Ad

திங்கள், 7 டிசம்பர், 2020

`காங்கிரஸ் கூட்டணியில் ரொம்ப கவனமா இருக்கணும்!' - ஸ்டாலினுக்கு மத்தியப்பிரதேச முதல்வர் அட்வைஸ்

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதாக கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கடந்த நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் `வேல் யாத்திரை’யை துவக்கியது பா.ஜ.க. அறுபடை வீடுகளில் ஐந்து திருத்தலங்கள் தாண்டி, இறுதியாக திருச்செந்தூரில் நிறைவு செய்தது. 4 அடி உயர ஐம்பொன் வேலினை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். பா.ஜ.கவின் வேல் யாத்திரை நிறைவு விழாக்கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.

மேடையில் தலைவர்கள்

அதிக கூட்டம் கூடிவிடக்கூடாது என அ.தி.மு.க தரப்பிலிருந்து அழுத்தம் வந்ததால், நேற்று முந்தினம் மாலையில்தான் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது. 200 பேருக்கு மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரங்கத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் திரண்டிருந்த சுமார் 2,000 பேர், எல்.இ.டி திரையில் கூட்டத்தை கவனித்தபடியே கோஷம் எழுப்பினர்

கூட்டத்தில் முதலில்பேசிய பா.ஜ.க மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, “திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் நிறைவு பெற்றுள்ளது இந்த வேல் யாத்திரை. இதுவரை எந்த ஒரு பா.ஜ.க தொண்டனாவது வன்முறையில் ஈடுபட்டார் என்ற செய்தி, ஊடகங்களில் வெளியாகியுள்ளதா? இந்த வேல் யாத்திரை நிறைவுக்கூட்டம் வெற்றிகரமாக நடந்துடக்கூடாது என போலீஸார் பல அடக்குமுறைகளைக் கையாண்டுள்ளார்கள். முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற முறையில் சொல்கிறேன்.

மேடையில் பேசிய குஷ்பு

போலீஸாரின் இந்த அடக்குமுறை தவறானது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் கை காட்டுபவர்தான் முதல்வராக அமர முடியும்” என்றார். அடுத்ததாகப் பேசிய குஷ்பு, “தான் சாதி அரசியல் செய்கிறோம் என்பதை மறந்துவிட்டு, பா.ஜ.க., மத அரசியல் செய்கிறது என, தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். வரும் தேர்தலில் அந்தந்த சாதியில் முன்னணியில் இருப்பவரை விட, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்களில் ஒருவரை உங்களால் வேட்பாளராக நிறுத்த முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

பா.ஜ.கவின் அகில பாரத மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், ”இதுவரை பல்வேறு யாத்திரைகளை நடத்தி முடித்துள்ளது பா.ஜ.க., கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டுமில்லாமல் இந்த யாத்திரையால் தமிழகம் முழுவதும் பா.ஜ.க., வலுப்பெற்றுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் கூட்டங்களை நடத்துகிறார்கள்.

முருகன் - பா.ஜ.க மாநிலத் தலைவர்

ஆனால், வேல் யாத்திரை நிறைவுக்கூட்டத்திற்கு அனுமதி தருவதில் போலீஸாருக்கு என்ன தயக்கம்? மீத்தேன் திட்டம் நிறைவேற்றும் போது கையெழுத்துப் போட்ட ஸ்டாலின், தற்போது அமல்படுத்தும் போது ஏன் போராடுகிறார்? மீத்தேன் மட்டுமல்ல, இதுபோன்று பல திட்டங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு ஓட்டுக்காக போராட்டம் நடத்துவது மட்டும் சரியானதாகுமா? பொய்ப் பிரசாரத்தால் எம்.பி தேர்தலில் பெரும்பான்மையைப் பிடித்ததுபோல, இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவால் வெற்றி பெற முடியாது” என்றார்.

பா.ஜ.கவின் முன்னாள் தேசியச் செயலாளார் ஹெச்.ராஜா, “ரஜினி ஆன்மீக அரசியல் என்கிறார். அவர் சொல்லும் ஆன்மீக அரசியலைத்தான் நாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கிறோம். எம்.ஜி.ஆர் முதல் ஜெயலலிதா வரை ’தீயசக்தி’ என்றுச் சொன்ன தி.மு.கவை ஒழிப்பதுதான் எங்களின் நோக்கம். ’ஒப்பந்தப் பண்ணையம்’ பற்றி ஸ்டாலின் வாய் திறக்கலாமா?

பா.ஜ.க தொண்டர்கள்

எல்லோரையும் விவாதத்திற்கு அழைக்கும் ஸ்டாலின் என்னுடன் விவாத்ததிற்கு வரத் தயாரா? அவர் துண்டுச்சீட்டு அல்ல, முழு புத்தகத்தையேகூட எடுத்து வரட்டும்” என்றார். ”தமிழகத்தில் காவிக்கொடி பறக்க அரை அடி நிலம்கூட தர மாட்டோம்” என்றார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால், தற்போது காவிக்கொடி பறக்காத இடமே இல்லை என்பதுதான் உண்மை” என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

“முருகப் பெருமானின் கையில் உள்ள வேலை, ’ஆயுதம்’ என விமர்சிக்கிறார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. ஆம், இது ஆயுதம்தன். அகந்தையை, ஆணவத்தை அழிக்கும் ஆயுதம். யாரையும் கொல்லுவது நோக்கமல்ல. ஆணவத்தை வெல்லுவதே எங்களின் நோக்கம். கறுப்பு சிவப்பு தி.மு.க.விலும் கறுப்பு ஐயப்பனாகவும், சிவப்பு ஆதிபராசக்தியாகவும் மாற வேண்டும்” என்றார். தனக்குக் கொடுக்கப்பட்ட் 10 நிமிடமும் பா.ஜ.க மாநிலத்தலைவர் முருகனின் புகழ்பாடி அமர்ந்தார் முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா.

அரங்கிற்கு வெளியில் திரண்ட தொண்டர்கள்

ஆனால், மோடியின் புகழ்பாடி அமர்ந்தார் பா.ஜ.க மாநில துனைத்தலைவர் நயினார் நாகேந்திரன். அடுத்ததாகப் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன், “கறுப்பர் கூட்டத்திற்குப் பின்னால் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அவருடனான கூட்டணிக் கட்சிகளும்தான் உள்ளன. பா.ஜ.க தற்போது அரசியல் கட்சிகளின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த சக்தி ’தி.மு.க’ எனும் தீயசக்தியை அழிக்கும். வரும் தேர்தலில் தி.மு.கவுக்கு தக்கபாடம் புகட்டுவோம்” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் செளகான், தமிழர்களின் அடையாளமான பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்தார். இறுதியாகப் பேசிய அவர், “நான் 4வது முறையாக முதல்வராக உள்ளேன்.

அரங்கிற்கு வெளியே திரண்ட தொண்டர்கள்

அங்கு காங்கிரஸை விரட்டிவிட்டு வந்தவன் நான். இங்கும், வரும் தேர்தலில் தி.மு.க விரட்டப்படும். பா.ஜ.கவுடனான தேசிய முற்போக்கு கூட்டணியில் ஒருவர்தான் முதல்வராவார். தமிழகத்தில் மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. தமிழகத்திற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அளித்துள்ளார்” என்றவர், இறுதியாக, “காங்கிரஸுடன் யார் கூட்டணி வச்சாலும் தோல்விதான். மிஸ்டர் ஸ்டாலின் ரொம்பக் கவனமா இருக்கணும்” என ஸ்டாலினுக்கு அறிவுரை கூறி முடித்தார்.



source https://www.vikatan.com/news/politics/shivraj-singh-chouhans-advice-to-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக