நானும் என் கணவரும் 70 வயதுக்கு மேலானவர்கள். சென்னையில் இருவரும் தனியே வசிக்கிறோம். கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்திய உடனேயே இருவரும் போட்டுக்கொண்டோம். இந்நிலையில் இப்போது எங்களுக்கான வேலைகள் அனைத்தையும் நாங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதவிக்கு ஆட்கள் இல்லை. பேங்க், கடைகள் என எல்லாவற்றுக்கும் நாங்கள்தான் நேரில் போக வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு போட்டுக்கொண்ட தடுப்பூசியின் செயல்திறன் இன்றும் இருக்குமா? வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாமா?
- ரங்கநாயகி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
``பூஸ்டர் டோஸ் தேவையா, அது நிஜமாகவே பலனளிக்குமா என்பது பற்றிய தகவல்கள் இதுவரை நமக்கு இல்லை. பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பான பாலிசியும் வரையறுக்கப் படவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படாது என்கின்றன சில அறிக்கைகள். வேறு சில அறிக்கைகளோ பூஸ்டர் டோஸ் தேவை என்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் இப்போதைக்கு தெளிவான பதில் எதுவும் இல்லை. நீங்கள் செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் செயல்திறனானது 6 முதல் 9 மாதங்களுக்கு நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. பூஸ்டர் டோஸ் விஷயத்தில் அரசு முடிவெடுக்கும்வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
கூடியவரையில் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். தவிர்க்க முடியாமல் செல்ல நேரிட்டாலும் கூட்ட நெரிசலற்ற நேரத்தில், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை சானிடைஸ் செய்வது போன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்.
Also Read: Covid Questions: நீரிழிவுக்கு மாத்திரைகளும் இன்சுலினும் எடுக்கும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
உங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் எல்லா இடங்களுக்கும் நேரில் சென்றுகொண்டிருப்பதைத் தவிர்த்து, பணப் பரிமாற்றம், ஆன்லைன் டெலிவரி உள்ளிட்ட பல விஷயங்களை அதிலேயே செய்யப்பாருங்கள்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/do-the-senior-citizens-who-are-fully-vaccinated-need-a-booster-dose-to-be-safe
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக