வலிப்பு (Fits) போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
- சத்தியராகவன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.
``வலிப்பு என்பது பல காரணங்களால் வரலாம். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அதற்கான காரணங்கள் வித்தியாசப்படும். உங்கள் கேள்வியில் எந்த வயதுக்காரர் பற்றி கேட்கிறீர்கள் என்ற தகவல் இல்லை. பெரியவர்களுக்கு என்றே வைத்துக்கொண்டால், முதலில் அவர்களுக்கு வலிப்பு வருவதற்கான காரணம் தெரிய வேண்டும். உதாரணத்துக்கு சிலருக்கு மூளையிலிருந்து வரும் அதிர்வு மாற்றங்களால் வலிப்பு வரலாம்.
Also Read: கால் நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா பிரச்னை... ஏன், எதற்கு, எப்படி? #SciaticaAlert
சிலருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்தாலோ, மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் போகாமலிருந்தாலோ, கீழே விழுந்து அடிபட்டதாலோ அல்லது மூளையிலிருந்து பரிமாறப்படும் சிக்னல்களில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாகவோ வலிப்பு வர வாய்ப்புகள் உண்டு.
எனவே எந்தக் காரணத்துக்காக வலிப்பு வருகிறது என்பதை நரம்பியல் மருத்துவரை அணுகித் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப அவரது அறிவுரையின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. பல வருடங்களாக வலிப்பு பாதிப்பிலிருப்போர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தவறில்லை.
Also Read: Covid Questions: `குலியன் பாரி சிண்ட்ரோம்' பாதிப்பு இருந்தது; நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
ஆனால் அது சமீபத்தில்தான் வந்திருக்கிறது, இப்போதுதான் சிகிச்சையை ஆரம்பித்திருக்கிறார்கள் எனும் பட்சத்தில் வலிப்புக்கான காரணம் அறிந்து, மருத்துவ ஆலோசனையின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் பாதுகாப்பானது. மற்றபடி பல வருட வலிப்பு நோயாளிகளும் சரி, இப்போது வலிப்பே வருவதில்லை என்பவர்களும் சரி, பயப்படாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-people-suffering-from-fits-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக