Ad

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

`பணத்தை டீ கடையில் கொடுத்திடுங்க!’ - மின்வாரிய ஊழியரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, தபால் தெருவைச் சேர்ந்தவர் வேலு (50). இவரது மனைவி வள்ளியம்மாள் (46). கும்மிடிப்பூண்டியில் விவசாயம் செய்து வரும் வள்ளியம்மாள் தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் பொருத்துவதற்காக, மின் இணைப்பு வேண்டிக் கடந்த மாதம் 11-ம் தேதி கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்திருக்கிறார்.

அப்போது, வள்ளியம்மாளை அழைத்து தனியாகப் பேசிய மின்வாரிய போர்மேன் சீனு (53), விளைநிலத்தில் மின் இணைப்பு வழங்குவதற்கு 3 மின் கம்பங்கள் நட வேண்டும் என்று கூறி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். அதற்கு, வள்ளியம்மாள் எல்லா ஆவணங்களும் முறையாக இருக்கும் போது லஞ்சம் எதற்குத் தர வேண்டும் என்று வாதிட்டிருக்கிறார். வள்ளியம்மாள் குரல் உயர்த்தவே, போர்மேன் சீனு கேட்டதைக் கொடுத்தால் தான் வேலை நடக்கும், முரண்டு பிடித்தால் மின் இணைப்பே வழங்க மாட்டேன் என்று மிரட்டியிருக்கிறார்.

லஞ்சம்

மின்வாரிய ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத வள்ளியம்மாள் சீனு லஞ்சம் கேட்டது தொடர்பாகச் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் சென்று புகாரளித்தார். அவரின் புகாரைப் பெற்றுக் கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி லட்சுமிகாந்தன் அவரது தலைமையில் 3 போலீஸார் கொண்ட குழு ஒன்றினை அமைத்தார். அதைத் தொடர்ந்து, வள்ளியம்மாளிடம் ரசாயனம் தடவிய ரூபாய்த் தாள்களைக் கொடுத்து அதை மின்வாரிய ஊழியர் சீனுவிடம் லஞ்சமாகக் கொடுக்குமாறு கூறினார்கள்.

வள்ளியம்மாளும் போலீஸார் கூறியது போன்றே சீனுவுக்கு போன் செய்து, "பணம் தருகிறேன். மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அலுவலகத்திற்கு வந்து தரவா.." என்று கேட்டிருக்கிறார். அதற்கு சீனு, "மின்வாரிய அலுவலகம் வேண்டாம். கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பவானி டீ கடையில் உரிமையாளர் விஜயகுமாரிடம் நான் கொடுத்து விடுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Also Read: பொன்னேரி சிறை: `காசு கொடுத்தால் கைதியைப் பார்க்கலாம்!’ - வைரல் வீடியோவும் சர்ச்சையும்

வள்ளியம்மாளும் போலீஸாரின் வழிகாட்டுதலின்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயை சீனு சொன்ன டீ கடையில் கொடுத்திருக்கிறார். அதை அறிந்து கொண்ட சீனு சிறிது நேரத்திலேயே டீ கடைக்கு வந்திருக்கிறார். வள்ளியம்மாள் கொடுத்த லஞ்சப்பணத்தை வாங்கிக் கொண்டு மின்வாரிய அலுவலகம் சென்று விட்டு, அங்கிருந்து வீட்டிற்குக் கிளம்ப காரில் ஏறியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை கையும், களவுமாகப் பிடித்து ரசாயனம் தடவிய ரூபாய்த் தாள்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட போர்மேன் சீனுவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் இணைப்புக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



source https://www.vikatan.com/news/crime/police-arrested-an-eb-staff-who-asked-bribe-to-provide-eb-connection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக