Ad

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

TNPL: ஜெகதீசன் அதிரடி, சாய் கிஷோர் மிரட்டல் பந்துவீச்சு - சேப்பாக் 3வது முறையாக சாம்பியனானது எப்படி?

ஐந்தாவது சீசனில், தங்களுடைய மூன்றாவது கோப்பையை, அதுவும், தொடர்ச்சியாக தங்களுடைய இரண்டாவது கோப்பையை வென்றுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தாங்கள் டிஎன்பிஎல்லுக்குள் ஒரு மும்பை இந்தியன்ஸ் என மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியுள்ளனர்.

திருச்சி வாரியர்ஸ்தான், சேப்பாக் சூப்பர் கில்லீஸோடு இறுதிப் போட்டியில் பலப்பரிட்சை செய்யப் போகிறது என்றதும், பலரும் கணித்தது இந்த முறையாவது ஒரு புதிய அணி கோப்பையைத் தூக்கலாம் என்று. அந்த எண்ணத்திற்கு வலுசேர்த்தது, இறுதிப் போட்டிக்கு முந்தைய அவர்களது கடந்த இரு போட்டிகளும்! அந்த இரு போட்டிகளிலுமே சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி இருந்தது திருச்சி. நடப்புச் சாம்பியன்களுக்கே செக் வைத்தது என்பதால் திருச்சியின் பக்கம் சற்றே அதிக வலு கொண்டதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், ஹாட்ரிக் வெற்றி வாய்ப்போடு கோப்பையையும் கோட்டைவிட்டது திருச்சி வாரியர்ஸ்.

TNPL | #RTWvCSG

டாஸ் கை கொடுக்க ராகில் சேஸிங் என்றார். இருபக்கமும் எந்த மாற்றமும் இன்றி களமிறங்கின. கௌசிக் காந்தியோடு, ஜெகதீசன் ஓப்பனிங் இறங்கினார். இந்த இணை ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும், இந்தப் பிட்சில் 170-க்குக் குறைவான எதுவும் விரட்டி எடுக்கத்தக்கதே என்று புரிந்து வைத்திருந்ததால், எல்லாப் பந்துகளையும் அடித்து நொறுக்கியது. ரன் ரேட், வெப்பத்தைச் சுவாசித்த தெர்மா மீட்டர் குறியீடாக உச்சத்திலேயேதான் இருந்தது. 10-ஐ விட்டு இறங்குவதாக இல்லை. பவர்பிளே ஓவரின் முடிவு, 58 என அலற வைத்தாலும், அந்த ஓவரின் கடைசிப் பந்து கௌசிக் காந்தியின் விக்கெட்டோடு முடிந்து திருச்சி வாரியர்ஸின் வயிற்றில் பாலை வார்த்தது.

எனினும், அவர்களால் ஜெகதீசனின் விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை. திருச்சி போட்டியைத் தவறவிட்டதும் இந்தக் காரணத்தினால்தான். கௌசிக் காந்தி ஆட்டமிழந்த போதுகூட, ஜெகதீசனின் ஸ்ட்ரைக் ரேட், திருச்சியை அஞ்சத் செய்வதாக இல்லை. நடுவில் வந்த ராதாகிருஷ்ணன் தேவையில்லாத ஷாட்டால் வெளியேற அவருக்குப் பதிலாக, சசிதேவ் வந்திருந்தார். ஆனால், அது எதுவுமே பாதிக்காத வகையில், ஓப்பனருக்கான அச்சில் வார்த்தெடுத்தவர் என்பதனை மறுபடியும் நிருபித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதற்குப் பின்தான் தறிகெட்ட வேகத்தில் ஓடத் தொடங்கியது ஜெகதீசன் எக்ஸ்பிரஸ்.

12-வது ஓவரிலேயே 94 ரன்களைக் குவித்துவிட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ், எட்டு ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் 200 ரன்களை இலகுவாகவே எட்டிவிடும் என்பதை அப்போதே கணிக்க முடிந்தது. ஆனால், திருச்சியும் விக்கெட் எடுப்பதற்குரிய வழிகளை ராகில் தலைமையில் வகுத்துக் கொண்டேதான் இருந்தது. அந்தத் தடைகள் எல்லாம் மற்ற வீரர்களுக்கு எதிராக முடிந்ததே ஒழிய, ஜெகதீசனை அசைக்கக் கூட முடியவில்லை. அதுவும் அரைசதம் கடந்த பின்பு, தனது ஆட்டத்தின் காட்டத்தை இன்னமும் அவர் அதிகரிக்க, திருச்சிக்கான இலக்கு எட்டக் கடினமானதாக மாறிக் கொண்டிருந்தது. திருச்சியின் பிளான் பி, பிளான் சி எல்லாவற்றையும் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்கு வெளியே வழிதவறிய செயற்கைக் கோளைப் போல், அந்தகாரத்தில் அலையவிட்டார் ஜெகதீசன்.

TNPL | #RTWvCSG

சரி விக்கெட்தான் விழவில்லை, ரன்களையாவது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம் எனத் திருச்சி முயல, இடையில் ஒருசில ஓவர்கள், டைட்டான லைன் மற்றும் லெந்த்தில் பந்துகள் வீசப்பட்டு, அதற்குரிய பரிசாக ரன்ரேட்டை சற்றே குறைய வைத்தனர்.

கோப்பைக்கான யுத்தமல்லவா? சேப்பாக் சாம்பியன் என்பதை ஓவருக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருந்தது. விட்டதை சேர்த்துப் பிடிக்கத் தொடங்கியது. டெத் ஓவர்களில் திருச்சிக்கான டெத் எண்டைக் காட்டியது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 45 ரன்களைக் குவித்து, இலக்கை 184-க்கு எடுத்துச் சென்றுவிட்டனர். பொய்யா மொழி மற்றும் சரவணக் குமார் வீசிய அந்த இரண்டு ஓவர்கள்தான், ரன் மழை பொழிய வைத்து சேப்பாக்கினை வெற்றியை நோக்கி நகர்த்தின.

TNPL | #RTWvCSG

பவர்பிளே ஓவர்களும், டெத் ஓவர்களும்தான் சேப்பாக்கை அதிகமாக ஸ்கோர் செய்ய வைத்திருந்தன. ராகில் தனது சுழலில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததற்காக ஆறுதல்பட்டுக் கொண்டாலும், ராகிலின் சுழல் கத்தியான மதிவண்ணனின் பந்துவீச்சு எடுபடாமல் போனதுதான் அவர்களுக்குப் பெரிய பின்னடைவானது.

184 என்பது கடினமான காரியம்தான். ஆனால், சிறந்த பேட்ஸ்மேன்களின் அணிவகுப்பான திருச்சி வாரியர்ஸ், அதை நிகழ்த்தும் என்றே நம்பப்பட்டது. ஆனாலும், 183 ரன்கள் என்னும் மேஜிக் நம்பரின் வரலாறு திருச்சி ரசிகர்களுக்கு சற்றே திகிலூட்டியது.
TNPL | #RTWvCSG

திருச்சியின் தொடக்கம் அதிரடியாகத்தான் தொடங்கியது, தனது அறிமுகப் போட்டியான லீக் சுற்றின் முதல் போட்டியிலேயே அசத்திய அமித் ஷாத்விக்கோ, இதுதான் ஏதோ தன்னை நிருபித்துக் கொள்ள கிடைத்த கடைசி வாய்ப்புப் போல ஆடி, 16 பந்துகளில் 36 ரன்களைக் குவித்துவிட்டார். எட்ட வேண்டிய இலக்கு பெரிதென்பதாலும், இவ்வளவு அதிக ரன்களை அவர்கள் இந்த சீசனில் சேஸ் செய்து பழக்கம் இல்லை என்பதாலும், அதைக் கையாள்வதில் அவர்களிடம் அனுபவப் பாடம் இல்லை, அவசரகதியில் எதையுமே நின்று யோசிக்க அவர்களிடம் நேரமும் இல்லை. குட் லெந்த்தில் வீசப்படும் பந்தா, ஆஃப் சைடுக்கு வெளியே நகர்கிறதா, எந்தளவு டர்ன் ஆகிறது என்ற எதையும் ஆராய முடியாது அனைவருமே ரிசப் பண்ட்டாக மாறி, அன்ஆர்தடாக்ஸ் ஷாட்களால் ரன்களைக் குவிக்க வேண்டிய அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டது. இதனால் விக்கெட்டுகள் சீரிய இடைவேளையில் விழ, அதுவே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

ஓப்பனர்களைக் குறை சொல்ல முடியாத அளவு, பவர்பிளேயை பக்குவமாகத்தான் அவர்கள் கையாண்டிருந்தனர். அடுத்தடுத்த இரண்டு ஓப்பனர்களையும் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே இழந்து விட்டாலும், 65 ரன்களைச் சேர்த்து திருச்சிக்குத் தேவையான வலுவான அடித்தளத்தை அவர்கள் அமைத்துக் கொடுத்துவிட்டார்கள். எனினும் அதிகமான அட்டாக்கிங் கிரிக்கெட், அவர்களுக்கே வினையாகி அதற்கு இரண்டு விக்கெட்டுகள் பலியாகின.

TNPL | #RTWvCSG

தனது வழக்கமான அதே அதிரடி ஸ்டைலில்தான் நிதீஷ் ஆடினார் என்றாலும், அவராலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சேப்பாக் பந்து வீச்சு, சாம்பியன்களுக்குரிய சர்வ லட்சணம் பொருந்தியதாக இருந்தது. அடுத்த நான்கு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை திருச்சி இழக்க, இறுதியில் 36 பந்துகளில், 76 ரன்கள் வேண்டும் என்று எங்கேயோ போய்விட்டது இலக்கு. இந்த நான்கு விக்கெட்டுகளில் ஆதித்ய கணேஷ், நிதீஷ், மொகம்மத் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளும் அடக்கம்.

Also Read: ENG v IND: மிரட்டிய மார்க் வுட், நங்கூரமிட்ட புஜாரா - ரஹானே... இன்று பண்ட்டின் அதிரடி கைகொடுக்குமா?

இந்தச் சமயத்தில்தான் சரவணக் குமாரும், மதிவண்ணனும் இணைந்தனர். எல்லாம் முடிந்தது, வெற்றி ஏற்கெனவே நம் கூடாரத்துக்குள் வந்து அமர்ந்துவிட்டது என்று நினைத்த சேப்பாக்கின் கண்களில் சிறிது நேரம், மரண பீதியைக் காட்டிவிட்டது இக்கூட்டணி. அடுத்த 26 பந்துகளும் அடி வாங்கி பலமுறை பவுண்டரி லைனிடம் அடைக்கலம் புகுந்தன. 26 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 'கேம் இஸ் ஆன்' என்று சொல்ல வைத்தது திருச்சியின் இக்கூட்டணி. வாரியர்ஸ் அல்லவா? விடாது போராடினர். ஆனால், மதிவண்ணனை க்ளீன் போல்டாக்கிய ஹரீஷ், இன்னமும் இருளடைந்த இக்கட்டில் திருச்சியை ஆழ்த்தினார். அதுதான், திருச்சிக்கு எல்லாமே முடிந்து போன தருணம். ஆனாலும், சரவணக் குமார் நம்பிக்கை இழக்காது, அற்புதமாக ஆடிக் கொண்டிருந்தார். தான் ஒரு ஆகச் சிறந்த ஆல் ரவுண்டர் என்பதற்கு பொருளுரை எழுதிக் கொண்டிருந்தார்.

TNPL | #RTWvCSG

இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை வர, தனது அற்புதமான பந்து வீச்சால், அந்த ரன்களையும் டிபென்ட் செய்தார் சாய் கிஷோர். 25 பந்துகளில், 45 ரன்களைக் குவித்த சரவணக் குமாரின் கேமியோ, வீணானது மட்டுமே மிச்சமென, எட்டு ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையைத் தூக்கியது சேப்பாக்.

அமித் ஷாத்விக்கும், சரவணக்குமாரும் அற்புதமாக ஆடி இருந்தாலும், மற்ற வீரர்களின் பங்களிப்பு அந்தளவு இல்லாததால் தோல்வியைத் தழுவியது திருச்சி வாரியர்ஸ். எனினும், வலிமை குறைந்ததாக தொடக்கத்தில் கருதப்பட்ட திருச்சி வாரியர்ஸ், இறுதிவரை போராடி தன்னை நிருபித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸின் பாசறையில் ஓய்வெடுத்த ஜெகதீசனும் சாய் கிஷோரும், முக்கிய ஆயுதங்களாக தக்க சமயத்தில் உருமாறி, சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு இன்னொரு கோப்பையை வென்று தந்துள்ளனர்.


source https://sports.vikatan.com/cricket/tnpl-chepauk-super-gillies-beat-trichy-warriors-to-became-the-champions-for-the-third-time

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக