ஏரோ மாடலிங், துப்பாக்கிச்சுடுதல், சைக்கிள் ரைடிங் என தன் கவனத்தை வெவ்வேறு பக்கங்களில் திருப்பியிருந்த நடிகர் அஜித்குமார், மீண்டும் தனது 'ஆரம்பம்' ஆன பைக் பேஷனுக்குள் முழுமையாக வந்திருக்கிறார். அஜித் யாரை சந்தித்தாலும், யாரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்தாலும் அவர்கள் வைரல் ஆகிவிடுவார்கள். அந்தவகையில் நேற்று அஜித்தால் வைரல் ஆகியிருப்பவர் ஓர் ஈரானியப் பெண்மணி.
‘அஜித்கூட இருக்கிற அந்தப் பொண்ணு யாரு’ என்பதுதான் எல்லோரது கேள்வியும்.
அவர் பெயர் மேரல் யாஸர்லூ. ஈரானைச் சேர்ந்த மேரல், ஒரு ஃபேஷன் டிசைனர். ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் துணைத் தலைவர் பதவியில் இருப்பவர். ஓகே… அந்தப் பெண்ணை அஜித் எதுக்கு சந்திக்கணும்? தன் புதுப்படத்தில் ஃபேஷன் டிசைனிங் பண்றாரா… இல்லைனா ரியல் எஸ்டேட்டில் எதுனா நிலம் வாங்கப் போறாரா? அதுதான் இல்லை.
அஜித்துக்கு பைக்குகளையும் பைக் ரைடர்களையும் ரொம்பவே பிடிக்கும். அஜித்துக்கு சினிமா நண்பர்களுக்கு இணையாக பைக் ரைடர்கள், கார் ரேஸர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். அப்படி உலகம் முழுதும் சுற்றிய ஒரு பைக் ரைடர்தான் மேரல் யாஸர்லூ. 7 கண்டங்களைச் சுற்றி உலகத்தை வலம் வந்த பெண்கள், உலகத்தில் மொத்தம் மூன்றே பேர்தான். அதில் மேரலும் ஒருவர். அன்டார்டிகா முதற்கொண்டு தனது பிஎம்டபிள்யூ பைக்கிலேயே மொத்தம் 1,10,000 கிமீ பைக்கை சோலோவாக ஓட்டிய ரைடர், மேரல் யாஸர்லூ என்பதுதான் பெருமைக்குரிய விஷயம்.
பெண்கள் பைக் ஓட்டுவது… சோலோ ரைடு போவது ஒன்றும் புதிதில்லை. ஆனால், ஈரான் போன்ற நாட்டில் பிறந்த பெண்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதே குற்றமாகப் பார்க்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்துப் போராடியவர் மேரல்.
பல லட்சம் சம்பளம் வாங்கினாலும், வாழ்க்கையில் ஒரு திருப்தி கிடைக்காத நிலையில், ‘லைஃப்ல ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுதே’ என்று கருதியவர், தனது ரியல் எஸ்டேட் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ரைடிங் கியரை மாட்டிக்கொண்டு, தனது பிஎம்டபிள்யு GS F650 பைக்கை உறுமவிட்டிருக்கிறார். மொத்தம் 18 மாதங்கள் – 1 லட்சத்து 10,000 கிமீ, 64 நாடுகள், 7 கண்டங்கள் – இப்படி தன்னந்தனியாகச் சுற்றி ‘இந்தியாவின் 100 பவர்ஃபுல் பெண்கள்’ லிஸ்ட்டில் இடம்பிடித்த பெண்மணியை நமக்கே பிடிக்கும். அஜித்துக்குப் பிடிக்காதா என்ன?
அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் மேரலைச் சந்தித்துவிட்டு, தனது பைக் ரைடிங்குக்காக டிப்ஸ் கேட்டு வந்திருக்கிறாராம் அஜித்.
தனது லடாக் பயணம், வட இந்தியப் பயணம், லேட்டஸ்ட்டாக இத்தாலி பயணம் என பைக்கிலேயே 10,000 கிமீ சுற்றிவந்த கதை எல்லாவற்றையும் மேரலிடம் பகிர்ந்து கொண்டாராம் அஜித்.
உலகம் சுற்றும்போது பாதிவழியில் தனது பாய் ஃப்ரெண்ட் அலெக்ஸ் புரப்போஸ் செய்தது; பெரு நாட்டில் உள்ள ‘மாச்சு பிச்சு’ எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் திருமணம் செய்தது; கர்ப்பமானபோதும் பைக் ஆக்ஸிலரேட்டர் முறுக்கியது; இப்போது ஒன்றரை வயதாகும் மகள் நஃபாஸ், பைக் எக்ஸாஸ்ட் சத்தம் கேட்டால் சிரிப்பது; பிஎம்டபிள்யூ மற்றும் டுகாட்டி பைக்குகளின் தனித்தன்மை என்று எல்லாக் கதைகளையும் அஜித்திடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் மேரல் யாஸர்லூ.
மேரல் யாஸர்லூ கொடுத்த வழிகாட்டலின்படி, உலகம் முழுக்க அடுத்த சோலோ பைக் ரைடுக்குத் தயாராகப் போகிறாராம் அஜித்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/why-ajith-met-world-solo-traveler-maral-yazarloo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக