Ad

வியாழன், 7 ஜனவரி, 2021

`பித்தளை பாத்திரத்தால் தப்பிய 31 சவரன் தங்க நகைகள்!’ - தொழில் அதிபரின் மனைவிக்கு குவியும் பாராட்டு

சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி சங்கீதா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி சங்கீதாவின் சொந்த ஊரான ஓசூருக்கு குடும்பத்தினரை தேவராஜன் அழைத்துச் சென்றார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தேவராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த தேவராஜன் குடும்பத்தினரோடு சென்னை திரும்பினார். அதற்குள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

குற்றம்

Also Read: `250 பவுன் நகைக் கொள்ளை; கேமராவில் பதிவான 2 பேர்!’ - வேகமெடுத்த வேலூர் போலீஸ்

வீட்டிலிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் அனைத்தும் வீடு முழுவதும் சிதறிக் கிடந்தன. தகவல் கிடைத்ததும் ஒசூரிலிருந்து சென்னை வந்த தேவராஜன் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 31 சவரன் தங்க நகைகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். அதுகுறித்து மனைவியிடம் தேவராஜன் கூறியபோது சங்கீதா, கவலைப்படாதீங்க, தங்க நகைகளை நான் பீரோவில் வைக்கவில்லை என்று கூறினார். பின்னர், சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பித்தளை பாத்திரங்களிலிருந்து தங்க நகைகளை எடுத்து தேவராஜனிடம் சங்கீதா கொடுத்தார். அதைப்பார்த்த தேவராஜன், நிம்மதியடைந்தார்.

இதையடுத்து ஆவடி காவல் நிலையத்தில் தேவராஜன் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கைரேகைகளைப் பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தில் எந்தப் பொருள்களும் கொள்ளைப் போகவில்லை என்றாலும் கொள்ளையடிக்க முயன்றவர்கள் யாரென்று போலீஸார் சிசிடிவி உதவியோடு தேடி வருகின்றனர். தேவராஜனின் மனைவி சங்கீதாவின் புத்திச்சாலிதனமான இந்தச் செயலால் 31 சவரன் தங்க நகைகள் கொள்ளைப் போகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் சங்கீதாவுக்கு போலீஸாரும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

கொள்ளை

இதுகுறித்து சங்கீதா கூறுகையில், `` என்னுடைய வீட்டில் 4 பீரோக்கள் உள்ளன. அதில் தங்க நகைகளை வைத்தால் கொள்ளை போய்விடும் எனக்கருதிதான் சமையலறையில் பித்தளை பாத்திரங்களில் தங்க நகைகளை வைத்திருப்பேன். இது, என்னைத் தவிர வீட்டில் யாருக்கும் தெரியாது. சமீபத்தில் என் தந்தை இறந்துவிட்டார். அதனால் அவர் பார்த்து வந்த தொழிலை கவனிக்கதான் நானும் என் கணவர் மற்றும் குழந்தைகள் ஓசூருக்குச் சென்றோம். வீட்டை பூட்டிவிட்டுச் செல்லும்போது வழக்கம் போல கொள்ளையர்களுக்குப் பயந்து 31 சவரன் தங்க நகைகளை பித்தளை பாத்திரத்தில் வைத்துவிட்டு சென்றேன். வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், 4 பீரோக்களையும் உடைத்து அதில் தங்க நகைகளைத் தேடியிருக்கின்றனர். நல்லவேளையாக பித்தளை பாத்திரத்தில் வைத்திருந்த தங்க நகைகள் கொள்ளையர்களின் கண்களில் சிக்கவில்லை" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/gold-jewels-theft-attempt-in-business-man-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக