இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் அதிகம் பேசப்படாத ஒரு பெண், துர்காவதி தேவி. குறிப்பாக இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இவரது அதிரடித் தாக்குதல்களால் ஆட்டம்கண்ட ஆங்கிலேயர்கள் இவரை `தி அக்னி ஆப் இந்தியா’ (The Agni of India) என்றே அழைத்தனர்.
உத்தரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத் மாவட்டத்தில் 1907-ம் ஆண்டு ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் துர்காவதி தேவி. இவரின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்தவர். துர்காவதியின் தாத்தாவும் பிரிட்டிஷ் அரசில் காவல் அதிகாரியாகப் பணிபுரிந்தார். தந்தையும், தாத்தாவும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தாலும் அவர்களது வழித்தோன்றலான துர்காவதி அப்படி இருக்கவில்லை. சிறுவயதிலிருந்தே விடுதலை தாகம் உள்ளவராக இவர் வளர்ந்தார்.
இவருக்கு 11 வயது ஆகும்போது செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பக்வதி சரண் வோக்ரா என்கிற 15 வயது இளைஞருடன் திருமணம் நடந்தது. துர்காவதியைப் போல பக்வதி சரண் வோக்ராவும் தேச விடுதலை குறித்த பெருங்கனவுடன் இருந்ததைக் கண்டு அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
குறிப்பாக பக்வதி வோக்ரா, மாவீரர் பகத்சிங்கை அடிக்கடி சந்தித்தார். ஆனால் ஒரு பணக்கார வீட்டுப் பையன் இப்படி சுதந்திர தாகம் கொண்டு திரிவதை பலரும் சந்தேகக் கண்கொண்டே பார்த்தனர். `ஒருவேளை இவன் பிரிட்டிஷ் அரசின் கைக்கூலியோ’ என்றும் எண்ணினர். ஒருகட்டத்தில் இவரின் உண்மையான சுதந்திரப் பற்று புரியவர, அதன் பின்னரே பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் போன்ற வீரர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன் (Hindustan Socialist Republican Association) என்கிற புரட்சி அமைப்பில் இவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
காலங்கள் மெள்ள நகர்ந்தன. துர்காவதி ஒரு குழந்தைக்குத் தாயானார். துர்காவதிக்கும் பக்வதி சரண் வோக்ராவுக்கும் இடையில் கணவன் - மனைவி என்கிற உறவையும் தாண்டி அற்புதமான ஒரு நட்பு வளர ஆரம்பித்தது. குறிப்பாக கணவரின் சுதந்திரப் போராட்ட முன்னெடுப்புகளை அருகிலிருந்து பார்த்துப் பார்த்து தாமாகவே அந்தப் புரட்சிக் குழுவில் தன்னையும் இணைந்துகொண்டார் துர்காவதி. கணவனும் மனைவியுமாக இணைந்து துப்பாக்கியைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்தனர். முதற்கட்டமாக போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் கொடுக்க ஆரம்பித்தார் துர்காவதி.
இதன் காரணமாக, ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன் குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் துர்காவதியை `துர்கா பாபி', அதாவது துர்கா அண்ணி என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டங்களில் துர்காவதியின் பங்கு, நம்மை மெய்சிலிர்க்க வைப்பது. அது பற்றி பார்ப்போம்...
அச்சமின்றி மாறுவேடத்தில் பயணம்!
பிரிட்டிஷ் காவல் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் என்பவரை கொன்ற பிறகு 1928-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் நாள் பகத்சிங்கும், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரும் துர்காவதியின் வீட்டிற்குச் சென்றனர். நடந்ததை அறிந்துகொண்ட துர்காவதி பகத்சிங்கை கல்கத்தாவிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கினார். இதன்படி பகத்சிங் ரயிலில் கல்கத்தாவிற்குப் பயணித்தார். கூடவே அவரின் மனைவி வேடத்தில் துர்காவதியும் அந்த ரயிலில் பயணம் செய்தார். மற்றுமொரு சுதந்திரப் போராட்ட வீரரான ராஜ்குரு இவர்கள் இருவரது சேவகனாகப் பயணப்பட்டார். இதில் வியப்பான செய்தி என்னவென்றால், இவர்கள் பயணித்த அதே ரயிலில் சுமார் 500 காவலர்களும் பயணித்தனர். இத்தனை பேரின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு பகத்சிங்கை கல்கத்தாவிற்கு பத்திரமாகக் கொண்டுசேர்த்த துர்காவதியின் நெஞ்சுரம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது.
Also Read: இந்திய தேசியக்கொடி எத்தனைமுறை மாற்றியமைக்கப்பட்டது என்று தெரியுமா?
வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி!
கல்கத்தாவை அடைந்த பகத்சிங், அதுல் கங்குலி, ஜி.என்.தாஸ், பினிந்தர் கோஷ் ஆகிய தனது வங்காள சகாக்களை துர்காவதியுடன் சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பகத்சிங் உள்ளிட்ட தனது சகாக்களுடன் சேர்ந்து துர்காவதியும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியைப் பெற்றார்.
சகாக்களைக் காப்பற்றப் போராட்டம்!
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவருக்கும் ஆங்கிலேய அரசு தூக்குத் தண்டனை விதித்ததும் அதிர்ச்சியடைந்த துர்காவதி தன்னிடமிருந்த நகைகள் அனைத்தையும் மூவாயிரம் ரூபாய்க்கு விற்று அப்பணத்தின் உதவியோடு அவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்தார். பிற விடுதலைப் போராட்ட வீரர்களைச் சந்தித்து உதவி கேட்டும் மன்றாடினார். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்காத ஆங்கில அரசு அவர்கள் மூவரையும் தூக்கிலிட்டது.
இச்சம்பவத்தின் ஊடே மற்றுமொரு வேதனையான சம்பவமும் நிகழ்ந்தது. அதாவது தூக்குத் தண்டனை பெற்று பகத்சிங் சிறையில் இருந்தபோது சிறைச்சாலையில் வெடிகுண்டு வீசி பகத்சிங்கை தப்பிக்க வைக்கும் முயற்சியில் துர்காவதியின் கணவர் பக்வதி வோக்ரா இறங்கினார். அதற்காக மாதிரி வெடிகுண்டைத் தயாரித்து அதை லாகூர் நகருக்கு அருகிலிருந்த ராவி நதிக்கரையில் வைத்துச் சோதித்துப் பார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் பக்வதி வோக்ரா தனது உயிரை இழந்தார்.
இது துர்கா பாபிக்குப் பேரிழப்பு என்றாலும் அவர் கலங்கிவிடவில்லை. ஆங்கிலேயரின் வஞ்சத்தால் வீழ்ந்த தனது சகாக்களுக்காவும், வீரர்களைக் காப்பற்றுவதற்காக தனது இன்னுயிரையும் இழந்த கணவருக்காவும் இன்னும் தீவிரமாகப் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார்.
குறிப்பாக பகத் சிங் மற்றும் சகாக்களைத் தூக்கில் போடக் காரணமாக இருந்த பஞ்சாபின் முன்னாள் கவர்னரான லார்ட் ஹெய்லி என்பவரை பழிவாங்கத் துடித்தார் துர்காவதி. இதற்கான முயற்சியில் இவர் இறங்கியபோது அந்த கவர்னர், தப்பிவிட கவர்னரின் உதவியாளர்கள் துர்காவதியின் தாக்குதலால் காயமடைந்தனர். இதற்காகக் கைது செய்யப்பட்ட துர்காவிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைத்தது.
இப்படி இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்த துர்காவதி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரில் ஒரு சாதாரணப் பிரஜை போல இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தார். லக்னோவில் உள்ள புரானா கிலா என்கிற பகுதியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக பள்ளி ஒன்றையும் நடத்தினார். இவர் நடத்திவந்த பள்ளி தற்போது `சிட்டி மான்டிசோரி ஸ்கூல்’ (City Montessori School) என்று அழைக்கப்படுகிறது. இவைதவிர தன்னிடமிருந்த நிலத்தையும் சமூகப் பணிகளுக்காகத் தானமளித்துவிட்ட இவர் 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தனது 92-ம் வயதில் மறைந்தார்.
Also Read: சுதந்திர இந்தியா 75... தேசம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய 22 அரசியல் நிகழ்வுகள்!
ஆனால் தேச விடுதலைக்காக தனது ஒட்டுமொத்த வாழ்வையே அர்ப்பணித்த இவரது மறைவு குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளிலோ, அல்லது மற்ற செய்தி ஊடகங்களிலோ தனிச்சிறப்புடன் இடம்பெறவில்லை. இவை குறித்து விரிவாகப் பேசப்படவுமில்லை. இவ்வளவு ஏன்? லக்னோ, மும்பை, காசியாபாத் போன்ற நகரங்களில் இவரது நினைவைப் போற்றும் எந்த ஒரு செயலும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயமே.
சமையலறை மட்டுமே உலகமாக, கணவனுக்குப் பின்னால் செல்வதை மட்டுமே பாக்கியமாகக் கருதி இந்தியப் பெண்கள் வாழ்ந்த அந்தக் காலகட்டத்தில் கணவரின் சகாவாகப் பயணப்பட்டு, தனது துணிச்சலான, புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் ஆங்கிலேயரை நிலைகுலையவைத்த துர்காவதியின் உத்வேகமூட்டும் வரலாற்றை, இந்தியர்கள் ஒவ்வொருவரும் அறியவேண்டியது அவசியம். இதன் முதற்கட்டமாக இவரது வாழ்க்கையைத் திரைப்படமாக ஆவணப்படுத்தினால் அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சென்று சேரும் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.
எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?
source https://www.vikatan.com/news/women/a-story-of-brave-indian-woman-freedom-fighter-durgawati-devi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக