்வாகிகள் மாவட்ட அளவில், இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தியதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில்தான், மருத்துவர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படியொரு செய்தியை பதிவேற்றியிருக்கிறார்.
பொதுவாக, மற்ற அனைத்துக் கட்சிகளைவிடவும் தலைமைக்குக் கட்டுப்பட்டு வேலை செய்வதிலும், தலைமை எடுக்கின்றன முடிவுகளை விசுவாசத்தோடு செயல்படுத்துவதிலும் தீவிரமாக இருப்பவர்கள் பாமக தொண்டர்கள். ஆனால், நாளை வேட்புமனுத்தாக்கல் முடிவடையும் நிலையில், அந்தக் கட்சியின் தலைமை எடுத்திருக்கின்ற முடிவுக்கு மாறாக, மாவட்ட அளவில் அதிமுக-வுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
பாமகவின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் 75 சதவிகிதத்துக்கும் மேலான நிர்வாகிகள், தனித்துப் போட்டியிடுவோம் என கருத்துத் தெரிவித்ததாலேயே இந்த முடிவை எடுத்தோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் (தனியார் தொலைக்காட்சி நேர்காணல்), அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால், ''தற்போது நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது, நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக பாமக தலைமை இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறதோ என சந்தேகம் எழுகிறது'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதுமட்டுமல்ல, '' கூட்டணி விஷயத்தில் பாமக தடுமாற்றத்துடன் இருப்பதையே சமீபத்திய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன'' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். அவர் இதுகுறித்து விரிவாகப் பேசும்போது,
``பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் ராமதாஸ் என்கிற ஒற்றை நபர் ஆளுமை செலுத்தக்கூடிய, ஒரு சமூகப் பின்னணியில் செயல்படக்கூடிய இயக்கம். அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களில் 99 சதவிகிதம் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், தலைமையின் முடிவுக்கு மாறாக சில நிகழ்வுகள் தற்போது அரங்கேறி வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை லோக்கல் அட்ஜெஸ்ட்மென்ட்கள் வழக்கமான ஒரு விஷயம்தான் என்றாலும், அது மறைமுகமாகவே நடக்கும். ஆனால், கட்சியின் தலைவர் மணியே அதை அமோதித்துப் பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ஜி.கே. மணியின் பேச்சுக்குப் பின்னால், அதிமுக இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
மாவட்ட அளவில் நடந்த பேச்சுவார்த்தையை, வெளியே லீக் செய்து, பாமக-வில் குழப்பம் இருப்பதைப் போன்ற பிம்பத்தை அதிமுக கட்டமைக்க நினைக்கிறது. காரணம், எடப்பாடி பழனிசாமியின் பலம், கட்சிக்குள் அவரின் பிடிமானம் என்பது பாமக-வுடனான உறவுதான். அது இல்லாமல்போனால், தாக்குப்பிடிப்பது கஷ்டம் என எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்கலாம். அதனால் இதுபோன்ற சில காய்களை நகர்த்தியிருக்கலாம். அதனால்தான், மருத்துவர் ராமதாஸ் உடனடியாக இதற்கு ரியாக்ட் செய்திருக்கிறார்'' என்கிறார் அவர்.
இந்தநிலையில், ''தற்போது பாமக-வில் நிலவிவரும் இந்தக் குழப்பத்தால் அந்தக் கட்சியின் வாக்குவங்கி இன்னும் சரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன'' என்கிறார், மூத்த பத்திரிகையாளர் பிரியன்.
அவர் இதுகுறித்து விரிவாகப் பேசும்போது,
``தனித்துப் போட்டி என பாமக தலைமை எடுத்தது மிகவும் சரியான முடிவு. உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரையில், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் பொறுப்புக்கு வர நினைப்பார்கள். தனித்துப் போட்டியிட்டால், அனைத்து இடங்களிலும் போட்டியிடலாம். கூட்டணி வைக்கும்போது,. அதிமுக மற்றும் பாஜகவுக்கு கூட்டணியில் பல இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், தேர்தல் நடக்கப்போகிற ஒன்பது மாவட்டங்களில், ஏழு மாவட்டங்களில் பாஜக-வுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வும் பெரியளவில் இந்தப் பகுதிகளில் வெற்றிபெறவில்லை. அதனால் தனித்துப் போட்டியிடுவதுதான் சரி. ஆனால், கீழ்மட்ட அளவில் சில மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படி லோக்கல் அன்டர்ஸ்டான்டிங்கின்படி கூட்டணி அமைந்தால், அது தோல்வியில் முடிவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன.
2019 நாடாளுமன்றத் தேர்தல், கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதைத்தான் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அதிமுக - பாமக இணைந்து போட்டியிட்டால், பட்டியல் சமூக வாக்குகள் அப்படியே திமுகவுக்குப் போகும். திமுக-வின் வெற்றியை மேலும் அதிகப்படுத்தும். பாமக தனித்துப் போட்டியிட்டால் கட்சியை வளர்க்கலாம். கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கலாம். தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துவிட்டால் அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் தொண்டர்கள் அர்பணிப்போடு வேலை செய்வார்கள். ஆனால், தலைமை கூட்டணி இல்லை என்றும் கீழ்மட்டத்தில் கூட்டணி என்பது கட்சி நிர்வாகிகளுக்கும் சரி, மக்களுக்கும் சரி குழப்பத்தையே ஏற்படுத்தும். தற்போது இருக்கின்ற வாக்குவங்கியையும் சேதப்படுத்தும்'' என்கிறார் அவர்.
இந்த சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது அதிமுகவா, செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்,
``அதிமுக, வெட்டவெளிச்சமாக எல்லா மக்களுக்கும் தெரிகின்ற வகையில்தான் கூட்டணி அமைக்கும், செயல்படும். தேர்தல் நேரங்களில் மற்ற கட்சிகளில் இருப்பவர்களை விலைக்கு வாங்கி, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் செயல்பட்டது கிடையாது. அதிமுக தலைவர்களும் அதுபோன்ற செயல்பாடுகளில் எப்போதும் ஈடுபட்டது கிடையாது. பாம.கவைச் சேர்ந்தவர்களில் ஒருசிலர், ஒருசில இடங்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றிபெறமுடியும் என நினைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் அதிமுக மீது குற்றம் சுமத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தது'' என்கிறார் அவர்.
இந்த விஷயங்கள் தொடர்பாக விளக்கம் கேட்க பா.ம.க நிர்வாகிகளைத் தொடர்புகொண்டோம், '' கூட்டணி குறித்து மருத்துவர் ஐயா ஏற்கெனவே தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டார். அதுதான் கட்சியின் நிலைப்பாடு'' என்பதோடு முடித்துவிட்டனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/pmk-story-about-local-body-elections-issues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக