Ad

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

நூதன முறையில் மோசடி; குவியும் புகார்கள்! - ரஃபோல் நிறுவன உரிமையாளர் தலைமறைவு

கடந்த ஜூலை மாதம் வியக்கவைக்கும் விளம்பரத்தை `Rafoll Retails Pvt Ltd Egg Mart' என்ற நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த விளம்பரத்தில், ஒரு முட்டை 2.24 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்றும், 700 ரூபாய் முதலீடு செய்தல் வாரம் 6 முட்டை, 1,400 ரூபாய் முதலீடு செய்தல் 12 முட்டை, 2,800 ரூபாய் முதலீடு செய்தல் 24 முட்டை நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சலுகை முதலில் வரும் ஐந்து லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஃபோல் நிறுவன விளம்பரம்

இந்த விளம்பரத்தை அடுத்து பல பொதுமக்களும், அந்த குறைந்த விலையில் முட்டைகளை வாங்க அந்த நிறுவனத்தின் வாங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்தினர். இந்த விளம்பரத்தில் கூறப்பட்டது போலக் குறைந்த விலையில் முட்டை கொடுப்பது சாத்தியமே இல்லை என்று முட்டை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கமும் தெரிவித்திருந்தது. இந்த விளம்பரத்தில் ஏதோ வில்லங்கம் இருப்பதாகக் கருதிய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரை நேரடியாக விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தை உரிமையாளரான அரக்கோணத்தைச் சேர்ந்த சிவம் நரேந்திரன், கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இவரிடம் குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார். மேலும், விசாரணையில் உரிய அனுமதி எதுவும் பெறாமல் திருமுல்லைவாயிலில் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. அதுமட்டுமில்லாது, அவர்கள் நிறுவனம் வெளியிட்டிருந்த விளம்பரத்தை நம்பி பலரும் அனுப்பிய பணத்திற்கு ரசீது எதுவும் அனுப்பப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடி நிறுவனம்

அந்த திட்டத்தில் சேருவதற்கு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 300-க்கும் அதிகமான நபர்கள் 4.5 லட்சம் ரூபாயை அனுப்பியிருந்தனர். அந்த பணத்தை எல்லாம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே காவல்துறையினர் திரும்பி அனுப்பினார். மேலும், அந்த வங்கிக் கணக்கிற்கு இனி யாரும் பணம் அனுப்பமுடியாமல் செய்ததோடு, அந்த அனுமதி பெறாத நிறுவனத்தை மூடினர். அந்த நிறுவனம் ஏற்கனவே பலசரக்கு வியாபாரம் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்தமாதம் இந்த சம்பவம் நடந்தபோதே, விளம்பரங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

Also Read: `இன்டர்நெட் பேக்கிங்கில் நூதன மோசடி; உஷார்..!' - SBI வாடிக்கையாளரின் நேரடி அனுபவம்

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாகத் தமிழகம், கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 1,000-க் கணக்கான புகார்கள் சென்னை கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களுக்கு வந்தவண்ணம் இருந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் பல்வேறு சீட்டுத் திட்டங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த திட்டங்களில் முதலில் சேர்ந்த நபர்களுக்கு மளிகை பொருட்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக மாதம் 3,000 ரூபாய் சீட்டுக் கட்டிய யாருக்குமே பணமோ, பொருளோ எதுவுமே வழங்கப்படவில்லை. ஏமாந்த பொதுமக்கள் பலர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்க வந்திருந்தனர்.

அடித்து நொறுக்கப்பட்ட நிறுவனம்

இதுகுறித்து அந்த நிறுவன உரிமையாளர் சிவம் ஒரு ஆடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த ஆடியோவில், தன்னை குறித்து காவல்துறையில் புகார் வழங்கினால் அனைவர்க்கும் மஞ்சள் நோட்டீஸ் வழங்கிவிடுவேன் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் நுழைந்து நிறுவனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுத்தருமாறு முதலீடு செய்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சிவன் உள்ளிட்ட 12 நபர்களைத் தேடிவருகிறார்கள்.

இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டம் என்ற பெயரில் நம்பகத்தன்மை இல்லாத மோசடி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாறவேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/the-rafoll-company-scam-the-public-in-new-way-owner-escaped-police-investigation-going-on

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக