Ad

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

`மோடிக்கு மாற்று ராகுலா, மம்தாவா?' பரபரப்பைக் கிளப்பிய `ஜெகோ பங்களா' கட்டுரை - பின்னணி என்ன?!

`மோடிக்கு மாற்று சக்தியாக ராகுல் காந்தியால் இருக்க முடியாது' என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுதீப் பந்த்யோபத்யாய் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாளிதழான `ஜகோ பங்களா' முதல் பக்க கட்டுரையில், சுதீப் சில விஷயங்களை எழுதியிருந்தார். அந்த விஷயங்கள்தான் தேசிய அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மம்தா பானர்ஜி

Also Read: உ.பி:7 முனைப் போட்டி... சூடுபிடிக்கும் தேர்தல் களம்! - யோகிக்கு டஃப் கொடுக்கும் தலைவர்கள் யார் யார்?

அந்தக் கட்டுரையில், ``இன்று நம் நாட்டுக்கு ஒரு மாற்று சக்தி தேவைப்படுகிறது. ராகுல் காந்தியை எனக்குப் பல காலமாகத் தெரியும். ஆனால், அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்கத் தவறிவிட்டார். மோடிக்கு மாற்று சக்தியாக உருவெடுப்பதில் மம்தா வெற்றிபெற்றுவிட்டார். மொத்த நாட்டுக்கும் மம்தா தேவைப்படுகிறார். மற்ற எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகு மம்தாவை மாற்று முகமாக முன்னிறுத்துவோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார் சுதீப்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ராகுல் காந்தியையும், சோனியா காந்தியையும் டெல்லி சென்று சந்தித்துவிட்டு வந்தார் மம்தா. அந்தச் சமயத்தில், `2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய முகமாக மம்தா முன்னிறுத்தப்படலாம்' என்ற பேச்சுகள் அடிபட்டன. இந்தநிலையில், `காங்கிரஸ் கூட்டணி தேவை. ஆனால், மம்தாதான் பிரதமர் வேட்பாளர்' என்ற தொனியில் கட்டுரை வெளியிடப்பட்டிருப்பது இவ்விரு கட்சிகளுக்குமிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கட்டுரை எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கும் என்பது பற்றிப் பேசும் அரசியல் நோக்கர்கள் சிலர், ``2021 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில், மம்தாவை வீழ்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்தது பாஜக. பிரதமர் மோடி பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டர். தேர்தல் வெற்றிக்காக அமித் ஷா மேற்கு வங்கத்திலேயே பல நாள்கள் முகாமிட்டிருந்தார். இருந்தும், பாஜக-வால் மம்தாவை வீழ்த்த முடியவில்லை. அதுமட்டுமல்லாது, தனிப்பெரும்பான்மையோடு அமோக வெற்றிபெற்றார் மம்தா. ஆட்சிக்கு வந்த பின்னரும் பாஜக கொடுத்த குடைச்சல்களை எளிதாகச் சமாளித்து பதிலடி கொடுத்தார் அவர்.

மோடி - மம்தா பானர்ஜி

பா.ஜ.க-வை வீழ்த்த மம்தாதான் சரியான நபர் என்பதை நிரூபிக்க மேற்கண்ட காரணங்களைத்தான் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் அடுக்குகிறார்கள். அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் மட்டும் பலமாக இருந்தால் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது என்பது மம்தாவுக்குத் தெரியும். மத்தியில் ஆட்சியைப் பிடிக்க, நாடு முழுவதும் கட்டமைப்பு கொண்ட காங்கிரஸின் உதவி தேவைப்படுகிறது. அதனால் காங்கிரஸின் கீழ் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, அந்த மெகா கூட்டணிக்குப் பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள மம்தா முயன்றுவருவதாகத் தெரிகிறது. எனவேதான் இதுபோன்ற கட்டுரையை வெளியிட்டு, `மம்தாதான் மோடிக்கு மாற்று முகமா?' என்ற விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். அதற்கான எதிர்வினை என்னவென்று தெரிந்துகொள்ளவும் இப்படியான வேலைகளைச் செய்யத் தொடங்கியிருக்கிறது அந்தக் கட்சி.

கடந்த இரண்டு தேர்தல்களாக ராகுலை முன்னிறுத்தி காங்கிரஸால் பாஜக-வை வீழ்த்த முடியவில்லை என்ற காரணத்தைப் பயன்படுத்தி மம்தாவை முன்னிறுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டுவருகின்றனர். அதில் ஒன்றுதான் ஜெகோ பங்களாவில் வெளியான கட்டுரை'' என்கிறார்கள்.

ஜெகோ பங்களா கட்டுரை பற்றிப் பேசிய மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி, ``இந்தியாவின் பழமையான கட்சியும், பெரிய கட்சியுமான காங்கிரஸிலிருந்து கொண்டு யார் வெற்றிபெற்றவர்கள் யார் வெற்றிபெறாதவர்கள் என்ற விவாதத்துக்குள் நாங்கள் வர விரும்பவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதைப் பற்றி இப்போதே பேசவேண்டிய அவசியமில்லை. தொடர்ச்சியாக 2014-ம் ஆண்டு முதல் இப்போது வரை மோடி அரசுக்கு எதிராக நிற்கக்கூடியவர் ராகுல் காந்தி மட்டுமே'' என்றிருக்கிறார்.

மம்தா பானர்ஜி

Also Read: பா.ஜ.க-வை அலறவிடும் மம்தா ! அவருக்கு மட்டும் எப்படிச் சாத்தியமாகிறது?!

பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவோ, ``அதிர்ஷ்டத்தில்தான் மேற்கு வங்தத் தேர்தலில் மம்தா வெற்றிபெற்றார். இப்போது பிரதமராக வேண்டும் என்கிற லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். மம்தாவின் பகல்கனவுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்'' என்று இந்த விவகாரத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-or-mamata-who-is-the-opposition-face-for-modi-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக