Ad

திங்கள், 5 ஜூலை, 2021

சங்கரன்கோவில்: 'காங்கிரஸ் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு; தி.மு.க பிரமுகர் தலைமறைவு!'

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், தங்கராஜ். 38 வயது நிரம்பிய விவசாயியான அவர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக உள்ளார். அத்துடன்,அந்தப் பகுதியின் விவசாய சங்கத்திலும் பொறுப்பு வகித்து வருகிறார்.

அரிவாளால் வெட்டும் காட்சி

அதே கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரியும் தி.மு.க பிரமுகருமான மருதையா என்பவருக்கும் தங்கராஜுக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக கடந்த நான்கு வருடங்களாகப் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே பல முறை தகராறு நடந்திருக்கிறது.

எட்டு வயது சிறுமியான தன் மகளுடன் நேற்று மாலை தோட்டத்துக்குச் சென்ற தங்கராஜ், பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும்போது மருதையா அங்கு வந்துள்ளார். அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது தங்கராஜின் மகள் செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார்.

அரிவாளால் வெட்டும் வீடியோ காட்சி

அவர் செல்போனில் படம் பிடிப்பதைக் கவனித்த மருதையா, "நீ படம் எடுத்தால் பயந்துருவேனா. நீ படம் பிடிச்சுக்கோ" என்று சொல்லியபடி தங்கராஜிடம் தகராறு செய்திருக்கிறார். பின்னர் அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். அதனால் அச்சம் அடைந்த சிறுமி உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர்.

ஆட்கள் வருவதைப் பார்த்த மருதையா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். வெட்டுக் காயத்துடன் தரையில் விழுந்து கிடந்த தங்கராஜை அங்கிருந்தவர்கள் தூக்கிச் சென்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Also Read: தென்காசி: மது விருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு! - பதறவைத்த பழிக்குப் பழி கொலை

சிறுமி பதிவு செய்த வீடியோவில் தங்கராஜை மருதையா வெட்டும் காட்சிகள் உள்ளன, அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சின்னக்கோவிலான்குளம் போலீஸார், தி.மு.க பிரமுகர் மருதையாவை தேடிவருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/congress-executive-was-stabbed-by-a-dmk-cadre-in-sankarankovil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக