Ad

சனி, 14 ஆகஸ்ட், 2021

`மாநில சுயாட்சி' பேசுகிறீர்கள்; ஆனால், உள்ளாட்சி அதிகாரத்தில் கை வைக்கிறீர்கள்; இது சரியா ஸ்டாலின்?

மக்களின் மனசாட்சியாக, அவர்களின் குரலாக ஒலிப்பது கிராமசபைக் கூட்டம். கொரோனா பெருந்தொற்றை காரணமாகச் சொல்லிக் கடந்த ஆட்சியில் கிராம சபையை நடத்தத் தடை விதிக்கப்பட்டது. ``கிராம சபையின் அதிகாரத்தைத் தடுக்கக் கூடாது. தடையை மீறி நாங்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்துவோம்" எனக் களத்தில் குதித்து அரசியல் செய்தது தி.மு.க. ஆட்சி மாறியது.

இன்று, ஆகஸ்ட்-15. ஆட்சி மாறியபிறகு வரும் முதல் கிராமசபைக் கூட்டம். இந்த முறையாவது சபை நிச்சயம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலிருந்தார்கள் கிராம இளைஞர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும். அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. கடந்த ஆட்சியாளர்கள் சொன்ன அதே கொரோனாவைக் காரணம் காட்டி, கூட்டம் நடத்தக் கூடாது என அரசு அறிவித்து, கூட்டம் நடத்தமுடியாமல் செய்து விட்டது.

திமுக நடத்திய கிராம சபை

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள், அதன் கட்டளைகளுக்கெல்லாம் அடிபணியும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் ஒரு போதும் இருந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் தமிழ்நாடு அரசு, மாநில சுயாட்சிக்கான கோரிக்கைகளைத் திரும்பத் திரும்பப் பலவிதங்களில் வலியுறுத்தி வரும் திமுக அரசு, உள்ளாட்சிகளை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்ப்பது சரியா?

மாநில அரசு நினைத்தால், கிராமசபைக் கூட்டங்களை நடத்தலாம் அல்லது தவிர்த்து விடலாம் என்ற நிலைக்குத் தமிழக உள்ளாட்சிகள் வைக்கப்பட்டிருப்பது, மாநில சுயாட்சி பேசும் நாம் எந்த அளவுக்கு அதிகாரப்பகிர்வுக்கான அடிப்படைகளை உள்வாங்கி இருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில், உள்ளாட்சித் தேர்தல்கள் மட்டுமல்லாமல் கொரோனா பெருந்தொற்று என்ற ஒன்றை விஷயத்தைக் காரணம் காட்டி கிராமசபைக் கூட்டங்களையும் நடத்தவிடாமல் ஜனநாயகப் படுகொலை செய்தார்கள். அதற்குச் சமூக ஆர்வலர்கள், பொதுநல இயக்கங்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

`அக்டோபர் 2 - கிராமசபைகள் கிளர்ந்தெழட்டும்' என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிய ஏழு நிமிட காணொளியைப் பார்த்தவர்கள் தி.மு.க அரசு அமைந்தால் உள்ளாட்சிகளை வலுப்படுத்தியே தீரும் என்று நினைத்தார்கள். அந்த அளவுக்குக் கிராம முன்னேற்றம் குறித்து, காந்தியின் கனவுகள் பற்றியும் ஜனநாயகத்தின் தொட்டிலாக இருக்கக்கூடிய கிராமசபை பற்றியும் அதில் மக்கள் பங்கெடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஸ்டாலின் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். அது வெறும் உரை மட்டும்தானோ? என்று தற்போது எண்ணத் தோன்றுகிறது.

மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவுமூலம் கடந்த அக்டோபர்-2, 2020 கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, `அரசு என்ன அறிவித்தாலும் நாங்கள் கட்டாயமாகக் கூட்டுவோம் கிராம சபையை' என அறிவித்துத் திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் கிராம ஊராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார், ஸ்டாலின். அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது மக்கள் தாமாக முன்வந்து கிராமசபையைக் கூட்டினால் எத்தனை வழக்குகளை இந்த அரசுப் பதிவு செய்யும்?

எதிர்கட்சித் தலைவராக ஸ்டாலின் நடத்திய கிராம சபை

Also Read: எடப்பாடிக்கு வந்தா, தக்காளி சட்னி; ஸ்டாலினுக்கு வந்தா ரத்தமா?

அன்றைக்கு, எதிர்க்கட்சி தலைவராக மக்களின் மனப்போக்கைப் பதிவு செய்த ஸ்டாலின், தற்பொழுது முதல்வராக இருக்கும்போது அன்றைய அரசு செய்த அதே தவறை செய்வது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

`கிராமசபை அதிகாரங்களில் மாநில அரசு தலையிடுவது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-க்கு புறம்பானது' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்த தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டதால் இனி மாநில அரசின் தலையீடின்றி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று எண்ணியிருந்த சமூக ஆர்வலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை `மக்கள் கிராமசபை' என்ற முழக்கத்தோடு பல கிராமங்களில் நடத்திக் காட்டியது. ஊராட்சி சபை என்றும் மக்கள் கிராம சபை என்றும் வாக்கு கேட்டு மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, அதே ஊராட்சிகளையும் கிராம சபைகளையும் கேள்விக்குள்ளாக்கி இருப்பது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். அ.தி.மு.க அரசு செய்த அதே ஜனநாயகப் படுகொலையைத்தான் தற்போதைய தி.மு.க அரசும் செய்திருக்கிறது.

மாநில அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடக்கிற ஒரு அலுவல் கூட்டம் அல்ல, கிராமசபை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக கூட்டம். தங்கள் ஊராட்சி மக்களின் வேண்டுகோள், தேவையின் அடிப்படையிலும் கிராமசபையைக் கூட்டுவதற்கான அனைத்து சட்ட ரீதியான அதிகாரங்களையும் ஊராட்சித் தலைவர்கள் பெற்றிருக்கிறார்கள். இருப்பினும் தமிழகத்தைப் பொருத்தவரை ஏதோ மாவட்ட ஆட்சியரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் விரும்பினால் மட்டுமே கிராமசபைக் கூட்டம் நடத்த முடியும் என்ற தவறான மனப்போக்கு நிலவி வருகிறது.

கிராம சபை

Also Read: கிராம சபை நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்புவது எப்படி? - ஒரு வழிகாட்டல்

கடந்த ஜனவரி 26-ம் தேதி அன்று கிராமசபைக் கூட்டத்தை நடத்தக் கூடாது எனத் தடை விதித்த போதும், மாநில அரசு தலையீட்டை எதிர்த்துத் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை நிலைநிறுத்தப் பல ஊராட்சித் தலைவர்கள் முன்வந்தார்கள். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம், ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சி தலைவர் சுரேஷ் அவர்கள் முறையான அறிவிப்புகளை வழங்கி, சட்டரீதியான விதிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியுடன் கிராமசபைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அலுவலர்களும், காவல்துறையினரும் கொடுத்த அழுத்தம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது அந்தக் கூட்டம்.

தற்போது அவர், தனது சட்டரீதியான பஞ்சாயத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை உறுதிப்படுத்தச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு (WP: 7326/2021) தொடுத்துப் போராடி வருகிறார். இம்முறையும் அதே போலப் பல ஊராட்சிகள் போராட முன் வரும் என்பதில் சந்தேகமில்லை.

வெளிப்படையான நிர்வாகத்திற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ள தற்போதைய அரசு, மக்கள் நேரடியாகப் பங்கேற்று அவர்கள் ஊர் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர அனைத்து வாய்ப்புகளும் கொண்ட கிராமசபைக் கூட்டத்தை ஏன் தடுக்க வேண்டும்?

`கூட்டுக கிராமசபையை!', `கிராமசபை மீட்பு வாரம்' உள்ளிட்ட முழக்கங்களோடு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியன்று, கிராமசபை ரத்து செய்யப்பட்டதை ஒட்டித் தன்னாட்சி உள்ளிட்ட சமூக இயக்கங்கள் பசுமை விகடனோடு கரம் கோர்த்து பிரச்சாரங்களை முன்னெடுத்தன.

கிராம சபை

அரசு எடுக்கும் முடிவுகளைக் கேள்விக்கு உட்படுத்துவதே முதிர்ந்த ஜனநாயகத்தின் அடையாளமாகும். மக்களாட்சியில், மக்களே எஜமானர்கள் என்பதை தற்போதைய அரசு மறந்து விடக் கூடாது. விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தத் திட்டமிட்டுள்ள அரசு, கிராம சபைக்கு முட்டுக்கட்டை போடுவது அழகல்ல. கிராமசபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் ஆணிவேர்.

உள்ளாட்சிகளை வளர்த்தெடுக்கின்ற அரசாக இன்றைய அரசு இருக்க வேண்டுமே தவிர, அதனை நசுக்குகிற அரசாக இருந்துவிடக் கூடாது என்பது மக்களாட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களின் எதிர்பார்ப்பு.

இதே கொரோனா தொற்று காரணமாகக் கிராமசபைக்கு தடைபோட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசை விமர்சித்து, தடையை மீறிக் கடந்த கொரோனா தொற்றிலும் கூட்டம் நடத்திய ஸ்டாலின் அரசு, தற்போது அதே தடையைப் போடுவது எந்த வகையில் நியாயம்... `உங்களுக்கு வந்தால் ரத்தம்... அ.தி.மு.கவுக்கு வந்தால் தக்காளி சட்னி' என நினைப்பது எந்த வகையில் நியாயம் முதல்வரே...?

- நந்தகுமார் சிவா



source https://www.vikatan.com/news/tamilnadu/a-citizen-requests-tn-govt-to-conduct-gram-sabha-to-uphold-panchayat-raj-s-rights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக