தி.மு.க பற்றியும், மு.க.ஸ்டாலின் உட்பட முக்கிய நிர்வாகிகளை பற்றி விமர்சித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதை கண்டித்து தி.மு.க-வினர் விருதுநகர் மாவட்டத்தில் அவரின் உருவப்படங்களை எரித்து போராட்டம் நடத்தியது பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், மேலும் தி.மு.க-வினரைப் பற்றி கடுமையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர்.
சாத்தூர் அருகிலுள்ள விஜயகரிசல்குளத்தில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, பல்வேறு சோதனைகளை கடந்து, கட்சியை நடத்தியதால்தான் இன்று ஒன்றறை கோடி தொண்டர்கள் இரும்பு மனிதர்களாக உள்ளனர். தயாளுஅம்மாள், ராசாத்தியம்மாள் பற்றியும், மரணத்துக்குப்பின் கலைஞரையும் இதுவரை விமர்சித்து பேசியது கிடையாது.
ஸ்டாலினும், ராசாவும்தான் எங்கள் தலைவர்களை ஒருமையில் பேசி வருகின்றனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. தி.மு.க ஆட்சியில் எதுவுமே செய்யாமல் எங்களைப் பற்றி குறை கூற அவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழகத்திற்கு தி.மு.க எதுவுமே செய்யவில்லை.
இந்த மாவட்டத்தில் தி.மு.க-வினர் மிரட்டலுக்கெல்லாம் அ.தி.மு.ககாரன் பயப்பட மாட்டான். தி.மு.க-வுக்கு சகுனம் சரியில்லை. நாங்களும் பின்விளைவுகள், முன்விளைவுகள் எல்லாவற்றையும் பார்த்து கடந்து வந்தவர்கள்தான். எங்கள் முதல்வரை யார் தவறாக பேசினாலும் எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளோம். ஊழல்வாதியாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின்.
பொதுமக்களை சந்திப்பதற்காக ஊர் ஊராக மாவட்டம் தோறும் எங்கள் முதல்வர் எடப்பாடியார் சென்று வந்து கொண்டிருக்கின்றார். முதல்வரின் தடுப்பு நடவடிக்கையால்தான் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் மு.க.ஸ்டாலின் பலகோடி செலவழித்து தலைமுடியை வளர்த்தாரே தவிற வேற எதையும் செய்யவில்லை .
மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்களின் சொத்து பட்டியலை தற்போது தயார் செய்து வருகின்றோம். முதல்வர் எடப்பாடியாரை பார்த்து தரக்குறைவாக ஆ.ராசா பேசுகிறார். இதேபோல் நான் ஆ.ராசாவி்டம் திருப்பி கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?
எங்கள் தலைவர்களைப் பற்றி பேசினால் தக்க பதிலடி கொடுப்போம். மு.க.ஸ்டாலினின் திமிரை ஒடுக்குவதுதான் எங்களது வேலை. விளம்பரப்படுத்த பிரசாந்த கிஷோருக்கு ரூ. 380 கோடியை ஸ்டாலின் கொடுத்துள்ளார். இவ்வளவு கோடி ரூபாய் யாருடையது?. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடித்ததுதான்.
எடப்பாடியாரை இனிமேல் ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் அவமரியாதையாக பேசினால் இதைவிட கேவலமான பதிலடியைத்தான் கொடுப்பேன். 2-ஜியில் ஆ.ராசா ஊழல் செய்தார் என்பது நாட்டுக்கே தெரியும். காங்கிரஸ் ஆட்சியில்தான் ராசாவை கைது செய்தனர். உங்கள் பக்கம் அழுக்கை வைத்துக் கொண்டு எங்களைப் பற்றி பேச தகுதி கிடையாது.
தி.மு.க அழுகிப்போன தக்காளி. கூட்டு வைக்கவும் உதவாது, குழம்பு வைக்கவும் உதவாது. அதேநேரம், அ.தி.மு.க ஒன்றும் கை படாத ரோஜா கிடையாது. எங்கையாவது ஒரு தவறு நடந்தால் எங்கள் தலைவர்கள் கண்டிப்பார்கள்.
தமிழகத்தில் தற்போது இரண்டு புயல்கள் கடந்து சென்றுள்ளது. இரண்டிலும் உயிரிழப்பு என்பதே இல்லை என்ற நிலையை எடப்பாடி உருவாக்கியுள்ளார். மரியாதையாக பேசினால் மரியாதையாக பதில் சொல்வோம். மரியாதையின்றி பேசினால் தரம் தாழ்த்திதான் பேசுவோம். ஸ்டாலின், ராசா நடமாட முடியாத அளவிற்கு மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்'' என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/politics/rajendra-balaji-controversy-speech-again-in-sattur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக