Ad

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

`தாலிபன்கள் வசமான ஆப்கன்.. வெளியேறிய அதிபர் கனி; நாட்டின் பெயர் மாற்றம்?’ - தற்போதைய நிலை என்ன?

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தாலிபன்களுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிலிருந்து திரும்பப்பெற்றதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ஆப்கனின் முக்கிய நகரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றி வந்த தாலிபன்கள் நேற்றைய தினம் அந்நாட்டின் தலைநகர் காபூல் மற்றும் அதிபர் மாளிகையை அரசிடமிருந்து கைப்பற்றினர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தற்போது முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றிருக்கிறது.

தாலிபன்கள்

முன்னதாக, நங்கர்ஹார் மற்றும் ஜலாலாபாத் உள்ளிட்ட பெரு நகரங்களைக் கைப்பற்றியிருந்த தாலிபன்கள் நேற்றைய தினம் தலைநகர் காபூலை அதன் நாலா திசைகளிலிருந்தும் முற்றுகையிட்டனர். தாலிபன்களின் படை பலத்திற்கு முன்பு எடுபடாத ஆப்கானிஸ்தான் ராணுவம் அந்நாட்டின் தலைநகர் மற்றும் அதிபர் மாளிகையைக் கூட தக்கவைத்துக் கொள்ளவில்லை. நேற்று மதியமே காபூலின் முக்கிய நகரங்கள் பலவற்றைத் தாலிபன்கள் கைப்பற்றி விட்ட நிலையில், நேற்று மாலை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அவசர அவசரமாக காபூலிலிருந்து விமானம் மூலம் பறந்து விட்டார். அவர் தஜிகிஸ்தான் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது

ஆப்கானிஸ்தான்

ஆப்கன் முழுமையாகத் தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர்பயத்தின் காரணமாக அங்கிருந்து வெளியேறும் முயற்சியில் காபூல் விமான நிலையத்தில் இரவு பகலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே போல், இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் அதன் தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை அங்கிருந்து அவரவர் தாயகம் அழைத்து வரத் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

Also Read: தாலிபன்- ஆப்கன் மோதல்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!

ஆப்கான் தலைநகர் காபூல்

ஆப்கான் முழுமையாகத் தாலிபன்கள் வசம் சென்று விட்டதை அடுத்து, நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் தலைவர்கள் தாலிபன்களைச் சந்தித்து அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தாலிபன்கள், தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா மற்றும் ஹிஸ்ப்-இ-இஸ்லாமியன் தலைவர் குல்புதீன் ஹேக்மத்யார் ஆகியோர் தலைமையில் அதிகார பரிமாற்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அமைப்பிற்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எந்த வகையிலும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும் உறுதி அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான்

இது தொடர்பாக, தாலிபன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும், தாங்கள் சர்வதேச நாடுகளுடன் அமைதியான முறையில் நல்ல பந்தத்தைத் தொடர விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். காபூல் விமான நிலையம் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்ட போதிலும், அவசரக்கால விமானச் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அடுத்த இரண்டு நாள்களில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை ஆப்கனில் 6000 -ஆக அதிகரிக்கும் என்றும், அந்த படைகள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றி பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் என்று கூறியிருக்கிறது.

Also Read: `சுற்றிவளைக்கப்பட்ட தலைநகர் காபூல்.. திணறும் ராணுவம்!' - தாலிபன்கள் வசமாகிறதா ஆப்கானிஸ்தான்?

முழுமையான இஸ்லாமிய அரசாங்கத்தை ஆப்கனில் அமைக்கத் தாலிபன்கள் தீவிரம் காட்டி வரும் வேளையில், இந்த இக்கட்டான சூழலில் அந்நாட்டின் அதிபராக அஷ்ரப் கனி மக்கள் உயிர் காக்க நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாமல் முண்டியடித்துக் கொண்டு வெளியேறி இருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கன் மக்கள் பலரும் அஷ்ரப் கனியைக் கோழை என்று கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தாலிபன்கள் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்று அறிவித்து விட்ட போதிலும், கையில் துப்பாக்கியுடனும், கத்திகளுடனும் ஆக்ரோஷமாக ஆப்கனின் சாலைகளில் திரியும் அவர்களைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஆப்கன் ராணுவத்தினர் தாலிபன்கள் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

வங்கிகளில் காத்துக்கிடக்கும் பொதுமக்கள்
அஷ்ரப் கனி

காப்பாற்ற வேண்டிய அரசு தங்களைக் கைவிட்டு விட்ட நிலையில், நிர்கதியான நிலையில் தாலிபன்களால் எந்த நேரமும் தங்களுக்கு எதுவும் நேரலாம் என்று பொதுமக்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியில் 100-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றம்சாட்டி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

யாரையும் கொல்ல மாட்டோம், மக்கள் தங்களது உடைமைகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஷாஹீன் நேற்று மாலை செய்தி ஊடகங்களிடம் உத்தரவாதம் அளித்திருந்தார். இருப்பினும், தலைநகர் காபூல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் பொதுமக்கள் தாலிபன்களுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

அதே போல், ஆயிரக்கணக்கான மக்கள் வங்கிகளில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஆப்கானிலிருந்து வெளியேற முனைப்புக் காட்டி வருகின்றனர். ஆனால், தாலிபன்கள் பொதுமக்களிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், அமைதியான முறையிலேயே நகரங்களைக் கைப்பற்றியிருப்பதாக ஆப்கனின் உள்ளூர் ஊடகங்கள் பலவும் தெரிவித்து வருகின்றன.

அரசின் வசமிருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாகத் தாலிபன்கள் கைக்குச் சென்று விட்டதை அடுத்து, ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க ரஷ்யா அவசர கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பலவும் ஆப்கனில் இயங்கி வரும் தங்கள் தூதரகங்களை மூடிவிட்ட நிலையில், தாலிபன்கள் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்திருப்பதால் ரஷ்யா தனது தூதரகத்தை மூடப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

காபூல் விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் மக்கள்

தாலிபன்கள் குறித்த அச்சத்தில் பொதுமக்கள் இருப்பினும், கடந்த சில தினங்களில் தாலிபன்களால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்கா தனது படைகளை மீண்டும் அதிகப்படுத்தும் போது இருதரப்பு மோதல்கள் ஏற்படலாம் என்று அனைவராலும் அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் பதற்ற நிலை நிலவிவருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/taliban-take-over-afghanistan-whats-happening-there

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக