"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டுள்ளார் எனப் பகிரங்கமாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்குப் போடுங்க" என்று சவால் விடுத்துள்ளதோடு, கொரோனாவிலும் கொள்ளையடித்த கட்சி ஒரே கட்சி அ.தி.மு.க என ஆளும்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தார் உதயநிதி.
தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்கிற முழக்கத்தை முன்வைத்து திருக்குவளையில் கருணாநிதியின் வீட்டிலிருந்து பரப்புரையைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளில் தி.மு.க உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.
மண்ணச்சநல்லூரில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "பொள்ளாச்சி குற்றவாளி மத்திய, மாநில அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்துப் போட்டோ எடுத்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க வெற்றி பெற்றது. மோடி அலை வீசியது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மக்கள் பா.ஜ.கவிற்கு பட்டை, நாமம் போட்டனர். அந்த கோபத்தில் தமிழ்நாட்டிற்கான புயல் நிவாரணம் உள்ளிட்ட நிதிகளை ஒதுக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள்.
கொரோனாவிலும் கொள்ளையடிக்கும் ஆட்சி நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளில் தரும் பொங்கல் பணம் 2,500 பெற்றுக்கொள்ளுங்கள். மீதம் 2,500 கேட்டுப் பெறுங்கள். ஏனெனில் 5,000 வழங்க வேண்டும் என்று தி.மு,க. தான் முதலில் கோரிக்கை விடுத்தது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டுள்ளார். பகிரங்கமாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்.
அதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது எனக்கு நன்கு தெரியும். அ.தி.மு.க மாணவரணிச் செயலாளர் உள்ளிட்டோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க நிர்வாகி அருளானந்தம், தமிழ்நாட்டு அமைச்சர்கள் மட்டுமின்றி, பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோடும் கட்டிப்பிடித்துப் போட்டோ எடுத்துள்ளார்.
Also Read: ரஜினி : இப்போ கட்சி இல்லை... அப்போ வாய்ஸ் உண்டா?
ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகப் போகிறது. அவர் எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை மறந்து விட்டனர். ஜெயலலிதா அப்போலோவில் சாப்பிட்ட ஒரு இட்லி ஒரு கோடி. ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக முதலில் சொன்னவர், அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்.
விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, 8 முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகவில்லையே ஏன்? "இவர்கள் அம்மாவின் ஆட்சியைத் தொடர்வதாகச் சொல்லும் இவர்கள் கோடி கோடியாகக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடிப்பவர்கள் எங்களிடம் தப்பிக்கமுடியாது அனைவரும் மாட்டுவார்கள்” என்று கடுமையாக எச்சரித்தார் உதயநிதி ஸ்டாலின்.
Also Read: கடலூர்: `ரஜினிகாந்தைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?’ தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி
source https://www.vikatan.com/news/politics/i-say-publicly-pollachi-jayaramans-son-involved-in-sex-abuse-case-says-udhayanithi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக