Ad

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

'நாய் சேகர்' டைட்டில் வடிவேலுவுக்கு கிடைக்குமா... சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு மாறுமா?

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் நடிக்காமல் போனதற்கு நடிகர் வடிவேலு மீது ரெட் கார்டு போடப்பட்டது. இந்தப் படத்தில் நடித்து முடிக்காமல் வேறெந்த படத்திலும் நடிக்கக் கூடாது, அப்படி நடித்தால் குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக வழங்கிவிட்டு பிறகு நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதனால், வடிவேலுவும் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

இதற்கிடையே 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தயாரிப்பாளர் ஷங்கருக்கு லைகா நிறுவனம் 5 கோடி கொடுத்து வடிவேலுவைத் தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது. அதனால், அந்தப் பிரச்னை நீங்கி வடிவேலு மீது போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. உடனே, வடிவேலுவை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்களிடம், ''அடுத்தப் படம் லைகா நிறுவனத்துக்கு நடிக்கிறேன். சுராஜ் இயக்குகிறார், படத்திற்குப் பெயர் 'நாய் சேகர்' '' என்று கூறியிருந்தார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

வடிவேலு

இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் 'நாய் சேகர்' படத்தின் டைட்டிலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆம்! அந்தப் படத்தின் டைட்டில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜாவிடம் இருந்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சதீஷ் நாயகனாக நடிக்கும் படத்துக்கு இந்தப் பெயர்தான் வைத்திருக்கிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக 'குக்கு வித் கோமாளி' பவித்ரா லட்சுமி நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநர் கிஷோர் இந்தக் கதை ஏஜிஎஸ் நிறுவனத்திடம் அணுகும்போதே இந்தத் தலைப்போடுதான் அணுகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் நாயகனாக நடிக்கும் முதல் படம் என்பதால் அவர் மீதிருந்த நட்பில் அந்தத் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார் ஞானவேல் ராஜா. அவர்களும் இந்தத் தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். வடிவேலு நடித்து புகழ்பெற்ற பல கதாபாத்திரங்களில் 'நாய் சேகர்' முக்கியமானது. அந்த தார்மீக உரிமையில் இந்தத் தலைப்பு நமக்கு கிடைக்கும் என்று வடிவேலு நினைக்கிறார். அதே சமயம், பத்திரிகையாளரிடம் பேசும்போது ''முதலமைச்சர் ஸ்டாலின் வரவால் தமிழக மக்களுக்கு நல்ல காலம் விடிந்திருக்கிறது. அந்த மக்களுள் நானும் ஒருவன்' என்றிருக்கிறார்.

சதீஷ் - பவித்ரா லட்சுமி

அதனால், ஆளுங்கட்சி ஆதரவு வடிவேலுவுக்கு இருப்பதால் இந்தத் தலைப்பை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது லைகா நிறுவனம். ஏஜிஎஸ் நிறுவனமோ முறையாக பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதனால், நம்மிடம்தான் தலைப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. ஆக, 'நாய் சேகர்' என்ற தலைப்பு வடிவேலுவுக்கா சதீஷுக்கா என்பது பொறுத்திருந்து பார்ப்போம். வடிவேலுவின் ரீ என்ட்ரி அதிரடியாகவே இருக்கிறது!



source https://cinema.vikatan.com/tamil-cinema/will-vadivelu-get-naai-sekar-title-for-his-relaunch-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக