Ad

திங்கள், 5 ஜூலை, 2021

நானும் நீயுமா - 12: சாமானியர்களின் நாயகனான சிவகுமாரின் நடிப்பும், சலிப்பும்!

அதுவொரு சினிமா அலுவலகம். அந்தப் புகழ் பெற்ற இயக்குநர், தான் அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படத்திற்காக புது நாயகனை தேடிக் கொண்டிருந்த சமயம். ஒளிப்பதிவாளரின் பரிந்துரையின் பேரில் அந்த இளைஞன் உள்ளே நுழைந்தான். அவனது முகம் ஹீரோவிற்கான களையுடன் இருந்தது. ஆனால் 'நமக்கு சான்ஸ் கிடைக்காது' என்று அந்த இளைஞனுக்கு உள்ளுக்குள் நன்கு தெரிந்திருந்தது. காரணம் அவன் ஒல்லியாக இருந்தான். மட்டுமல்லாமல் நடிப்பில் அவனுக்கு எவ்வித பயிற்சியும் இல்லை.

எனவே தன்னிடமிருந்த அவநம்பிக்கை காரணமாக, கால் மேல் கால் போட்டுக் கொண்டு அலட்சியமாக சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது இயக்குநர் அங்கே வந்தார். இளைஞன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "சிகரெட்?" என்றபடி பாக்கெட்டை நீட்டி இயக்குநரை உபசரித்தான். சுற்றியுள்ளவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. இயக்குநர் புகழ்பெற்றவர் மட்டுமல்ல, கண்டிப்பிற்கும் கறார்த்தனத்திற்கும் பெயர் போனவர். இளைஞன் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு வெளியே தள்ளப்படப் போகிறான் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.

ஆனால் - அங்கொரு மாயம் நிகழ்ந்தது. "நீதான் என் அடுத்த படத்தோட ஹீரோ" என்று சொன்ன இயக்குநர், அமைதியாக உள்ளே சென்று விட்டார். அவர் இயக்கவிருக்கிற புதிய படத்தின் கதாபாத்திரத்தின்படி அந்த ஹீரோ 'துணிச்சலானவனாகவும் சற்று திமிருடனும்' இருக்க வேண்டும். எனவே இளைஞன் செய்ததை தன் மீதான அவமதிப்பாக எடுத்துக் கொள்ளாமல், தன்னுடைய 'ஹீரோ' கிடைத்து விட்ட அடையாளமாக இயக்குநர் பார்த்தார்.

ரவிச்சந்திரன்

அந்த இளைஞன் நடிகர் ரவிச்சந்திரன். அந்த இயக்குநர் ஸ்ரீதர். அந்தத் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.

நாடக அனுபவமும், நடிப்பு ஆர்வமும் உள்ள எத்தனையோ இளைஞர்கள் சினிமா வாய்ப்பிற்காக முட்டி மோதிக் கொண்டிருந்த சமயத்தில், தங்கத் தட்டில் வைக்கப்பட்ட அந்த வாய்ப்பு ரவிச்சந்திரனை தேடி அடைந்ததை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் முதன் முதலில் எடுக்கப்பட்ட 'ஈஸ்ட்மென்' வண்ணப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு மிக எளிதாக அவருக்கு கிடைத்தது.

சீரியஸான படங்களை அதுவரை இயக்கி வெற்றி பெற்றிருந்த ஸ்ரீதரால் ஒரு நகைச்சுவைத் திரைப்படத்தை உருவாக்க முடியுமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், ஸ்ரீதரின் அட்டகாசமான இயக்கம், சித்ராலயா கோபுவின் அற்புதமான நகைச்சுவையில் அமைந்த கதை, வசனம், விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இளமை சொட்டும் ரகளையான பாடல்கள், நாகேஷ் - பாலைய்யாவின் அற்புதமான காமெடி உள்ளிட்ட பல காரணங்களால் படம் பேயோட்டம் ஓடியது. பிறகு வெளிவந்த பல நகைச்சுவைத் திரைப்படங்களுக்கு 'காதலிக்க நேரமில்லை' ஒரு முன்னோடித் திரைப்படமாக அமைந்தது.

அறுபதுகளின் காலகட்டத்தில் 'மிக ஸ்டைலாக' தோற்றமளித்த ஹீரோக்களில் முக்கியமானவராக ரவிச்சந்திரன் இருந்தார். களையான முகவெட்டு, வசீகரமான புன்னகை, அற்புதமாக நடனமாடும் திறமை போன்ற காரணங்களால் ரவிச்சந்திரனுக்கு பார்வையாளர்களின் அங்கீகாரம் கிடைத்தது. முக்கியமாக ரசிகைகள் பெருகினார்கள். 'காதலிக்க நேரமில்லை' மூலம் தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் ரவிச்சந்திரன்.

‘இதயக்கமலம்’, ‘குமரிப் பெண்’, ‘அதே கண்கள்’, ‘கௌரி கல்யாணம்’, ‘மதராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘நான்’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களை ரவிச்சந்திரன் நடித்ததில் குறிப்பிடத்தக்கதாக சொல்லலாம். 'இதயக் கமலம்' திரைப்படத்தில் கே.ஆர்.விஜயாதான் ஹீரோயின் என்றாலும், அதில் சிறிய பாத்திரத்தில் நடித்த ஷீலாவின் மீது ரவிச்சந்திரனுக்கு காதல் ஏற்பட்டது. பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். சட்டபூர்வமாக முதல் மனைவி இருந்தாலும் ஷீலாவின் மீதிருந்த காதலால் அந்த இரண்டாவது திருமணம் நிகழ்ந்தது. பிறகு அது முறிந்து போனது.

முத்துராமன்

தனது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகனான 'ஹர்ஷவர்தனை' வைத்து, தனது அந்திமக் காலத்தில் சில திரைப்படங்களை இயக்கினார் ரவிச்சந்திரன். ஆனால் அவை அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஷீலாவின் மூலம் பிறந்த 'ஜார்ஜ் விஷ்ணு', 1997-ல் 'காதல் ரோஜாவே' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ரவிச்சந்திரனின் பேத்தியான 'தன்யா ரவிச்சந்திரன்', 'பலே வெள்ளையத்தேவா' திரைப்படத்தில் அறிமுகமானார்.

ரவிச்சந்திரனை 'மிகச் சிறந்த நடிகர்' என்று வகைப்படுத்த முடியாவிட்டாலும் அறுபது, எழுபதுகளின் காலகட்டத்தில் இளம் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்த வசீகரமான நாயகனாக சொல்ல முடியும்.

ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரைத் தொடர்ந்து, இந்த இளைய 'மூவேந்தர்'களில் கடைசியாக பார்க்கவிருப்பது 'முத்துராமன்'. அதுவரையான தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் நாடகப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். எனவே அந்த இலக்கணத்தின் படி, தனது முகபாவங்களை, உணர்ச்சிகளை சினிமாவிலும் மிகையாக கொட்டித் தீர்க்கும் பழக்கம் அவர்களிடம் இயல்பாக படிந்திருந்தது. அவ்வகையான நடிப்புதான் 'சிறந்தது' என்று கருதப்பட்ட காலமாகவும் அது இருந்தது.

ஆனால், தனது அடக்கமான, மிக இயல்பான நடிப்பின் மூலம் ஒரு புது இலக்கணத்தை ஏற்படுத்தியவர் முத்துராமன் என்றால் அது மிகையாகாது. 'Subtle acting' என்னும் பாணியை முத்துராமனிடம் அதிகம் காண முடியும். அது மிகவும் உணர்ச்சிகரமான காட்சியாக இருந்தாலும் சரி, அதிகம் கொட்டி விடாமல், தேவைக்கேற்ற அளவான உணர்ச்சியை மட்டும் வெளிக்காட்டி நடிப்பதில் முத்துராமன் தனித்துவம் கொண்டவராக இருந்தார்.

தஞ்சாவூரில் பிறந்த முத்துராமனுக்கு இளமையிலேயே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால், குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணமாக அரசு உத்தியோகத்தில் சேர்ந்தார். என்றாலும் வைரம் நாடக சபா, நடிகர் எஸ்.எஸ்.ஆரின் நாடக மன்றம், எஸ். வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் போன்ற நாடகக் குழுக்களில் சிறிய பாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்திலும் அவருக்கு சிறிய பாத்திரங்களே கிடைத்தன. அப்போது முன்னணி நாயகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி ஆகியோர்களின் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

சிவகுமார், முத்துராமன்
'நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன்' என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல் இரண்டு ஹீரோக்களில் ஒருவர், நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதை என்று பல்வேறு பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தார். 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'காதலிக்க நேரமில்லை', 'சர்வர் சுந்தரம்' 'பாமா விஜயம்', 'சூர்யகாந்தி', 'எதிர் நீச்சல்' போன்ற திரைப்படங்களில் கவனத்திற்கு உரிய பாத்திரங்களில் நடித்தார். தெளிவான உச்சரிப்பு, அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு, வசீகரமான தோற்றம் போன்ற காரணங்களினால் தனித்துத் தென்பட்டார்.

ஜெமினி கணேசனைப் போல 'சாமானியர்களின் நாயகன்' என்று முத்துராமனைச் சொல்ல முடியும். அந்த அளவிற்கு ஹீரோ என்கிற செயற்கையான சுமைகள் அல்லாத இயல்பான பாத்திரங்களில் நடித்த முக்கியமான நடிகர் 'முத்துராமன்'. இவருடைய மகனான, 'முரளி' என்கிற இயற்பெயரைக் கொண்ட கார்த்திக், பிறகு பிரபல ஹீரோவாகவும் சிறந்த நடிகராகவும் ஆனது நமக்குத் தெரியும். கார்த்திக்கின் மகனான கெளதமும் 'கடல்' திரைப்படத்தின் மூலம் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு மேலும் சில திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற 'சாமானியர்களின் நாயகர்களாக' திகழ்பவர்களின் பலமே அவர்களின் இயல்பான நடிப்புதான். ஹீரோவிற்கான பிம்ப சிலுவைகள் இல்லாத காரணத்தால் எந்தவொரு வேடத்திலும் அவர்களால் இயல்பாக உள்நுழைந்து விட முடியும். பொதுவெளியிலும் இவர்கள் செயற்கையாக எவ்வித பாவனைகளையும் செய்ய வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் இல்லை. இது போன்ற நடிகர்கள், சினிமாவை தங்களுக்கான முதலீடாக மாற்றிக் கொள்ளாமல் நடிப்பை மட்டுமே பிரதானமாகவும் தொழிலாகவும் வைத்துக் கொண்டு வாழ்ந்து மறைந்தார்கள். சினிமாவின் மூலம் கிடைக்கும் புகழ், செல்வாக்கு போன்றவற்றை மற்றவற்றிற்காக பயன்படுத்திக் கொள்ள முயலவில்லை.

இந்த வரிசையில் நடிகர் சிவகுமாரையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஒரு நடிகரின் சினிமா பிம்பம் எந்த அளவிற்கு அவர்களின் பாதையை தீர்மானிக்கிறது என்பதை அலசுவதுதான் இந்தக் கட்டுரைத் தொடரின் ஆதாரமான நோக்கம். இந்த நோக்கில் நடிகர் சிவகுமார் ஒரு முக்கியமான உதாரணம். தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கான ஆயுதமாகவே ரசிகர் மன்றங்களை,வைத்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் மத்தியில், தான் செயலாக இருந்த நேரத்திலும் 'ரசிகர் மன்றம் தேவையில்லை' என்கிற கொள்கையில் உறுதியாக இருந்தவர் சிவகுமார்.

சிவகுமார்

சினிமாத் துறை என்றாலே, தனிமனித ஒழுக்கம் என்பது சீர்குலைந்து 'நடிகர்கள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள்' என்பது பொதுப்புத்தியில் படிந்து போயிருக்கும் சூழலில், ஒரு சினிமா நடிகர் மிக ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் ஆரோக்கியமாகவும் தன் உடலையும் மனதையும் பேண முடியும் என்பதற்கு சரியான உதாரணமாக இருக்கிறார் சிவகுமார். தன்னைப் போலவே தன் வாரிசு நடிகர்களையும் மிக ஒழுக்கத்துடன் வளர்த்திருக்கிறார் என்பது சிவகுமாரின் பெருமை மிகு அடையாளங்களுள் ஒன்று.

நடிப்பு என்று வருகிற போது சிவகுமாரின் ஒரே மாதிரியான நடிப்பை 'சலிப்பானது' (Monotonous) என்றுதான் பொதுவாக சொல்ல முடியும். ஆனால், தேர்ந்த இயக்குநரிடம் சென்று சேரும் போது இவரின் நடிப்பு பிரகாசிக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் 'சிந்து பைரவி'. இதைப் போலவே மணிவண்ணன் இயக்கிய 'இனியொரு சுதந்திரம்', சேதுமாதவன் இயக்கத்தில் 'மறுபக்கம்', நூறாவது திரைப்படமான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' போன்ற திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார் சிவகுமார்.

Also Read: நானும் நீயுமா - 11: ஜெய்சங்கர் எனும் தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட்… எம்ஜிஆர் பகையும், கருணாநிதி நட்பும்!

இதைப் போன்ற இயல்பான நடிகர்கள், மக்களிடம் அதிகமான புகழோ, செல்வாக்கோ பெறாமல் போயிருந்திருக்கலாம். ஆனால், தான் நடித்த திரைப்படங்களின் பாத்திரங்களுக்கு நியாயமும் இயல்பும் சேர்த்தவர்கள் என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். உண்மையில் ஒரு நடிகனின் பயணம் இப்படித்தான் அமைய வேண்டும். அவன் நடிக்கும் பாத்திரங்களுக்கும் அவனது பொது பிம்பத்திற்கும் தொடர்பே இல்லை. நடிப்பு என்பதும் ஒருவகையான தொழில்தான்.

சிவகுமார்

ஆனால், சினிமாவில் புனைவாக காட்டப்படும் பிம்பங்களை, ஒரு ஹீரோவின் தனிப்பட்ட ஆளுமையோடு பொருத்திப் பார்க்கும் மயக்கம் நம்மிடம் இன்னமும் தீரவில்லை. சினிமாவில் ஒரு பாத்திரம் நல்லவனாகவும் வல்லவனாகவும் சித்தரிக்கப்படும் போது, நிஜ வாழ்க்கையிலும் அவன் பெரும்பாலும் அப்படித்தான் இருப்பான் என்கிற அறியாமையும் கற்பனையும் நம்மிடம் இன்னமும் கூட இருக்கிறது. எனவேதான் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இளைய நடிகர்கள் கூட, 'தமிழக முதல்வர்' என்கிற நாற்காலிக்கு கனவு காண முடிகிறது. அதையொட்டி அபத்தமான பன்ச் வசனங்களைப் பேச முடிகிறது.

இந்த அசட்டுத்தனமான போக்கு, பார்வையாளர்களின் மனோபாவத்தால்தான் மாற முடியும். நிஜத்தையும் நிழலையும் ஒன்றாக இட்டு குழப்பிக் கொள்ளும் மயக்கத்திலிருந்து வெளிவர வேண்டும். இது சார்ந்த விழிப்புணர்வு இப்போது பெருகி வந்தாலும் கணிசமான மாற்றம் இன்னமும் நிகழவில்லை.

ஓகே... அடுத்த வார அத்தியாயத்தில் ரஜினி x கமல் காலகட்டத்திற்கு நகர்வோம்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/naanum-neeyuma-career-analysis-of-ravichadran-muthuraman-and-sivakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக