சசிகலா, தினகரன் மேல் கோபமாக இருக்கிறார். இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக பெரிய அளவிலான கருத்து வேறுபாடு நிலவி வருவதாக வெளியே தகவல்கள் பரவிய நிலையில், தன் மகள் திருமணத்தின் மூலம் அவை பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தினகரனும், பழைய படி உற்சாகமான சசிகலாவை பார்க்க முடிவதாகவும், நாம எதிர்பார்த்த நல்ல நாள் சீக்கிரமே வரப்போவதாக சசிகலா கண்சிமிட்டி பேசியதாக தஞ்சாவூரில் உள்ள அவரது குடும்ப உறவினர்கள் உற்சாமகமாக கூறி வருகின்றனர்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரை சேர்ந்த பாரம்பர்யமிக்க குடும்பங்களில் ஒன்றான, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான மறைந்த துளசி அய்யா வாண்டையாரின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி ஐயா வாண்டையாருக்கும் கடந்த 16-ம் தேதி திருவண்ணாமலையில் சசிகலா தலைமையில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
தினகரனின் ஒரே செல்ல மகள் ஜெயஹரிணி. கிருஷ்ணசாமி வாண்டையார் குடும்பத்தின் வீட்டு விசேஷங்கள் என்றாலே பிரமாண்டமாத்திற்கு துளியும் குறைவிருக்காது. இரண்டு குடும்பங்கள் இணையும் போது திருமண ஏற்பாடுகள் வேற லெவலில் இருக்க வேண்டும் என்று தேதி நிச்சயம் செய்யப்பட்ட நாளிலேயே இரு வீட்டாரும் முடிவு செய்தனர். ஆனால் கால சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்காத நிலையில் எளிய முறையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தினகரன் ரொம்பவே ரிலாக்ஸாக இருக்கிறார். தனக்கும் சசிகலாவுக்கும் பெரிய அளவிலான கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக வெளியே செய்திகள் பரவின. ஆனால் சசிகலா முழுமையாக இருந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். அதே நேரத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற பெண் மறு வீடு அழைக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் சசிகலா.
``இது சசிகலா என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், பாசமும் துளியும் குறையவில்லை என்பதை காட்டுகிறது. தேவையில்லாமல் எனக்கும், சசிகலாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக எங்க குடும்பத்தை சேர்ந்த சிலரே பரப்பி அதன் மூலம் குளிர் காய நினைத்தனர். அவர்களின் முயற்சியும் பொய்யாகியிருக்கிறது. இனி எனக்கு எந்த கவலையும் இல்லை” என தினகரன் தனக்கு நெருக்கமான உறவினர்கள் சிலரிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருப்பதாக சசிகலா உறவுகள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Also Read: தினகரன் மகள் திருமணம்: கலந்துகொள்ளாத திவாகரன்; மெளனம் காத்த சசிகலா!
இது குறித்து சசிகலா குடும்ப உறவுகள் வட்டாரத்தில் பேசினோம், `சொந்தம் விட்டு போக கூடாதுனு எப்போதும் நினைப்பவர் சசிகலா. உறவுகளுக்கு அவர் கொடுக்கிற முக்கியத்துவம் மாதிரி யாராலும் கொடுக்க முடியாது. சொந்தங்கள் இணைந்திருக்க வேண்டும் என தன் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை அக்கா வனிதாமணியின் மகனான தினகரனுக்கு திருமணம் செய்து வைத்தார். தினகரன், அனுராதா தம்பதிக்கு சில ஆண்டுகள் குழந்தை இல்லை.
திருவண்ணாமலை கோயில் மீதும், அங்கிருந்த மறைந்த மூக்குப்பொடி சித்தர் மீதும் தனி பக்தி கொண்ட்டிருந்தார் தினகரன். திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று வேண்டி கொண்ட பிறகுதான் செல்ல மகள் ஜெயஹரிணி பிறந்தார். திருவண்ணாமலை கோயில் சந்நிதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மடியில் வைத்தே ஜெயஹரிணிக்கு காதணி விழா நடந்தது. அந்த சென்டிமென்ட் காரணமாகவே திருமணத்தை திருவண்ணாமலையில் நடத்த முடிவு செய்தார்.
கடந்த 15-ம் தேதி நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது திருவண்ணாமலையில் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது தினகரனை அழைத்த சசிகலா, `நல்ல சகுணம் உன் பொண்ணு நல்லாயிருப்பாள்’னு சொன்னார். தினகரனுக்கு அடுத்த நாள் என்னவாகுமோங்கிற பயம். ஆனால் அடுத்த நாள் காலை சொட்டு மழையில்லை. திருமணமும் எளிமையாகவும் அதே நேரத்தில் விமர்சையாகவும் நடந்து முடிந்தது.
ஏகப்பட்ட கோயில்களிலிருந்து பூஜைகள் செய்யப்பட்ட மாலை மணமக்களுக்கு அணிவிக்கப்பட்டது. மணமகள் ஜெயஹரிணியின் கழுத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாலைகள் போடப்பட்டிருந்தது. மாலை வெயிட் தாங்காமல் கழுத்து வலியால் ஜெயஹரிணி முகம் மாறுவதை கவனித்த, மேடைக்கு கீழே அமர்ந்திருந்த சசிகலா, மேலே சென்று தானே அந்த மாலைகளை ஒவ்வொன்றாக எடுத்த பிறகு சடை உள்ளிட்டவற்றை சரி செய்தார். 20 வருடங்களுக்கு முன்பு வீட்டு விஷேசம் என்றால் சசிகலா எப்படி இருப்பாரோ அன்று அப்படி இருந்ததை எல்லோரும் பார்த்தோம். சசிகலா கிட்டதட்ட கால்மணி நேரத்திற்கு மேலாக தன் மகள் ஜெயஹரிணிக்கு உதவியதை பார்த்து ஆனந்த கண்ணீரில் தினகரன் கலங்கினாராம்.
மணமக்கள் அழைப்பு போன்ற நிகழ்ச்சிகள் இருப்பதால் அன்று மாலையே தினகரன் உள்ளிட்டவர்கள் தஞ்சாவூர் புறப்பட்டனர். சசிகலாவிடம் சென்ற தினகரன், `தஞ்சாவூர்ல நடைபெற இருக்கும் பெண் அழைப்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் வர வேண்டும்’ என்றார். மணமகனின் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையாரும் அழைத்தார். `நிச்சயம் வருகிறேன்’ என சொன்னவர், நிகழ்வுக்கு முந்தைய நாள் மாலை தஞ்சாவூர் வந்து கணவர் ம. நடராசனால் கட்டப்பட்ட தன் இல்லத்தில் தங்கினார் சசிகலா.
பின்னர் நேற்று மதியம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷின் வீட்டில் பெண் மறு அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சசிகலா காலையிலேயே டாக்டர் வெங்கடேஷ் வீட்டிற்கு சென்றார். சசிகலா வந்துள்ளதால் மிக முக்கியமான உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. எல்லோரிடத்திலும் சிரித்தப்படி சசிகலா சகஜமாக பேசியதை பார்த்து பலரும் வியந்தனர். கல கலனு இருப்பது தான் அவருடைய சுபாவம். ஆனால் சூழ்நிலையால் அவை சில வருடங்களாக மிஸ் ஆகிவிட்டது. இப்போது பழைய சசிகலாவை பார்க்க முடிவதாக உறவினர்கள் உற்சாகமாகினர். மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் ஓடிச்சென்று வரவேற்றார். மணமகனுக்கு தன் கையால் உணவு வைத்தார். அப்போது `ஜெயா செல்லமா வளர்ந்தவள். அவள நல்லா பார்த்துக்கனும்பா’ என்று கூறினாராம்.
இந்த சம்மந்தம் முடிவானதுமே, அப்போது சிறையில் இருந்த சசிகலாவிற்கு தகவல் சொல்லப்பட்டது. பாரம்பர்யமான குடும்பத்துல நம்ம பொண்ண கொடுக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கனும். நல்ல சம்மந்தம் விட்டுறாது’னு சசிகலா தான் தினகரனை ஆர்வப்படுத்தினார். அதே போல் தேதி குறிக்கப்பட்டு சில சூழ்நிலைகளால் இரண்டு முறை திருமணம் தள்ளிப்போனதை எண்ணி தினகரன் கலங்கினார். அப்போதும் சசிகலா நல்லபடியா நடக்குமுனு தெம்பூட்டினாராம்.
மகள் திருமணம் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியா முடிந்து விட்டது. இதுக்காகத்தான் இத்தனை நாள் பொறுமையா இருந்தேன். இனி அரசியலில் முழு வேகத்துல இறங்கி பார்க்கணும்’ என தினகரன் கலகலப்பாக கூறியிருக்கிறார். `எதுவா இருந்தாலும் அவசரப்படாம செய்யுனு’ சசிகலா கூறினார். கொரோனா முடிந்த பிறகு சுற்றுப் பயணம் செய்ய சசிகலா திட்ட மிட்டிருந்தார். அவ்வப்போது கட்சி நிர்வாகிகளிடம் போனில் பேசி வந்தார். எதுவும் கை கூடி வரல. இப்போது சத்தமில்லாமல் சில மூவ்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனாலதான் சசிகலாவை பழையபடி உற்சாமகான பார்க்க முடிகிறது.
Also Read: சசிகலா தலைமையில் தினகரன் மகள் திருமணம்: நடிகர் பிரபு உள்ளிட்ட உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்து!
சசிகலா தஞ்சாவூர்லில் இரண்டு நாள் தங்கியிருந்தார். இதனை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்னைய பார்க்கவும் யாரையும் அனுமதிகாதீங்கனு வரும் போதே சொல்லியிருக்கிறார். தகவல் தெரிந்து பார்க்க சென்றவர்களையும் சந்திக்கவில்லையாம். எல்லோரையும் நானே அழைச்சு பார்க்க கூடிய நாள் சீக்கிரமே வரப்போகுதுனு மட்டும் சொன்னாராம். மொத்தத்தில் சசிகலா சில வாரங்களாகவே ரொம்பவே உற்சாகமாக காணப்படுவதாகவும், புது பாய்ச்சலுக்கு அவர் தயாராகி வருகிறார் என்றே தெரிவதாக சொல்கிறார்கள் உறவினர்கள்.
source https://www.vikatan.com/news/politics/ttv-dinakaran-happy-with-sasikalas-presence-in-his-house-event-likely-to-have-new-political-move
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக