Ad

திங்கள், 7 டிசம்பர், 2020

கோவை: `வருமானத்துக்கு உகந்த திட்டங்களே நிறைவேற்றம்!' - அ.தி.மு.க அரசை சீண்டும் கனிமொழி

தி.மு.க மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, கோவை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். காலை பூ-மார்க்கெட் மலர் வியாபாரிகள், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்துப் பேசினார். சந்தையில், கனிமொழிக்கு விவசாயிகள் காய்கறிகள் வழங்கினர். கனிமொழி, ‘வேண்டாம்’ என மறுக்க விவசாயிகள், ‘இது எங்கள் பரிசு’ என்று வற்புறுத்தினர்.

கனிமொழி
கனிமொழி
கனிமொழி

Also Read: கோவை: `விவசாயம், சந்தை மாநில அதிகாரத்துக்குட்பட்டவை; மத்திய அரசுக்கு உரிமை இல்லை' கனிமொழி காட்டம்!

பிறகு, அதற்கு விவசாயிகளிடம் காசு கொடுத்துவிட்டு கனிமொழி காய்களை வாங்கினார். ஆரம்பத்தில் காசு வாங்க மறுத்த விவசாயிகள், பிறகு வாங்கிக் கொண்டனர். இதையடுத்து, தடாகம் சாலையில் மூங்கில் கூடைத் தொழிலாளர்களிடம் கனிமொழி உரையாடினார்.

இதைத்தொடர்ந்து, கனிமொழி உலியம்பாளையத்தில் கின்னஸ் சாதனை படைத்த மாணவியை சந்தித்துப் பேசினார். பிறகு, தொண்டாமுத்தூர், பேரூர், செல்வபுரம், கரும்புக்கடை, சீரநாயக்கன் பாளையம் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்தார். அதேபோல, விவசாயிகள் மற்றும் குறு, சிறு தொழில் முனைவோர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

கனமொழி

அப்போது பேசிய கனிமொழி, “பணமதிப்பிழப்பு மற்றும் குளறுபடிகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டியால் சிறு, குறு நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. தமிழகத்தில், 50,000 சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் அரசாங்கம் சிறு, குறு நிறுவனங்கள் குறித்து சிந்தத்து பார்க்கவில்லை. தி.மு.க ஆட்சி சிறு, குறு நிறுவனங்களுடன் நட்புறவில் இருக்கும். யானைகளால் உயிர் மற்றும் பயிர் சேதம் ஏற்படுவதை நன்கு அறிவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்குவதுடன், இந்தப் பிரச்னைக்கு தீர்வு கொடுக்க முயற்சி செய்வோம்.

கனிமொழி

விவசாயி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் முதல்வர், வேளாண் சட்டத்தை வரவேற்கிறார். இது விவசாயிகளை கார்ப்பரேட்களுக்கு அடிமையாக்கும் சட்டம். இதை வரவேற்பதைவிட, விவசாயிகளை வேறு எப்படியும் அவமானப்படுத்திவிட முடியாது.

இந்தப் பகுதியில் அமைச்சர் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு தண்ணீரை அவர்களுக்கு வழங்கிவிடுகிறார். விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவதில்லை. மேலும், குளங்களை தூர்வாரும் கான்ட்ராக்ட்களை, அமைச்சர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுகிறார். அந்த குளங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்படைகின்றன. தமிழகத்தில், பல இடங்களில் சாலைகளே இல்லை.

கனிமொழி

பல இடங்களில், குழிகளும், சகதிகளும் தான் இருக்கின்றன. அவர்கள் எட்டு வழிசாலைகளை தான் போடுவார்கள். அதுதான், அவர்களின் வருமானத்துக்கு உகந்ததாக இருக்கும். அதேபோல, பாலம் கட்ட வேண்டும் என்றாலும் மகிழ்ச்சியாக கட்டுவார்கள். ஆனால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகள் மிக மோசமாக இருக்கின்றன” என்று குற்றம் சாட்டினார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/dmk-kanimozhi-slams-tamilnadu-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக