தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார். யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியானதும் அதிகாரிகள் குழுவினர் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரம் அறிய வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தலைவராக நாலுமாவடியைச் சேர்ந்த முருகேச பாண்டியன் உள்ளார்.
செயலாளராக திருச்செந்தூரைச் சேர்ந்த தேவராஜ், துணைச் செயலாளராக குரும்பூரை சேர்ந்த ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி வட்டார கூட்டுறவு வங்கியின் களஅலுவலரும், கூட்டுறவு சார்பதிவாளரான ஆழ்வார்குமாரிடம் குரும்பூர் வங்கியின் நகை அடமான கடன் குறித்தும் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர்கள் கேட்டறிந்தனர்.
அப்போது அவர், ’நான் அனைத்து நகைக்கடனையும் ஆய்வு செய்துவிட்டேன். அதில் எந்த பிரச்னையும் இல்லை, என்று கூறிவிட்டார். பின்னர் அவரே ஒரு நாள் ஆய்வு செய்ததில் ஏதோ சில குளறுபடிகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 8-ம் தேதி மற்றும் 13-ம் தேதியில் நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மொத்தம் நகை இருந்த 548 பைகளில் 261 நகைப் பைகள் மாயமானது ஆய்வில் தெரியவந்தது.
இதனால், ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 மோசடி செய்தது தெரியவந்தது. இதேபோல் வங்கியில் டெப்பாசிட் செய்த பணம் இருக்கிறதா என்று வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்தபோது, டெப்பாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட் போட்டுக் கொடுத்து அந்த பணத்தையும் மோசடி செய்தது தெரியவந்தது.
Also Read: தூத்துக்குடி: கூட்டுறவு சங்கக் கடன்கள்; தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் ஐ.பெரியசாமி
தொடர்ச்சியாக வங்கியில் லட்சணக்கில் பணத்தை டெப்பாசிட் செய்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக விசாரணைக் குழுவினரிடம் புகார் அளித்து வருகின்றனர். இதனால், இந்த பண மோசடி ரூ.3 கோடிக்கும் மேல் செல்லலாம் என்கின்றனர். இதனையடுத்து வங்கி தலைவர் முருகேசப்பாண்டியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செயலாளரார் தேவராஜ், துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், ஆழ்வார்திருநகரி வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பண மோசடி குறித்து விசாரணை அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை. நகை வைக்காமலேயே நகைக்கடன் பெற்றதுபோல், போலி நகை வைத்து நகைக்கடன் பெற்றுள்ளார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/fraud-in-tuticorin-co-operative-bank-investigation-on-the-way
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக