Ad

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

ஆப்கன் டு குஜராத்: `ரூ.21,000 கோடி ஹெராயின் கடத்தல்; சென்னையில் சிக்கிய தம்பதி!'

உலகிலேயே ஹெராயின், அபின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாடாக தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் கருதப்படுகிறது. இவ்வகையான போதைப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மூலப்பொருளான அபின் பாப்பி செடி ஆப்கனில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அந்நாட்டைக் கைப்பற்றியிருக்கும் தாலிபன்கள் அபின் பாப்பி செடி சாகுபடியை முற்றிலுமாக நிறுத்தி விட்டதாக வெளி உலகத்திற்குக் கூறிக் கொண்டிருக்கும் போதிலும், அங்கு பாப்பி செடி கொண்டு போதைப் பொருள்கள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் இந்த செடிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆப்கன் கள்ளச்சந்தையில் இந்த போதைப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவுக்கும் ஆப்கானிலிருந்தே ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கிடைக்கப்பெறுகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பல் ஒன்றின் மூலமாக 2 கன்டெய்னர்களில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குநரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதன் பேரில் கடந்த வாரம், ஈரானிலிருந்து குஜராத் மாநிலத்தின் முந்த்தரா துறைமுகம் வந்தடைந்த குறிப்பிட்ட கப்பலை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

முந்த்ரா துறைமுகம்

அதில், சுமார் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, அதிகாரிகள் போதைப் பொருள்களைக் கைப்பற்றி, அந்த கப்பலில் இருந்த 2 ஆப்கனியர்களை கைது செய்தனர். அப்போது அந்த ஹெராயின் பெட்டிகள் மீது 'ஆஷி டிரேடிங் கம்பெனி', சத்தியநாராயணபுரம், விஜயவாடா என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, அந்த முகவரியில் ஆய்வு மேற்கொள்ளப் புலனாய்வு அதிகாரிகள் விஜயவாடா விரைந்தனர். உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் அதிகாரிகள் விசாரித்ததில், அந்த பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த வீடு பூட்டி கிடந்திருக்கிறது. மேற்படி, அந்த வீட்டில் முகப்பவுடர் வியாபாரம் செய்து வரும் காக்கிநாடாவைச் சேர்ந்த கணவன் - மனைவி சுதாகர் - வைஷாலி என்பது போலீஸாருக்கு தெரியவந்தது. அதே போல், ஹெராயின் கடத்தலில் தொடர்புடைய அந்த தம்பதி தற்போது சென்னையில் வசித்து வருவதாகவும் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சென்னை விரைந்த புலனாய்வு அதிகாரிகள் சென்னை போலீஸாரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த தம்பதி குறித்த பல தகவல்கள் வெளியாகின. வெளியுலகிற்கு முகத்தில் பூசும் பவுடர் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதைப் போல் காட்டிக்கொண்டு, சுதாகர் தன் மனைவி வைஷாலியின் பேரில் ஏற்றுமதி - இறக்குமதி உரிமம் பெற்று ஜி.எஸ்.டி பதிவு செய்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டது வந்தது தெரியவந்தது. காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதி சென்னையில், கொளப்பாக்கம் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக வாடகை வீட்டில் தங்கி, ஆந்திரா முகவரி கொண்டு கடத்தல் தொழில் செய்து வந்ததும் அம்பலமானது. இதனை தொடர்ந்து சென்னை விரைந்த டி.ஆர்.ஐ அதிகாரிகள் பதுங்கியிருந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி வைஷாலி இருவரையும் நேற்று முன்தினம் அதிரடியாகக் கைது செய்தனர்.

டி.ஆர்.ஐ அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

அதையடுத்து, குஜராத் அழைத்துச் சென்று அவர்களை விசாரித்த அதிகாரிகள், இருவரையும் நேற்று குஜராத்தின் புஜ் நகரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏற்கெனவே, சென்னை தம்பதியைத் தவிர்த்து ஆப்கனை சேர்ந்த இருவர் குஜராத் புலனாய்வு அதிகாரிகளின் பிடியில் இருக்கும் நிலையில், இந்த ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் டெல்லியைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகளால் சந்தேகிக்கப்படுகிறது. பல வருடங்களாக இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் இந்த தம்பதி, அவற்றை ஆப்கனிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரும் வேலையை மட்டும் தான் பார்க்கிறார்கள் என்றும், இதற்குப் பின்னால் பெரிய கும்பல் ஒன்று இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Also Read: 3,000 கிலோ; ரூ.21,000 கோடி மதிப்பு! - குஜராத்தில் சிக்கிய ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட போதைப்பொருள்

இந்நிலையில், இந்த கடத்தல் தொடர்பாக விளக்கமளித்துள்ள அதானி துறைமுக நிர்வாகம், "முந்த்ரா துறைமுகம் எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதில் உள்ள கன்டெய்னர்கள் அதிகாரிகளால் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதை திறக்கும் அதிகாரமும் அவர்களுக்கே உள்ளது. அதில் எங்களுடைய பணி எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் உள்நோக்கத்துடன் அதானி குழுமத்தை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்டு வரும் செய்திகள் தவறானது," என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/dri-officials-arrested-chennai-couple-in-gujarat-heroin-smuggling-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக