Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

`அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர்' - யார் இந்த கமலா ஹாரிஸ்?

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் அதிபராகப் போட்டியிடுகிறார். இவருக்கு அடுத்த பதவியான துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸை ஜோ பிடென் தேர்வு செய்துள்ளார். இதனால், `தேசியக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப் பரிந்துரைக்கப்படும் முதல் கறுப்பினப் பெண்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கமலா ஹாரிஸ். இதோடு, `துணை அதிபர் பதவிக்குப் பரிந்துரைக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி’ என்ற பெருமையையும் பெறுகிறார்.

கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பரிந்துரைக்கப்பட்டது, அமெரிக்கத் தேர்தலில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

ஜோ பிடெனுடன் கமலா ஹாரிஸ்

கடந்த ஆண்டு கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடுவதாக அறிவித்து, பின்னர் நிதி நெருக்கடி காரணமாக விலகிக் கொண்டார். அப்போது ஜூன் மாதம் நடந்த ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான விவாதத்தில் ஜோ பிடெனைக் கடுமையாகச் சாடியிருந்தார் கமலா ஹாரிஸ். அப்படியிருக்க, ஜோ பிடெனின் இந்த முடிவு அரசியல் விமர்சகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பரிந்துரைக்கப்பட்டதை இந்தியர்கள் பலர் வரவேற்றுள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதே.

இதைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள அவரின் குடும்ப வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Also Read: அமெரிக்கா: `சர்வதேச கவனம்; பெண்கள், இளம் வாக்காளர்கள்!' - கமலா ஹாரிஸூக்கு குவியும் ஆதரவு

யார் இந்த கமலா ஹாரிஸ்?

கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியாவிலுள்ள ஆக்லாண்டில் அக்டோபர் 20, 1964 அன்று பிறந்தார். இவருடைய தாய் ஷியாமளா கோபாலன் தமிழகத்திலிருந்து 1960-ம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர். அமெரிக்காவில் மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்தார். இவரின் தந்தை டொனால்டடு ஜெ.ஹாரிஸ், பொருளாதாரம் படிப்பதற்காக ஜமைக்காவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். இவ்வாறு இரு வெவ்வேறு கலாசாரப் பிண்ணனிகொண்ட குடும்பத்தில் பிறந்தார் கமலா ஹாரிஸ். இவர் 1986-ம் ஆண்டு ஹோவர்டு (Howard) பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

கமலா ஹாரிஸ்

பின்னர் கலிஃபோர்னியாவிலுள்ள ஹாஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். அங்கு பயிலும்போது கறுப்பின சட்ட மாணவர்கள் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். அங்கிருந்துதான் அவரது அரசியல் வாழ்க்கைக்கான உந்துதல் கிடைத்தது என்று சொன்னால் மிகையாகாது. சட்டக் கல்லூரியில் பயின்ற பின்னர் 1990-ம் ஆண்டு கலிஃபோர்னியாவிலுள்ள அலாமேடா கவுன்ட்டியில் மாகாண வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் 1998-ம் ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞர் டெரென்ஸ் ஹாலினன் கீழ் துணை மாகாண வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதன் பிறகு 2004-ம் ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞருக்கான தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். இதன் மூலம் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வேற்று நிறத்து அமெரிக்கர் முதன்முறையாக சான்ஃபிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞராகப் பதவிவகித்தார் என்கிற பெருமையையும் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வழக்கறிஞராகப் பதவிவகித்த காலம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். 2010-ம் ஆண்டு நடைபெற்ற கலிஃபோர்னியாவின் தலைமை வழக்கறிஞர் பதவிக்குப் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். இதன் காரணமாக, `முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, ஆசிய -அமெரிக்க மற்றும் கலிஃபோர்னியாவின் முதல் பெண் தலைமை வழக்கறிஞர்’ என்ற வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் கமலா ஹாரிஸ்.

இளம் வயதில் கமலா ஹாரிஸ்
தந்தையுடன் சிறுவயதில்

இதே பதவிக்கு 2014-ம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ் 2015-ம் ஆண்டு கலிஃபோர்னியா செனட் சபைக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இவரை கலிஃபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி 2016-ம் ஆண்டு செனட் உறுப்பினர் பதவிக்காக அங்கீகரித்தது. இவர் சக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான லோரெட்டா சான்செஸுக்கு (Loretta Sanchez) எதிராகப் போட்டியிட்டு வென்றார். செனட் உறுப்பினராகப் பதவியேற்ற பின் ட்ரம்பின் பல்வேறு நடவடிக்கைகளைப் பொதுவெளியில் விமர்சித்துவந்தார்.

குறிப்பாக, அமெரிக்காவில் குடியேறிவர்களுக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக எதிர்த்தார். கடந்த பத்து வருடங்களில் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண் கமலா ஹாரிஸ்தான். சமீபகாலமாக ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிகளுக்கே தனது ஆதரவை அளித்துவந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாள் அன்று, தான் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால், பின்னர் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அதிலிருந்து விலகிக்கொண்டார். இவரது குற்றவியல் நீதித் திட்டம், பெரும்பாலும் முற்போக்குத் திட்டங்களை உடையதாகவே இருந்தது. அதே சமயம் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, தான் எதிர்த்த திட்டங்களையும் இதில் சேர்த்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Also Read: அமெரிக்கா: `துணை அதிபர் பதவி; போட்டியிடும் கமலா ஹாரிஸ்!’ - வரலாறு படைத்த பிடென்

கமலா ஹாரிஸ், ஜோ பிடெனால் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே தனது தாய்வழிச் சமூகத்தைப் பற்றி பொதுவெளியில் பேசினார். மேலும், தனது கலாசார பின்னணி காரணமாக இங்குள்ள ஒடுக்கப்பட்டவர்களின் நிலை பற்றி தனக்குத் தெரியும் என்றும் கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில், துணை அதிபரை அறிவிப்பதுதான் வெற்றியின் முதல் படியாக கருதப்படுகிறது. அந்த வகையில் கமலா ஹாரிஸின் அறிவிப்பு நிச்சயம் அமெரிக்காவில் உற்சாகத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். அதோடு இந்திய அமெரிக்கர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் இந்தத் தேர்தல் அறிவிப்பு சிறிது நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம்தான் என்றாலும், இந்தச் செய்தி இவர்களுக்கு உற்சாகத்தையே தந்திருக்கிறது. பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்களும், கமலா ஹாரிஸைத் தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். இதனால் ஜோ பிடெனுக்கான வாக்குகள் சற்றே அதிகமாகலாம். ஏற்கெனவே ஜோ பிடெனுக்கு 77 வயதாகிவிட்டதால், துணை அதிபராக கமலா ஹாரிஸைத் தேர்வு செய்ததை அரசியல் விமர்சகர்கள் பாராட்டிவருகின்றனர்.

கமலா ஹாரிஸ்

அதே சமயம் எப்போதும்போல அதிபர் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் மீதான தனிநபர் தாக்குலைத் தொடங்கிவிட்டார். அதற்கேற்ப கமலா ஹாரிஸும் ஜோ பிடெனும் அதிபர் ட்ரம்ப்பின் அரசைத் தங்களது முதல் உரையிலேயே சாடினர். மேலும், `அதிபர் ட்ரம்ப் இவ்வாறு பேசுவது ஆச்சர்யம் அளிக்கக்கூடிய ஒன்று அல்ல’ என்றனர். நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலுக்கு இப்போதே அமெரிக்காவில் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

அமெரிக்கத் தேர்தலை உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்குவது வழக்கம். இந்த முறை கமலா ஹாரிஸ் காரணமாக அமெரிக்கத் தேர்தல்மீது இந்திய மக்களின் பார்வை சற்றே அதிகமாகியிருக்கிறது. இதற்கிடையில் இப்போதே கமலா ஹாரிஸைப் பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடங்கிவிட்டன. அவற்றில் ஒரு சாரார், `கமலா ஹாரிஸ் இந்தியாவின் முகம்’ என்றும், மற்றொரு தரப்பினர், `அவர் எப்போதோ இந்திய அடையாளங்களைத் துறந்துவிட்டார்’ என்றும் விவாதித்துவருகின்றனர்.

கமலா ஹாரிஸ் - ஜோ பிடன்

இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் தற்போது `கமலா ஹாரிஸ்’ என்ற பெயர் அமெரிக்க அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாகியிருக்கிறது. இன்னும் சில மாதங்களில், `அமெரிக்காவின் இரண்டாவது குடிமகள்’ என்ற பட்டத்தை கமலா ஹாரிஸ் பெறுவாரா என்பது தெரிந்துவிடும். அதுவரை, அமெரிக்க அரசியல்மீது இந்தியர்களின் கவனம் அழுத்தமாக நிலைத்திருக்கும்.



source https://www.vikatan.com/government-and-politics/international/joe-biden-names-kamala-harris-as-vp-candidate-in-us-presidential-elections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக