அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன்,டேவிட் செல்வன் உள்பட 20 பேர் கடந்த வாரம் அ.ம.மு.கவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த நிலையில், டி.டி.வி தினகரனின் வலதுகரமாகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த பழனியப்பனும் அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தி.மு.கவில் மட்டுமல்லாது அதிமுகவிலும் இணைந்து வருகின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பொன்ராஜா, மத்திய சென்னை மத்திய மாவட்ட செயலர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்ட செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேல்மட்ட நிர்வாகிகள் மட்டுமல்லது, மாவட்ட அளவிலும் பல நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்தநிலையில், அமமுக என்ற வீடு காலியாகிவிட்டதாகவும் அங்கிருந்து வருபவர்களை அதிமுகவினர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை திருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன். ஐந்து முதல் பத்து எம்.எல்.ஏக்களையாவது பெற்றுவிடுவோம் என நம்பிக்கையாக இருந்த அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரனே கோவில்பட்டியில் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து தினகரனிடம் இருந்தும் எந்தவித சிக்னலும் இல்லாமல் இருக்கவே ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். இன்னும் பல நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்,
'' தற்போது நிர்வாகிகள் விலகிவருவதற்கு தேர்தல் முடிவுகளை மட்டும் காரணம் சொல்லமுடியாது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் செயல்பாடுகளும் முக்கியமான காரணம். தேர்தலுக்கு முன்பாகவே ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் அமைதியாகத்தான் இருந்தார். மற்ற கட்சிகளில் எல்லாம் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். ஆனால், எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறதா இல்லையா என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் கட்சியை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்க பா.ஜ.க முயற்சி செய்தது. எங்கள் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அது நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காலகட்டத்தில் எங்கள் கட்சியின் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. யாரை எதிர்த்து அரசியலுக்கு வந்தோமோ அவர்களுடனே இணைந்து தேர்தலைச் சந்திப்பதை நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை. சின்னம்மாவிடம் இருந்தும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியும் சாதுர்யமாக எங்களை இணைத்துக் கொள்வதை தவிர்த்துவிட்டார்.
Also Read: கட்சியைக் கலைக்கும் முடிவை எடுத்தாரா தினகரன்? அ.ம.மு.க-வின் எதிர்காலம் இனி என்னவாகும்?
தொடர்ந்து, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமையவும் உற்சாகமாகத்தான் தேர்தல் வேலை செய்துவந்தோம். ஆனால்,. கடைசிவரை, தேர்தல் செலவுக்கு கட்சித் தலைமையிடம் இருந்து பணம் வரவேயில்லை. கடைசி இரண்டு நாள்களில் மிகவும் நம்பி ஏமாந்து போனோம். அதனால்தான், தேர்தல் முடிவுகளும் நாங்கள் எதிர்பார்த்த அளவு வரவில்லை. காரணம், எங்கள் நிர்வாகிகள் பலரே, அதிமுகவைத் தோற்கடித்தால் போதும் என எங்கள் வேட்பாளர்களை விட்டு திமுகவுக்கு வாக்குக் கேட்டார்கள். எங்கள் தலைவரும், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, காரைக்குடி போன்ற தொகுதிகளைவிட்டு தேவையில்லாமல் கோவில்பட்டியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சரி, போனது போகட்டும் தேர்தல் முடிந்தபிறகு, மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்துக் கூட்டமாவது போட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி எந்த நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பிலேயே இல்லை. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் சரி, கட்சி நிர்வாகிகளுக்கும் சரி அது மிகப்பெரிய மனச்சோர்வைக் கொடுத்தது. தொலைக்காட்சி விவாதங்களில்கூட எங்கள் கட்சி சார்பில் யாரும் கலந்துகொள்ள தலைமை அனுமதிப்பதில்லை. அதனால்தான், கையில் இருந்த பணத்தை எல்லாம் இரண்டு தேர்தலில் செலவழித்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள்.
தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க அரசாங்கம், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்தும் சின்னம்மாவின் அடுத்தடுத்த நடவடிக்களைப் பொறுத்தும்தான் எதையும் சொல்லமுடியும். அவர்கள் குடும்பப் பிரச்னையைவின் காரணமாகவே எங்கள் பொதுச்செயலாளர் அமைதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அது எல்லாவற்றையும் வேகமாகச் சரிசெய்து எங்கள் பொதுச்செயலாளர் களத்தில் இறங்கினால்தான் எங்கள் கட்சியை மீட்கமுடியும்'' என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-was-the-reason-for-the-dismissal-of-key-ammk-executives
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக