இரண்டாவது இன்னிங்ஸில் இன்னமும் நான்கு விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள இந்தியா, 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தரவாதமற்ற ஓப்பனிங்
முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் குவித்த ரோஹித் - ராகுல் கூட்டணியை இம்முறை பத்து ஓவரில் பிரித்தது இங்கிலாந்து. உபயம்: மார்க் உட். வேகத்தை மட்டுமே நம்பாமல், வீசிய முதல் இரண்டு ஓவர்களில், ராகுலுக்கு வெல்வேறு லெந்த்தில் பந்துகளை வீசியதால் அவர் குழம்பினார். பேக் ஆஃப் லெந்த்தில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு சற்றே வெளியே வீசப்பட்ட பந்தை ஃப்ரன்ட் ஃபுட்டில் ஆட ராகுல் முயல, பந்து அவுட்சைட் எட்ஜாகி கீப்பர் கேட்ச் ஆனது.
அடுத்ததாக, மூன்று ஷார்ட் பால்களே ரோஹித்தை வழியனுப்ப மார்க் உட்டுக்குப் போதுமானதாக இருந்தது. ரோஹித்தின் பலமான புல் ஷாட்தானே, அவரது பலவீனமும்! முதல் ஷார்ட் பால் சிக்ஸராக, இரண்டாவது டாட் பால் ஆக, மூன்றாவது ஷார்ட் பாலிலும் புல் ஷாட் ஆட முயன்று தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் ரோஹித். இத்தொடரில், புல் ஷாட் ஆட முயன்று அவர் ஆட்டமிழப்பது இது இரண்டாவது முறை.
ஆண்டர்சனின் நீண்ட ஸ்பெல்
முந்தையநாள் ஆட்டத்தில் பும்ராவுடனான பவுன்சர் பஞ்சாயத்துக்கான பழிதீர்ப்புப் படலமாக, தனது முதல் ஸ்பெல்லில் ஆக்ரோஷத்துடன் தொடர்ச்சியாக ஒன்பது ஓவர்கள் ஆண்டர்சன் பந்து வீசினார். 39 என்பதெல்லாம் ஆண்டர்சன் விஷயத்தில் வயதாக இல்லாமல் வெறும் எண்ணாக மட்டுமே இருந்து வருகிறது. கூடவே, நடுநடுவே அவருக்கும் கோலிக்குமான சின்னச் சின்ன வார்த்தைப் பரிமாற்றங்களும், உரசல்களும் 2014, 2018-ஆம் ஆண்டுகளைக் கண்முன் ஓட்டிக் காட்டின.
புஜாரா திணறல்
ஃபார்ம் அவுட் ஆகி விட்டார், அவரது அணுகுமுறைதான் இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கான வேகத்தடை, அவருக்கான மாற்று வீரரைத் தேட முயலுங்கள் எனப் பல விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் புஜாரா இருந்தார். இப்போட்டியிலும், அவரது தொடக்கம் தடுமாற்றத்தோடே இருந்தது. 35 பந்துகளில் அவர் தனது முதல் ரன்னை எடுக்க, கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் போட்டியில் அந்தத் தருணத்தில் அவரிடமிருந்து அந்த டிபென்சிவ் கிரிக்கெட்தான் எதிர்பார்க்கப்பட்டது.
கோலியின் டேஞ்சர் ஜோன்
கோலியின் தொடக்கம் மிகச் சிறப்பாகவே இருந்தது. அவரடித்த அந்த இரண்டு கவர் டிரைவ்கள் எல்லாம் அவ்வளவு ரம்மியமாக இருந்தது. ஆனால், கோலியின் விக்கெட்டை வாங்க விதைக்கப்பட்ட விதைகளே அவைதான். கோலியைக் காலி செய்த அந்தப் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு மைல்களுக்கு அப்பால் சாம் கரண் வீசினார். அதையும், "என் பேட்டில் படாமல் போவதெப்படி?!" என வேண்டி விரும்பி கோலி தொட, அது கீப்பர் கேட்சானது. இத்தொடரில், இதுவரை ஆட்டமிழந்த மூன்று முறையுமே அவர் அடித்த பந்துகள் கீப்பர் கேட்சாகவோ, ஸ்லிப் கேட்சாகவோதான் மாறி இருக்கிறது. ஒரு பெரிய இன்னிங்ஸை அவரிடமிருந்து எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
ஓங்கிய இங்கிலாந்தின் கை!
ஆண்டர்சன்தான் ஆதிக்கம் செலுத்துவார் என நினைத்தால், மார்க் உட்தான், மரணபயம் காட்டினார். களம் கருணை காட்டவில்லைதான். ஆனால், இந்திய வீரர்களே மனமுவந்து மூன்று விக்கெட்டுகளைப் பலி கொடுக்க, இங்கிலாந்து முதல் செஷனை முழுமையாகக் கைப்பற்றியது. இதற்குப் பின், ஃபார்மில் இல்லாத மிடில் ஆர்டர், கணிக்க முடியாத பண்ட், ஏமாற்றும் டெய்ல் எண்ட் இவ்வளவுதான் என்பதால் இங்கிலாந்தின் வாய்ப்பு அத்தருணத்தில் பிரகாசமாகவே இருந்தது.
விஷம் தோய்த்த ஷார்ட் பால்கள்
விக்கெட்டை விடாது புஜாரா - ரஹானே நங்கூரமாக நின்றுவிட, புஜாராவினை மார்க் உட்டைக் கொண்டு அட்டாக் செய்ய வைத்தது இங்கிலாந்து. பந்து ஸ்விங் ஆகாத போது விக்கெட்டை வீழ்த்த, அதுதான் அவர்களது ஆயுதமாக இருந்தது. முந்தைய நாள் நடந்தேறிய பும்ரா - ஆண்டர்சன் ஷார்ட் பால் யுத்தத்தை இது நினைவூட்டியது. ஆனால், அதை எல்லாம் ஆஸ்திரேலியாவிலேயே பார்த்துவிட்ட புஜாரா, இதையும் அழகாகவே சமாளித்தார். ரஹானே கூட உணர்ச்சிவசப்பட்டு புல் ஷாட் ஆடினார். புஜாரா அடித்த முதல் பவுண்டரி கூட, அவர் சந்தித்த 118-வது பந்தில்தான் வந்தது.
வெடித்த சர்ச்சை
ஆட்டத்தின் நடுவே, இங்கிலாந்து வீரர்கள் ஷூ அணிந்த காலோடு பந்தினை மிதிப்பது போன்ற ஒரு காட்சிப் பதிவு காட்டப்பட, ஒருவேளை அவர்கள் பந்தைச் சேதப்படுத்தவே அப்படிச் செய்தார்களா என்ற விவாதம் கிளம்பியது. அடுத்த சில நிமிடங்களில் ட்விட்டரில் முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ராவில் தொடங்கி சேவாக் வரை, எல்லோரும் "இது பால் டேம்பரிங்கா?!" எனக் கேள்வி எழுப்பினர். ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட பலர் இங்கிலாந்துக்கு ஆதரவாகக் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால், இந்திய பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர், "அது வேண்டுமென்றே செய்யப்பட்டது போல் தெரியவில்லை" எனச் சொல்லி, சர்ச்சைகளுக்கு மூடுவிழா நடத்தினார்.
விக்கெட்டுமில்லை, ரன்களுமில்லை!
இந்திய இணை டிபென்சிவ் கிரிக்கெட் ஆடியதுதான் என்றாலும், ஸ்லோ பிட்சின் கைங்கரியமும்தான் அது. இருபக்கத்துக்கும் உதவாமல், அது ஸ்லோ பிட்சாக வேலையைக் காட்ட, இரண்டாவது செஷனில் இந்தியா விக்கெட்டை இழக்காமல் தாக்குப் பிடித்தது. என்றாலும் 28 ஓவர்களில் வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்று விக்கெட்டுகளை இழந்த முதல் செஷனுக்கு இது சாலச் சிறந்ததாகவே பார்க்கப்பட்டது.
புஜாரா - ரஹானே பார்ட்னர்ஷிப்
தங்கள்மீது வீசப்பட்ட எல்லா விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளனர் இவ்விருவரும். இவர்கள் களமிறங்கிய போது, 'வாழ்வா சாவா?' என்ற கட்டத்தில் போட்டி மட்டுமல்ல இவர்களும்தான் இருந்தனர். தொடர் தோல்வி துரத்த பதிலுக்கு ஒரு பெரிய இன்னிங்ஸ் மட்டுமே என மனதில் நிறுத்தி மிக நிதானமாக, அதே சமயம் உறுதியாக, தங்களது பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்திருந்தனர். டிபென்ட் செய்யும் சமயத்தில் பேட்டை ஸ்ட்ரெய்டாக வைத்து, பந்து எட்ஜாக அதிக வாய்ப்பளிப்பது பல காலமாக புஜாரா செய்யும் தவறுதான். அதே போல் ரன்அவுட் ஆகிய தீருவேன் என்பது போல், பந்து போகும் தொலைவைக் கவனிக்காது, அடித்தவுடன் ஓடுவதும் ரஹானேயின் குறைபாடுதான்.
இவை இரண்டுமே இந்த இன்னிங்ஸிலும் காணப்பட்டதுதான். இருப்பினும், அதையும் மீறிய பொறுப்புணர்வும், பொறுமையும் இருவரிடமும் இருந்தது. அதுதான் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்குக் காரணமாக இருந்தது. இதற்கு முன்னதாக 100+ பார்ட்னர்ஷிப்பை இவர்கள் நான்கு சந்தர்ப்பங்களில் கட்டமைத்திருந்தாலும், துணைக் கண்டத்திற்கு வெளியே அது நடந்தேறி இருப்பது இதுவே முதல்முறை. இந்த நூறு ரன்கள் எடுப்பதற்குக் கிட்டத்தட்ட 50 ஓவர்கள் அவர்கள் எடுத்துக் கொண்டது ஒருதரப்பால் தவறான அணுகுமுறையாகப் பார்க்கப்பட்டாலும், இந்த பார்ட்னர்ஷிப் இல்லாவிட்டால் போட்டி, நாலாவது நாளிலேயே முடிந்திருக்கலாம் என்பதே நிதர்சனம். இதே கூட்டணி, மூன்றாவது செஷனில் தேவையை உணர்ந்து அட்டாக்கிங் மோடுக்கு மாறவே செய்திருந்தது.
சுழல் சூத்திரம்
புஜாரா விக்கெட்டை எடுத்து மறுபடியும் ஒரு பிரேக் த்ரூவை மார்க் உட் நிகழ்த்தி இருந்தாலும், களத்தின் நிலை அறிந்து மொயின் அலியை வீச வைத்ததுடன், தானும் இன்னொரு முனையில் தாக்குதலைத் தொடர்ந்தார் ரூட். அதுதான், ரஹானே மற்றும் ஜடேஜா ஆட்டமிழக்கக் காரணமாக இருந்து, போட்டியின் லகானை மீண்டும் இங்கிலாந்தின் கையில் மாற்றியது. ஜடேஜாவின் ஆஃப் ஸ்டம்ப்பைக் கழற வைக்க மொயின் அலி வீசியதெல்லாம், இந்த இன்னிங்ஸின் ஆகச் சிறந்த பந்துகளில் ஒன்று.
Also Read: ஒலிம்பிக் நவரசா!
ஒளியேற்ற வந்த இருள்
புதுப் பந்து எடுக்க வேண்டிய சமயத்தில், போதிய வெளிச்சமின்மையால், நான்காவது நாள் ஆட்டத்தைக் கைவிட வேண்டிய நிலை வர, மேலும் இரண்டு ஓவர்களை ஸ்பின்னர்கள் மூலமாக வீசி, விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து முயன்றது. இறுதியில் வெளிச்சமின்மையால் இஷாந்த் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்தையும், பயத்தோடே பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவிற்கு சற்றே சாதகமாக எட்டு ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே அன்றைய நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. நாளின் முடிவில் 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.
இறுதி நாளில் என்ன நேரலாம்?
மூன்று முடிவுகளுக்குமே வாய்ப்புகள் உள்ளன.
* பண்ட்டைக் கொண்டு, அதிரடியாக ரன் சேர்த்து, 220 என்ற அளவில் இலக்கை நிர்ணயித்தால், இந்தியா வெல்ல வாய்ப்புகள் உள்ளன.
** இங்கிலாந்து முதல் ஒரு மணி நேரத்திற்குள் மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்தி, 180 ரன்கள் முன்னிலைக்குள் இந்தியாவைச் சுருட்டிவிட்டால், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.
*** இவை இரண்டுமே நடந்தேறாமல் போட்டி டிராவிலும் முடிவடையலாம். ஏனெனில், இன்னமும் இந்தியா சேஃப் ஜோனுக்குள் முழுவதுமாக நுழைந்து விடாததால், துணிந்து அடித்தாட கண்டிப்பாகத் தயங்கும். இங்கிலாந்தும், நிலைத்தன்மை இல்லாத தனது பேட்டிங் லைன் அப்பை மனதில் வைத்து, தற்காப்பு ஆட்டத்தையே முதலில் சிறிது நேரம் கையிலெடுக்கும்.
மொத்தத்தில், செஷனுக்கு செஷன் விறுவிறுப்பும், திருப்பங்களும் நிறைந்ததாகத்தான் ஐந்தாவது நாள் ஆட்டம் இருக்கப் போகிறது.
டி20 போட்டிகள் உடனே புரிந்து போகும், முடிந்து போகும், ஹைக்கூ கவிதைகள் என்றால், வார்த்தைக்கு வார்த்தை, நூறு அர்த்தங்களை ஒளித்து வைத்திருக்கும் மரபுக் கவிதைகள்தான் டெஸ்ட் பார்மெட். இறுதி நாளில் இது கட்டவிழ்க்கப் போகும் ஆச்சர்யங்கள் என்னென்ன, கற்றது தரப் போகும் பாடங்கள் என்னென்ன, பொறுத்திருந்து பார்ப்போம்!
source https://sports.vikatan.com/cricket/england-vs-india-pujara-rahane-solid-stand-helps-india-to-lead
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக